Published : 20 Mar 2016 12:17 PM
Last Updated : 20 Mar 2016 12:17 PM
நவீன நாடக இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹென்ரிக் இப்சன் (Henrik Ibsen) பிறந்த தினம் இன்று (மார்ச் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தெற்கு நார்வேயின் ஸ்கியன் நகரில் (1828) பிறந்தார். தந்தையின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பம் வறுமையில் வாடியது. சிறு வயதிலேயே அபார ஓவியத் திறமை இருந்தும், இவரால் பயிற்சி பெற முடியவில்லை.
* பள்ளிப் படிப்புக்குப் பிறகு மருத்துவம் படிக்க விரும்பினார். அதுவும் சாத்தியமாகவில்லை. மருந்து தயாரிப்பில் பயிற்சி பெற தந்தை ஏற்பாடு செய்தார். ஏராளமான கவிதைகள், இறையியல் நூல்களைப் படித்தார். விரைவில் கவிதை எழுதத் தொடங்கினார். லத்தீன் மொழி கற்றார்.
* ‘கேட்டிலினா’ என்ற நாடகத்தை எழுதி வெளியிட்டார். அடுத்ததாக இவர் எழுதிய ‘தி பரியல் மவுண்ட்’ நாடகம் முதன்முதலாக அரங்கேற்றம் கண்டது. இவை எதிர்பார்த்த வெற்றி பெறாதபோதிலும், தொடர்ந்து எழுதினார். மெல்ல மெல்ல இவரது அனைத்து நாடகங்களும் பிரபலமடைந்தன. இவரது ‘எ டால்ஸ் ஹவுஸ்’ நாடகம் அதிகமாக அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது.
* இவர் சிறந்த கவிஞரும்கூட. ஏராளமான கவிதைகள் அடங்கிய தொகுப்பை 1871-ல் வெளியிட்டார். பல நாடகங்களை இயக்கி, தயாரிக்கவும் செய்தார். ‘பிராண்ட்’ நாடகம் அதிக பாராட்டுகளைப் பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
* ஐரோப்பிய நாடகங்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கை மற்றும் கடுமையான ஒழுக்க நெறிகள் சார்ந்தே இருக்கும் என்று கூறப்பட்ட காலம் அது. அதற்கு நேர்மாறாக இவரது நாடகங்கள் இருந்ததால் எதிர்ப்புகளை சந்தித்தார். பல நாடகங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், பாராட்டுகளும் புகழும் சேர்ந்தே வந்தன.
* உளவியல் ரீதியான நாடகங்களை எழுதியதால் ‘நாடகத் துறையின் ஃபிராய்ட்’ என வர்ணிக்கப்பட்டார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர் எனப் போற்றப்பட்டார். 1902, 1903, 1904-ம் ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
* பெரும்பாலும் இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தங்கியிருந்தவர் என்றாலும், தாய்மொழியான டேனிஷ் மொழியில்தான் எழுதிவந்தார். பிறந்த ஊரை நினைவுபடுத்தும் வகையில் அங்கு நடந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டே இவரது பெரும்பாலான நாடகங்கள் அமைந்தன.
* சிறு வயதில் வறுமையில் வாடியவர் தன் எழுத்தாற்றலால் உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக சாதனை படைத்தார். நவீன நாடகவியல் நிறுவனர்களில் ஒருவராகத் தன்னை உயர்த்திக்கொண்டார். இவரது ‘எனிமி ஆஃப் தி பீப்பிள்’ நாடகத்தை சத்யஜித்ரே ‘ஜனசத்ரு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்தார். இது அடிப்படைவாதிகளுக்கு எதிரான திரைப்படம் எனப் போற்றப்பட்டது.
* அரை நூற்றாண்டு காலமாக நாடகக் கலைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இவரது கடைசி நாடகமான ‘வென் வி டெட் அவேக்கன்’ 1899-ல் வெளிவந்தது. அதன் பிறகு உடல்நிலை சரியில்லாததால் அவரால் தொடர்ந்து எழுத முடியவில்லை.
* 18-ம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவர், நாடக இயக்குநர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட ஹென்ரிக் இப்சன் 78-வது வயதில் (1906) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT