Published : 12 Mar 2016 10:21 AM
Last Updated : 12 Mar 2016 10:21 AM
ஜெர்மனி இயற்பியலாளர்
ஜெர்மனியை சேர்ந்த இயற்பியலாளரும், மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்டவருமான குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் (Gustav Robert Kirchhoff) பிறந்த தினம் இன்று (மார்ச் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் (1824) பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். நாட்டுப்பற்று மிகுந்த குடும்பம் அது. தேசத்துக்கு உழைப் பதற்காக கல்வி கற்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் வளர்க்கப் பட்டார். இதனால், பேராசிரியராக வேண்டும் என்ற நோக்கத்துடனே இவரது கல்வியும் அமைந்தது.
# கோனிஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ் பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21 வயதில் வெளியிட்டார். இது மின்னோட்டம், மின்னழுத்தம், மின்சார நெட்வொர்க்குகளில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றை கணக்கிடப் பயன்பட்டது.
# கணிதம், இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு, பெர்லின் நகருக்கு குடிபெயர்ந்தார். பிரஸ்லாவ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். வேதியியல் களத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார்.
# ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து நிறமாலையியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 1854-ல் இருவரும் இணைந்து சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தனர். இவை மின் பொறியியல் துறைக்கு மிகவும் பயன்படும் தனிமங்களாகத் திகழ்கின்றன. இதுவே இவர் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வுத் தலைப்பாகவும் அமைந்தது.
# மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857-ல் முதன்முதலாக கண்டறிந்து கூறினார். வெப்ப வேதியியல் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
# பொருட்களில் வெப்ப மாறுபாடுகளால் உண்டாகும் வேதி வினை குறித்து ஆராய்ந்தவர், 1859-ல் வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். ஒரு பொருளில் இருந்து அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுகிறது என்பதை விளக்கினார். இதை 1861-ல் நிரூபித்தார்.
# தன் மீது விழும் அனைத்து மின்காந்தக் கதிர்வீச்சையும் ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடைய ‘கரும்பொருள்’, கதிர்வீச்சின் நிறமாலைக்கு ஏற்ப வெப்பத்தை உமிழ்கிறது எனக் கண்டறிந்தார். இதற்கு ‘கரும்பொருள் கதிர்வீச்சு’ என்ற பதத்தை 1862-ல் முதன்முதலாக பயன்படுத்தினார். இவரது இந்த ஆய்வுகள் குவான்டம் விசையியல் துறை உருவாக வழிவகுத்தது.
# ராபர்ட் புன்செனுடன் இணைந்து நிறமாலைப் பகுப்பாய்வு விதிகளை வெளியிட்டார். ஒளியின் நிறமாலைத் தொகுப்பு குறித்த விதிகளைக் கண்டறிந்து வெளியிட்டார். கணித இயற்பியல் துறையில் இவரது விரிவுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 4 தொகுதிகள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.
# சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக ‘ரூம்ஃபோர்டு’ பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளை வென்றார். ராயல் நெதர்லாந்து கலை, அறிவியல் அகாடமியின் அயல்நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
# குடும்பச் சுமை, பலவீனமான உடல்நிலை தரும் தொந்தரவுகளைப் பொருட்படுத்தாமல், வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டார். மனிதகுலத்துக்கு பயன்படும் பல ஆராய்ச்சிகளுக்கு வித்திட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 63-வது வயதில் (1887) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT