Published : 19 Mar 2016 10:46 AM
Last Updated : 19 Mar 2016 10:46 AM

எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்!

M.G.R. எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.

‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.

இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.

அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!

படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.

அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.

தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

- தொடரும்...

கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.

‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அத னால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடு கிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x