Published : 17 Sep 2021 03:29 PM
Last Updated : 17 Sep 2021 03:29 PM
பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக் குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமானார்.
கவிஞர் பிரான்சிஸ் கிருபா திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 90களுக்குப் பிறகு கவிதைகளில் கணிசமான பங்களிப்பு காரணமாக நவீன தமிழ்க் கவிதை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட கவிஞராகத் திகழ்ந்தார்.
இந்த நிலையில் பிரான்சிஸ் கிருபா உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்றிரவு காலமானார். அவரது மறைவு குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
யாழினி
பகலில் எரியும் மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து சுருள் சுருளாய் விரிகிறது இருள்.
-பிரான்ஸிஸ் கிருபா
Dr.Harris பக்தன்
"சிலிர்க்க சிலிர்க்க
அலைகளை மறித்து
ஒரு முத்தம் தரும்போதெல்லாம்
துடிக்க துடிக்க
ஒரு மீனைப்பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்"
ஆழ்ந்த இரங்கல்
aaram
கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக் கொண்டிருக்கும்
போது….ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக் கூடாது
—பிரான்ஸிஸ் கிருபா
Suria
பெண் யார்?
பெற்றுக்கொண்டால் மகள்.
பெறாத வரையில் பிரகாசமான இருள்.
-பிரான்சிஸ் கிருபா.
Vijayaraj
மண்டியிட்டால் மன்றாடினால்
உன் கடிகாரப் பைக்குள் கை நுழைத்து
அள்ளி எறியக் கூடும்
சில சில்லறை வினாடிகளை...
வேண்டாம்
ஒரு வாழ்வு முடிய
இன்னும் ஒரு உயிர் மீதமிருக்கிறது.
- பிரான்சிஸ் கிருபா
Maathevan
"இச்சன்னல் வழியே தெரிவது வானத்தின் ஒரு பகுதிதான்" என்றான்
முழு வானமும் தெரியும் வசமாய் ஒரு ஜன்னல் செய்ய முடியுமா?
- ஜெ.பிரான்சிஸ் கிருபா
G.Selva
எல்லாவிதமான அன்பையும், சக மனிதர்கள் மீதான நேசத்தையும் எழுத்தில்
எல்லோராலும் அள்ளிக் கொடுக்க முடியும்.
நிஜத்தில் அப்படியே வாழ்ந்த மனிதர் பிரான்சிஸ் கிருபா..
Devil
பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே...
பெண் யார்?
பெற்றுக்கொண்டால் மகள்.
பெறாத வரையில்
பிரகாசமான இருள்.
வேறொன்றுமில்லை - பிரான்சிஸ் கிருபா
Mohan Chellaswamy
மொழியில் ஒயிலான நடனமும்
உக்கிர தாண்டவமும் ஆடிய கவிஞன்
விட்டு விடுதலையானான்.
Iyyappa Madhavan
இருக்கும்போது ஒரு கவிதையும்
பகிரப்படுவதில்லை.
இறந்துவிட்ட பின்புதான் தேடிப்
பிடித்துப் பகிரப்படுகிறது.
மரணமொன்றே கவிஞன் இருந்தான்
என்பதைச் சொல்கிறது.
கவிஞனாய் வாழ்வது அவ்வளவு
எளிதல்ல.
இருக்கும்போது கொண்டாடத் தவறும்
சமூகம் இறந்தபின் பதறியடித்து
அஞ்சலி செலுத்துகிறது.
இந்தச் சமூகம் கவிஞனுக்காக ஒரு
போதும் இருந்ததில்லை.
இருக்கப்போவதுமில்லை.
பிரான்சிஸ் கிருபா என்னுடன்தான்
இருக்கிறான்.
Aazhi Senthil Nathan
பிரான்சிஸ் கிருபாவோடு எனக்கு அதிகம் பழக்கமில்லை. பத்தாண்டுக்கு முன்னர் ஓரிரு முறை பேசியதோடு சரி. ஆனால் அவரை வாசித்திருக்கிறேன்.
இன்று அவர் மறைந்தார் என்கிற செய்தியைக் கேட்டபோது மனத்தில் ஒரு வலியும் வேதனையும் உருவானது. நீண்டகாலமாகப் பழகிய நண்பனின் மரணம் உலுக்குவது போலத் தோன்றியது, சில நிமிடங்கள் கொந்தளித்து அமைதியானேன்.
தன்னையும் தன் உடம்பையும் பாதுகாத்துக்கொள்ளத் தவறும் தன்மையுள்ள ஒரு தலைமுறையைச் சார்ந்தவர்கள் நாங்கள். அவரது மறைவுக்குப் பின் அப்படித்தான் ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அவர் அவருடைய கவிதைகளில் வாழ்வார் என்று இரங்கல் செய்தி எழுதிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால், மனம் அப்படி அமைதி கொள்ளவில்லை.
ஜீவன்
ஆழ்ந்த இரங்கல்கள் #பிரான்சிஸ்_கிருபா
Poppu Purushothaman
தந்திரசாலிகளால் மட்டுமே வாழ முடிகிற உலகில், காலத்தில் உனக்கென்ன வேலை போய் வா அன்பே. தத்தளிப்பினின்று அமைதி பெறு. உன் எழுத்துகள் இன்னும் இன்னும் உயிர் பெறும்.
Dinesh
பிரான்சிஸ் கிருபா
இளைப்பாறுதல் தேடிப் பறந்துவிட்டார்..
Binny Moses
'பத்தினிப் பாறை' க்கு வர வேண்டும் என்று #பிறான்சிஸ்கிருபா விடம் எத்தனை முறை சொல்லி இருப்பேன். இன்று அவரது உடலைச் சுமந்துகொண்டு ஊருக்குச் சென்று கொண்டு இருக்கிறேன். காலம் எது எப்படி நிகழ வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து வைத்திருக்கிறது. விழுப்புரம் கடந்து சென்று கொண்டு இருக்கிறோம். பின்னால் பிரீசரில் உறங்குவது போல பாவித்துக் கிடக்கிறான் பிரான்சிஸ். வாழ்வின் பீடத்தில் தன்னைத் தானே கொஞ்சம் கொஞ்சமாகப் பலியிட்டுக் கொண்டிருந்தவன்... கடவுளுக்குக் கையளித்துக் கொண்டிருந்த கடைசி விருந்தை முடித்துக் கொண்டான்.
கவரி வீசும் சம்மனசுகளின் காட்டில் மெசியா வின் மீளா உறக்கம். எழுப்ப மாட்டேன்... தூங்கு நண்பா.
அவனது இரண்டு விழிகளும் திறந்தே இருக்கிறது. யாரும் மூடவில்லை. ஆகாயம் வெறித்து இறைஞ்சுகிறது விழிகள்.....
" என் தேவனே, என் தேவனே.... ஏன் என்னைக் கைவிட்டீர்?
இந்தக் கவிதையை வாசிக்கையில், அவனை அவனே கைவிடும்போது நிகழும் அற்புதம் என்ன எனப் புரியவில்லை. அந்த அற்புதம் மரணம் தானா கவிஞரே..
முதலில்
அண்ணன்கள் கைவிட்டார்கள்.
பிறகு
காதலிகள் கைவிட்டார்கள்.
முடிவில்
தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.
இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
இன்னும்.தொடர்ந்தது
கைவிடல் படலம்.
இறுதியாக அவனை
அவனே கைவிட்டான்.
அதற்குப் பிறகுதான்
நிகழ்ந்தது அற்புதம்.
-
இந்தக் கவிதையை வாசிக்கையில், அவனை அவனே கைவிடும்போது நிகழும் அற்புதம் என்ன எனப் புரியவில்லை. அந்த அற்புதம் மரணம் தானா கவிஞரே..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT