Published : 02 Mar 2016 10:42 AM
Last Updated : 02 Mar 2016 10:42 AM

எம்ஜிஆர் 100 | 12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!

M.G.R. நடித்த படங்களில் ஒன்று ‘சாலிவாஹனன்’. இந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான். படத்தின் கதாநாயக நடிகருடன் எம்.ஜி.ஆருக்கு கத்தி சண்டை காட்சி. எம்.ஜி.ஆர். முறையாக வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றவர். வாள் வீச்சில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதிலாகட்டும், சில நேரங்களில் எதிராளியை நீ எனக்கு சமமல்ல என்பதுபோல, அலட்சியமாக எதிர்கொள்வதை காட்டும் வகையில் சிரித்துக் கொண்டே ஸ்டைலாக வாள் வீசுவதிலாகட்டும், எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். ‘சாலிவாஹனன்’ படத்தின் படப்பிடிப்பில் கதாநாயக நடிகரைவிட எம்.ஜி.ஆர். சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்தார்.

அவரது வேகத்துக்கு கதாநாயகனாக நடித்த வரால் ஈடு கொடுக்க முடியவில்லை. இது குறித்து இயக்குநரிடம் அவர் தரப்பில் புகார் செய்யப்பட்டது. படத்தின் இயக்குநர் கதாநாயகனுக்கு ஆதரவாகவே இருந்தார். எம்.ஜி.ஆரின் வாள் வீச்சு வேகத்தை குறைத்துக் கொள்ளும்படி கூறியதுடன், ஏற்கெனவே, அவர் நடித்த சில காட்சிகளும் ‘கட்’ செய்யப்பட்டன. இதுபற்றி, உடன் நடிக்கும் ஸ்டன்ட் நடிகரிடம் எம்.ஜி.ஆர். தனது நிலையைச் சொல்லி வருத்தப் பட்டார். அந்த ஸ்டன்ட் நடிகரும் ‘‘உங்களிடம் திறமை இருக்கிறது, கண்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள், வருந்தாதீர்கள்’’ என்று அன்பாக பேசி எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் கூறினார்.

அந்த ஸ்டன்ட் நடிகர் கூறியபடி அடுத்த சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். படத்தின் பெயர் ‘ராஜகுமாரி’. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் கதாநாயகன் வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்த நிலையிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே போதும் என்று இல்லாமல், சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்த, தனக்கு ஆறுதல் சொன்ன ஸ்டன்ட் மாஸ் டருக்கும் ‘ராஜகுமாரி’ படத்தில் வாதாடி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து தன் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார். அந்த ஸ்டண்ட் நடிகர்... ‘சாண்டோ’ சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுக்க அவர் தயாரித்த முதல் படம் ‘தாய்க்குப் பின் தாரம்’. முதல் படமே அபார வெற்றி. ஸ்டன்ட் நடிகராக இருந்த சின்னப்பா தேவரை பட முதலாளியாக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.

‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் தனக்காக வேறு ஒருவரின் குரலை ‘டப்’ செய்து தேவர் வெளியிட்டது தொடர்பாக, இடையில் சில காலம் எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஊடல் ஏற்பட்டாலும் அதனால் அவர்களது நட்பு பழுதுபட்டதில்லை. சொல்லப்போனால், ஆழ்ந்த நட்பு இருக்கும் இடத்தில்தான் உரிமையுடன் கூடிய ஊடலும் எழும். புரிதல் ஏற்பட்டு அதன்பின் ஏற்படும் கூடல் மேலும் நெருக்கத்தை அதிகரிக்கும். அப்படி, தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட நெருக்கம் கடைசிவரை பிரிக்க முடியாததாக இருந்தது. அதற்கு பின் எம்.ஜி.ஆரை வைத்து ‘தாய் சொல்லை தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தர்மம் தலைகாக்கும்’ என்று பல வெற்றிப் படங்களை தேவர் எடுத்தார்.

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். துப்பாக்கித் தோட்டா தொண்டையை துளைத்துச் சென்றது. மறுபிறப்பெடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது திரையுலக வாழ்வே முடிந்தது என்று கூறினர். எம்.ஜி.ஆருக்கு மீண்டும் பேச்சுத் திறன் வருமா? என்று நிச்சய மில்லாத நிலை. எம்.ஜி.ஆரை மருத்துவமனை யில் சந்தித்து தான் அடுத்து எடுக்கப் போகும் ‘விவசாயி’ படத்துக்கு அட்வான்ஸ் தொகையை எம்.ஜி.ஆரின் கையில் தேவர் கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பு பரஸ்பர நம்பிக்கையுடனும் வலிமையாகவும் இருந்தது.

‘‘எம்.ஜி.ஆர். மீண்டும் நடிப்பது நிச்சயம் இல் லாத நிலையில், அவருக்கு பணம் கொடுக்க வேண் டுமா?’’என்று சிலர் கேட்டபோது, உறுதியான குரலில் தேவர் கூறினார்... ‘அவர் (எம்.ஜி.ஆர்) ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் நடித்த பிறகுதான் நாம் முழுசா சாப்பிட்டோம். அவரால் நடிக்க முடியாவிட்டால் செலவு கணக்கில் வைத்துக்கொள்கிறேன் போ..’

மருதமலை முருகன் கோயிலில் தனது சொந்த செலவில் மின்விளக்கு வசதி செய்த தேவர், அதை தான் மிகவும் மதிக்கும் அன்பு நண்பரான எம்.ஜி.ஆரின் கையாலேயே தொடங்கி வைக்கச் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தார். இது எம்.ஜி.ஆரின் கட்சி கொள்கைக்கு முரணாயிற்றே என்று சலசலப்பு எழுந்தது. எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார். ‘‘நானோ நான் சார்ந்துள்ள தி.மு.கழகமோ கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. நம்மை மீறிய சக்தி இருப்பதை நம்புகிறேன். தேவர் என் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் நட்புக்காகவும் விழாவில் கலந்து கொண்டேன்’’ என்று கூறினார். சர்ச்சைகள் ஓய்ந்தன.

தேவர் மறைந்த போது எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல் அமைச்சர். கோவை சென்று தனது நண்பரின் இறுதி ஊர்வலத் தில் கலந்து கொண்டு நடந்தே சென்றார். இருவருக் கும் இடையிலான நட்பு, நங்கூரம் பாய்ச்சிய கப்பலாய் உறுதியாக இருந்ததற்கு மட்டுமல்ல; நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதைக்கும் சாட்சி அது.

எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்களை தயாரித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் சின்னப்பா தேவர். இருவர் கூட்டணியில் ‘தாய்க்குப் பின் தாரம்’ முதல் ‘நல்ல நேரம்’ வரை மொத்தம் 16 படங்கள் வெளியாயின. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த படம் ‘முகராசி’. பல படங்களின் படப் பிடிப்பு, அரசியல் என்று பரபரப்பாக இருந்த எம்.ஜி.ஆரை வைத்து 12 நாட்களில் எடுக்கப்பட்டு 100 நாள் ஓடிய வெற்றி படம் என்ற சாதனை படைத்தது ‘முகராசி’.

- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x