Published : 31 Mar 2016 11:40 AM
Last Updated : 31 Mar 2016 11:40 AM
புகழ்பெற்ற மேற்கத்திய இசை மேதை
உலகப் புகழ்பெற்ற மேற்கத்திய இசை மேதை ஜோசஃப் ஹேடன் (Joseph Haydn) பிறந்த தினம் இன்று (மார்ச் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஆஸ்திரியா நாட்டில் ரோரவ் என்ற கிராமத்தில் பிறந்தார் (1732). கடுமையான உழைப்பாளிகளான இவரது பெற்றோர் ஊர் மக்களுடன் தங்களது களைப்பைப் போக்கிக் கொள்ள இணைந்து பாடுவர்.
# ஹேடனுக்கு 5 வயதானபோது உறவினர் ஒருவர் தனது இசைப் பள்ளியில் இவரை சேர்த்துக் கொண்டார். அங்கு வயலினும் கீ போர்டும் வாசிக்கப் பயிற்சி பெற்றார்.
# இவர் இசை பயின்று வந்த பள்ளிக்கு வந்திருந்த பிரபல இசை இயக்குனர் ராய்டர் இவரது திறனைக் கண்டு பாராட்டியதோடு ஒரு தேவாலயத்தில் இசையமைப்பாளராக பணியிலும் அமர்த்தினார். விடலைப் பருவத்தில் இவரது குரல் மாறுபட்டதைக் காரணம் காட்டி தேவாலயப் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
# தங்குவதற்கு இடமின்றி வியன்னா நகரப் பூங்காக்களில் இரவைக் கழித்தார். தானாகவே இசையமைத்து வியன்னா நகரின் தெருக்களில் பாடி வருமானம் ஈட்டினார். பிறருக்கு கற்றுக்கொடுத்தார். தானும் மேற்கொண்டு இசை பயின்றார். தொடர்ந்து பத்து வருடங்கள் ஃபிரீலான்ஸ் இசைக் கலைஞராக வியன்னா நகர் முழுவதும் பாடி வந்தார்.
# இவரது இனிய, எளிய இசை பாடும் முறை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அரசவைகள், இசை மன்றங்கள், தேவாலயங்கள் என எல்லா இடங்களிலிருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. இவரது புகழ் எங்கும் பரவியது. 1761-ம் ஆண்டு அரசவை இசைக் கலைஞராக நியமிக்கப்பட்டார்.
# ஒருமுறை இவரது இசையால் மயங்கி உறங்கிவிட்ட இளவரசரை எழுப்ப, தன் இசையில் எதிர்பாராத மாற்றத்தைக் கொண்டு வந்தார். உடனே எழுந்த இளவரசர் தொடர்ந்து இசையை ரசித்தாராம்.
# இவ்வாறு தான் கொண்டு வந்த மாற்றத்திற்கு சர்ப்ரைஸ் சிம்பொனி எனப் பெயரும் இட்டார். இவரது கடும் உழைப்பால் இசைக் கலையே உன்னத நிலையை எட்டியது. முப்பதாண்டுகள் தொடர்ந்து அரசவை இசைக் கலைஞராக பணியாற்றிய சமயத்தில் ‘தி செவன் லாஸ்ட் வேர்ட்ஸ் ஆஃப் கிரைய்ஸ்ட்’ உள்ளிட்ட ஏராளமான சிம்பொனிகளை வெளியிட்டார்.
# இவற்றில் ஓபராக்கள், சிம்பொனிகள், மாசஸ் (masses), சொனாடா, கன்செர்ட்டோ மற்றும் நூற்றுக்கணக்கான குறு இசைத் தொகுப்புகளும் (shorter pieces) அடங்கும். இவரது இசை வெளியீடுகள் ஐரோப்பா முழுவதும் விரும்பிக் கேட்கப்படும் இசையானது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
# லண்டன் சிம்பொனி, `தி கிரியேஷன்', `தி சீசன்' ஆகியவை மிகவும் பிரசித்தம். எனது மொழி உலகில் உள்ள அனைவருக்கும் புரியும் என்று தன் இசையைக் குறித்துப் பெருமிதம் கொள்வார். அவர் வாழ்ந்த வியன்னா `இசை நகரம்' எனப் புகழப்படுகிறது. பிரபல செவ்வியல் இசை அறிஞர் பீத்தோவன் இவரது மாணவர். உலகப் புகழ்பெற்ற இசை மேதை மொசார்ட் இவருடன் இணைந்து வியன்னா நகரில் இசை அரங்கேற்றம் செய்தவர்.
# பாரம்பரிய பாணி இசையின் முன்னோடிக் கலைஞராகப் போற்றப்பட்டார். இசையுலகின் சிகரத்தைத் தொட்டவர் என புகழப்படுபவரும் சிம்பொனி இசை மற்றும் ஸ்டிரிங் குவார்டெட் இசையின் தந்தையாக போற்றப்படுபவருமான ஜோசஃப் ஹேடன் 1809-ம் ஆண்டு மே மாதம் 77-ம் வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT