Published : 06 Mar 2016 11:26 AM
Last Updated : 06 Mar 2016 11:26 AM
நோபல் பெற்ற கொலம்பிய நாவலாசிரியர்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் கேப்ரியல் கார்ஸியா மார்க்கஸ் (Gabriel Garcia Marquez) பிறந்த தினம் இன்று (மார்ச் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் (1927) பிறந்தார் . தாத்தா - பாட்டி வீட்டில் 8 வயது வரை வளர்ந்தார். தாத்தா இறந்த பிறகு பெற்றோர் வீட்டில் சகோதர, சகோதரி களுடன் வளர்ந்தார். புத்திசாலி மாணவ ராகத் திகழ்ந்தார். கல்வி உதவித்தொகை பெற்று பள்ளிப் படிப்பை முடித்தார்.
# படிக்கும் காலத்திலேயே இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பொகோட்டா தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் சேர்ந்தார். பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளை படித்தார். இவர் எழுதிய பல சிறுகதைகள், முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்தன.
# கொலம்பியாவில் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சிகளால் அவர் தங்கியிருந்த கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன. அதில், இவரது பல கையெழுத்துப் பிரதிகள் நாசமாயின. பல்கலைக் கழகம் மூடப்பட்டதால், வேறொரு பல்கலைக்கழகத்தில் படித்தார். பகுதிநேர பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். எழுத்து மீதான ஆர்வத்தால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு பத்திரிகையில் சேர்ந்தார்.
# ஆரம்பத்தில் இருந்தே அரசியலை துணிச்சலுடன் விமர்சித்தார். விமர்சனக் கட்டுரைகள் எழுதிய இவர், சிறுகதைகள், நாவல்களும் அதிகம் எழுதினார். இவரது முதல் நாவல் ‘லீஃப் ஸ்டோம்’ 1955-ல் வெளிவந்தது. தொடர்ந்து, ‘இன் ஈவில் ஹவர்’ என்ற 2-வது நாவலும், ‘நோ ஒன் ரைட்ஸ் டு தி கர்னல்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தது.
# இவரது எழுத்து நடை, கதை சொல்லும் பாணி தனித்துவம் வாய்ந்தது. தாய்மொழியான ஸ்பானிய மொழி இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இவரது அனைத்து படைப்புகளும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறுகதைகள், குறு நாவல்கள் இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவை.
# கொலம்பிய நாட்டின் உயரிய பரிசான ‘எஸ்ஸோ இலக்கியப் பரிசு’ பெற்றார். இவரது தலைசிறந்த படைப்பாக போற்றப்படும் ‘ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சால்டிட்யூட்’ நாவலுக்காக 1982-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இது ‘தமிழில் தனிமையின் நூறு ஆண்டுகள்’ என்று 2013-ல் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
# நவீன இலக்கியத்தில் அதுவரை கோலோச்சிய எதார்த்தவாதத்துக்கு மாற்றாக இவரது எழுத்து இருந்தது. இவரது எழுத்து வகையை ‘மேஜிக்கல் ரியலிஸம்’ (மாய எதார்த்தம்) என்று குறிப்பிடுகின்றனர் விமர்சகர்கள்.
# ரசிகர்களால் ‘கபோ’ (Gabo) என்று அழைக்கப்பட்டார். பாட்டி தனக்கு கூறிய அற்புதமான கற்பனைக் கதைகள், சிறு வயதில் தனக்கு நிகழ்ந்த அனுபவங்கள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவையே இவரது எழுத்துக்கு அடிப்படை.
# உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக அங்கீகாரம் கிடைத்த பின்னரும் பத்திரிகை தொழிலை இவர் விடவில்லை. ரோம், பாரீஸ், நியூயார்க், பார்சிலோனா என உலகின் பல பகுதிகளிலும் செய்தியாளராகப் பணியாற்றினார்.
# உலக இலக்கிய அரங்கில் தனக்கென அழியா இடம் பெற்றவரும் 20-ம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படுபவருமான கேப்ரியல் கார்ஸியா மார்க்கஸ் 87-வது வயதில் (2014) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT