Last Updated : 20 Sep, 2021 09:50 AM

4  

Published : 20 Sep 2021 09:50 AM
Last Updated : 20 Sep 2021 09:50 AM

திருக்குறள் கதைகள் 34 - 35: தவம்

டாக்டர் அப்துல் கலாம் 1931 அக்டோபர் 15-ந்தேதி பிறந்தவர். ஜைனுல்லாபுதீன்- ஆயிஷம்மா பெற்றோர். உடன் பிறந்தோர் 3 சகோதரர்கள். ஒரு சகோதரி.

அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்து தயாராகி 4 முதல் 5-30 வரை கணிதம் ட்யூஷன். 5.30 முதல் 6 மணி வரை தொழுகை.

6 மணிக்கு ரயில்நிலையம் சென்று தனுஷ்கோடிபோட் மெயிலில் வரும் தினமணி-சுதேசமித்திரன் போன்ற தினசரிகளை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் -சித்தப்பா மகன் சம்சுதீனுடன் எடுத்துக் கொண்டு தெருத்தெருவாக வீடு, வீடாகப் போய் பேப்பர் போடுவார்.

காலை 8 மணிக்கு அம்மா வைத்திருக்கும் கஞ்சியோ, கூழோ குடித்து விட்டு பள்ளி செல்வார். மாலை வீடு திரும்பியதும் 4 மணி முதல் 6 மணி வரை பேப்பர் காசு வசூலிக்கும் வேலை.

இரவு 7 மணி முதல் 9 மணி வரை காடா விளக்கு மண்ணெண்ணையில் எரிய, அந்த வெளிச்சத்தில் படிப்பு. ரேஷனில் எண்ணெய் வாங்குவதால் 9 மணிக்கு அம்மா விளக்கை அணைத்து விடுவார்.

முத்தையன் என்ற ஆசிரியர் வருங்காலத்தில் பெரிய ஆளாக உங்கள் மகன் வருவான். இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுங்கள் என்று சொல்லி 11 மணி வரை படிப்பார்.

கலாம் நினைவுப்பரிசு

விடுமுறை நாட்களில் அண்ணன் கடையில் உட்கார்ந்து புளியங்கொட்டை விற்பார். ஒரு நாள் முழுக்க விற்றால் 1 அணா கிடைக்கும்.

அன்று தொழுகைக்கு அப்பா சென்றிருந்தார். யாரோ அன்பர் தாம்பாளத்தட்டு நிறைய பழங்கள், துணி மணிகள் வைத்து எடுத்து வந்தார். ‘அப்பா வீட்டில் இல்லை’ என்று சொல்லியும், ‘பரவாயில்லை வந்தால் கொடுத்து விடுங்கள்’ என்று வைத்து விட்டுப் போய் விட்டார்.

அப்பா வந்து விசாரித்து விட்டு கன்னத்தில் ஒரு அறை விட்டு, ‘அன்பளிப்பு பொருட்களை ஏன் ஏற்றுக் கொண்டாய்? திருப்பிக் கொடுக்க வேண்டாமா? அன்பளிப்பு எதையோ எதிர்பார்த்து நமக்கு அளிப்பது. இறைவன் நமக்கு வேண்டியதைக் கொடுப்பான்!’ என்று அறிவுரை வழங்கினார்.

இரண்டாம் உலக யுத்தம் 1939-45 நடைபெற்றது. அப்போது செய்தித்தாளில் SPIT FIRE (ஸ்பிட் ஃபையர்) விமானம் பற்றியும் உலகத் தலைவர்கள் பற்றியும் செய்திகள் வரும்.

‘நானும் ஒரு நாள் இப்படி செய்தித்தாளில் பெயர் வரும் அளவு உயர்வேன்!’ என்று நண்பர்களிடம் சொல்வார்.

அவருடைய 16-வது வயதில் 1947-ல் ஆகஸ்ட் 14 இரவு நாடு சுதந்திரம் அடைவது பற்றிய ரேடியோ செய்தி கேட்டு மறுநாள் நேரு கொடியேற்றும் படமும், கல்கத்தா கலவரத்திற்கு காந்தி சென்று உண்ணா விரதம் இருக்க நேர்ந்ததையும் எண்ணி துணுக்குற்றார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டல் சாப்பாட்டு செலவு 4 ரூபாய் குறைப்பதற்காக சைவ உணவிற்கு மாறியவர், கடைசி மூச்சு உள்ளவரை சைவமே சாப்பிட்டார்.

என் துணைவி, நான், கலாம்

குரோம்பேட்டை எம்ஐடியில் ‘ஏரோனாடிக்ஸ் என்ஜினீரிங்’ படிக்க கல்லூரிக்கட்டணம் கட்ட அக்கா ஜொகாரா தனது கைவளையல்கள், நெக்லஸ் எல்லாம் அடமானம் வைத்து பணம் அனுப்பி வைத்தார்.

ராமேஸ்வரத்தில் கடும் புயல்தாக்கி வீடுகளெல்லாம் -படகுகளெல்லாம் கடலில் மூழ்கிய துக்கச் செய்தியை அப்பா மகனுக்குத் தெரிவித்தார்.

சென்னை துணைவேந்தர் டாக்டர் லட்சுமணமுதலியார், கலாமை சிறந்த மாணவனாக தேர்வு செய்து, ‘ஏரோ

ஸ்டக்சர்ஸ் அண்ட் ஏரோ எலாசிட்டி’- என்ற புத்தகத்தை அன்பளிப்பாக தந்திருந்தார்.

மூர்மார்க்கட்டில் 400 ரூபாய்க்கு அதை விற்று ஊர் சென்று வர முயன்றபோது புத்தகக்கடைக்காரர் இதுபோன்ற புத்தகம் நீ திரும்ப வாங்க முடியாது. அடமானம் வைத்து 60 ரூபாய் பெற்றுக்கொள். ஊருக்குப் போய் வந்து மீட்டுக் கொள் என்று அனுப்பி வைத்தார். அதேபோல திரும்பி வந்து அதை மீட்டுக் கொண்டார்.

திருவனந்தபுரம் இஸ்ரோவில் வேலை பார்த்தபோது நல்ல உணவு மணிஸ் கபேவில் சாப்பிடுவதற்காக 4 கி.மீ வேகாத வெயிலில் நடந்து வந்து ரயில் நிலையம் அருகில் இருந்த ஓட்டலில் சாப்பிட்டுச் செல்வார்.

பொக்ரான் அணுகுண்டு -எஸ்.எல்.வி -அக்னி -ஆகாஷ் ராக்கெட்டுகள் விட்டார். ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொள்ளும் முன் 330 ஏக்கர் பரப்பளவுள்ள ராஷ்டிரபதி பவனில் ‘ஒரே ஒரு அறை மட்டும் போதும்; மற்றவை வேண்டாம்!’ என்றார்.

‘ஜனாதிபதி பதவி ஏற்க நேரம் பார்க்கவா?’ என்று கேட்டபோது, ‘சூரியனை பூமி சுற்றுகிற எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உங்கள் இஷ்டம்!’ என்றார்.

15 வெளிநாடுகளில் 13 நகரங்களில் மக்களையும், மாணவர்களையும் சந்தித்தார். குஜராத் ஆனந்த் நகர் பள்ளி ஒன்றில் இந்தியாவின் எதிரி யார் என்று கேட்டபோது ஒரு பெண் குழந்தை ‘வறுமையும் நோயும்’ என்று சொல்ல ஓடிப் போய் கட்டி அணைத்துக் கொண்டார்.

இக்னைட்டட் மைண்ட்ஸ் (IGNITED MINDS) என்ற புத்தகம் எழுதியபோது சிநேகா என்ற அந்த மாணவிக்கு சமர்ப்பணம் என்று அறிவித்தார். 2006-ல் ஜார்ஜ்புஷ் அமெரிக்க அதிபர் -இந்தியா வந்தபோது, ‘ராஷ்டிரபதிபவன் வெராண்டா, வரவேற்பறை, ஜமுக்காளங்கள் பழையதாக உள்ளன; மாற்றுங்கள்!’ என்றார் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி.

‘பல ஞானிகள், மேதைகள் பாதம்பட்ட கார்ப்பட் மாற்ற முடியாது!’ என்றார்.

‘பாதுகாப்புக்கு அமெரிக்க செக்யூரிட்டீஸ் அழைத்து வருவோம்!’ என்றார். ‘எங்கள் ராணுவம் உலகப்புகழ் பெற்றது. உயிரைக் கொடுத்து புஷ்ஷூக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். வேண்டுமானால் மேற்பார்வை செய்ய ஒரு ஆளை மட்டும் அனுமதிப்போம்!’ என்றார்.

டெல்லியை சுற்றிப்பார்க்க ராமேஸ்வரத்திலிருந்து வந்த சொந்தங்களுக்கு ராஷ்டிரபதிபவனில் சாப்பிட்ட உணவு- ஊர் சுற்றிப்பார்க்க டாக்ஸிக்கு ஆன செலவு மொத்தத்திற்கு ரூ.2.5 லட்சம் செக் கொடுத்து விட்டார்.

பதவிக்காலம் முடிந்ததும் ஒரு பெட்டியில் உடைகளையும், இன்னொரு பையில் சொந்தக்காசில் வாங்கிய புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார். வழிநெடுக மக்கள் ஏராளமான அன்பளிப்புடன் காத்திருந்தனர். உங்கள் அன்பு போதும் அன்பளிப்பு வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு கிளம்பினார். இவருக்கு நான் பொருத்தும் குறள்:

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி -இவன் தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்’

ஜைனுல்லாபுதீன் தவம் செய்து பெற்ற மகனல்லவா?

---

குறள்கதை: 35 தர்மம்

கொங்கு மண்டல மக்களில் 60 சதவீதம் பேர் விவசாயம், விவசாயம் சார்ந்த கூலி வேலை. விளைந்ததை சந்தைக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்வது என்று மண் சார்ந்த தொழில் செய்து பிழைப்பவர்கள்.

சுதந்திரத்திற்கு பத்து ஆண்டுகள் முன்னதாக பஞ்சாலைகள் கோவை நகரைச் சுற்றி 20 மைல் சுற்றளவில் காளான்கள் போல் முளைக்க ஆரம்பித்தன. வேகாத வெயிலில், செம்புழுதிக் காட்டில் குனிந்த தலை நிமிராமல்

பொழுதுக்கும் பாடுபட்டு விதியே என்று வாழ்ந்த ஏழை மக்களுக்கு விடிவெள்ளியாகத் தோன்றியவை அந்த மில்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட மில்களில் பல்லாயிரக் கணக்கானோர் மூன்று ஷிப்டுகளில் வேலை செய்தனர்.

இந்த வசதியெல்லாம் திருப்பூருக்கு கிழக்கே உள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை. கூலி வேலைக்குப் போவது கேவலம் என்று நினைப்பவர்கள் ரோட்டோரம் குடிசை போட்டு டீக்கடை நடத்துவார்கள். மாலை நேரங்களில் வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, காராபூந்தி, மிக்சர், டீ சாப்பிட்டு பழகியவர்கள் இன்று டாஸ்மாக் கடைமுன் பைத்தியமாய் நிற்கிறார்களே அதுபோல, மாலை நேரங்களில் அவர்கள் கால்கள் தானாக டீ கடை நோக்கி நடக்க ஆரம்பித்து விடும்.

அப்படி ரோஷமுள்ள ஒரு விவசாயி ஒரு டீக்கடை போட்டு கணவனும், மனைவியும் நாள் முழுக்க வியாபாரம் பார்ப்பார்கள். அந்த குடிசைக்குள் அதிகபட்சம் ஒரு ஆட்டுக்கல், ஒரு அம்மிக்கல், ஒரு வடை சுடும் பாத்திரம், அடுப்பு, விறகு ஷோகேஸ் போல சுட்டவற்றை கொட்டி வைக்க ஒரு மரபீரோ. இரண்டு நீளமான பெஞ்ச் -அதன் முன்னே நீளமான மேஜை இவ்வளவுதான் இருக்கும்.

இந்த பெற்றோருக்கு இரண்டு பெண்கள். வயதுக்கு வந்தவுடனே படிப்பை நிறுத்தி இரண்டு வருடத்தில் மாப்பிள்ளை பார்த்து அக்காவுக்கு திருமணம் முடித்து அனுப்பி விட்டார்கள்.

சக்தி மசாலா துரைசாமி- சாந்தி தம்பதியுடன்

தங்கை சுட்டி. சர்ச் பார்க்கில் படித்து விட்டு வெண்ணிற ஆடை படத்தில் நடிக்கும்போது ஜெயலலிதா அம்மையார் எப்படி துறு,துறுவென்று, வட்ட வடிவ முகம், சிவந்த உடல், பூசினமாதிரி உடம்புடன் இருந்தாரோ அவரை நினைவுபடுத்தும் பெண். படிப்பில் கெட்டிக்காரி, விளையாட்டில் திறமைசாலி, பேச்சுப் போட்டியில் எப்போதும் முதல் பரிசு பெறுவாள்.

அக்காவுக்கு கல்யாணமாகிப் போயிட்டா நீ டீக்கடையை பாத்துக்க. நாளையிலிருந்து நீ பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று குண்டைத்தூக்கிப் போட்டார்கள். ஒரு விநாடியில் அவள் எதிர்காலம் இருண்டு விட்டது.

பெண்ணாகப் பிறப்பது பாவம். அதை விட ஏழை வீட்டில் பிறப்பது பெரும் பாவம் என்று விதியை நொந்து காலம் தள்ளினாள். வயதுக்கு வந்தாள். வறுமையிலும் ஏழ்மையிலும் வனப்பு குறையவில்லை. கூடவே செய்தது பி.ஏ.பட்டதாரி ஒருவன். அந்தப் பெண்ணின் துறுதுறுப்பு தோற்றத்தில் மனதைப் பறிகொடுத்து மணந்து கொண்டான். இருவருக்கும் ஏதாவது தொழில் தொடங்கியாக வேண்டிய நிர்பந்தம்.

யாருமே சீந்தாத -பயன்படுத்த யோசிக்கும் ஒரு ராசியில்லாத 15-க்கு 15 அடி அறையை துடைத்து வாடகைக்கு எடுத்தனர். போலீஸ் உத்தியோகத்திற்கு போக வேண்டும் என்ற கட்டுமஸ்தான உடம்பும், உயரமும், படிப்பும் உள்ள இளைஞனுக்கு -அதில் வாய்ப்புக் கிடைக்காமல் போகவே -வைராக்கியத்துடன் மசாலா பொடி தயாரித்து ஈரோட்டிலிருந்து கரூர் வரை 40 கி.மீ சைக்கிளில் மூட்டைகளை வைத்து தானே ஓட்டிச் சென்று வியாபாரம் செய்தார். கடும் உழைப்பு, நேர்மை சரக்கில் கலப்படமற்ற தன்மையால் விறுவிறுவென்று நிறுவனம் வளர்ந்தது.

சக்தி மசாலா துரைசாமி- சாந்தி தம்பதியுடன்

6-ம் வகுப்பு படித்த மனைவியை பி.ஏ அடுத்து எம்.ஏ படிக்க வைத்தார். தன் தொழிலில் நேரடியாக நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்து மனைவியின் திறமையைப் பின்னாலிருந்து ஊக்குவித்தார். தமிழ்நாடு அரசு வேளாண்பல்கலைக் கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் மனைவிக்கு வந்து சேர தான் பெற்றது போல் அளப்பறிய சந்தோஷம் கொண்டார்.

பல கோடி லாபத்தில் தொழில் வளர்ந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு- மருத்துவமனை, அரசு பள்ளிகளை தத்து எடுத்து ஆயிரம் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கம்யூட்டர் வாங்கித் தருகிறார்கள். விவசாயக்கூலிகளின் குழந்தைகள் காலேஜில் படிக்க உதவி செய்கிறார்கள். ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் பள்ளி, கல்லூரிகள், இலக்கிய, சமூக அமைப்புகளுக்கு வாரி வழங்குகிறார்கள்.

தானும் மகிழ்ந்து தானம் பெறுவோரையும் மகிழச் செய்கிறார்கள். ஒரு தவமாக தானம் செய்யும் அந்த தம்பதிதான் ‘சக்தி மசாலா’ துரைசாமி- சாந்தி இருவரும்.

எப்போது திரைப்படத்துறையில், எழுத்துத்துறையில் யாராவது பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று நான் போன் செய்தாலும் அடுத்த நொடியில் நிதி 50 ஆயிரமோ, லட்சமோ அனுப்பி வைக்கிறார்கள். இவர்கள் வாழும் வாழ்க்கைக்கு பொருந்தும் வள்ளுவன் குறள்:

‘ஈதல் இசைபட வாழ்தல்- அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு’

---

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x