Published : 10 Feb 2016 05:55 AM Last Updated : 10 Feb 2016 05:55 AM
வால்டர் பிராட்டன் 10
நோபல் பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
அமெரிக்க கண்டுபிடிப்பாளரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான வால்ட்டர் ஹவுசர் பிராட்டன் (Walter Houser Brattain) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# சீனாவின் சியாமென் நகரில் (1902) பிறந்தவர். தந்தை ஆசிரியர். தாய் கணித வல்லுநர். அமெரிக்கர்களான இருவரும், இவர் பிறந்த பிறகு, மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பினர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மாவு மில் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுவந்தனர்.
# வாஷிங்டனில் உள்ள விட்மேன் கல்லூரியில் இயற்பியல், கணிதத் தில் பட்டம் பெற்றார். 1926-ல் ஆரிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தேசிய தரக்கட்டுப்பாடு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு மின் அழுத்த அதிர்வெண் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
# மினசோட்டா பல்கலைக்கழகத்தில் 1929-ல் முனைவர் பட்டம் பெற்றார். பெல் டெலிபோன் லேப் நிறுவனத்தில் இயற்பியல் ஆய்வாளராக சேர்ந்தார். புதிதாக அறிமுகமான குவான்டம் இயக்கவியல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
# இயற்பியலாளர் ஜோசப் பெக்கருடன் இணைந்து வெப்பத் தூண்டுதலால் ஏற்படும் மின்சுமை ஓட்டம் குறித்து ஆராய்ந்தார். டங்ஸ்டன் இயக்கம், அணு வடிவமைப்பு மாறுபாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். திடநிலை இயற்பியல் துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது.
# எலெக்ட்ரான் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும் மின்னோட்ட பெருக்கத் துக்கும், வெற்றிடக் குழாய்களையே தொலைபேசி தொழில் பெரு மளவு நம்பியிருந்தது. அதற்கு மாற்றுத் தொழில்நுட்பம் கண்டறிய பெல் லேப் நிறுவனம் விரும்பியது. தாமிர ஆக்ஸைடை பயன்படுத்தி இயக்கப்படும் குறைகடத்தி ஆம்ப்ளிஃபயரை கண்டறியும் ஆராய்ச்சியில் வில்லியம் பி. ஷாக்லேயுடன் இணைந்து ஈடுபட்டார்.
# இரண்டாம் உலகப்போரின்போது, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இவரது குழுவினர் மேக்னடோமீட்டர்ஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். 1944-ல் இதன் வடிவமைப்புக்கான உரிமம் பெற்றார். தகவல் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டது.
# 1947-ல் ஜான் பர்டின், வில்லியம் ஷாக்லே ஆகியோருடன் இணைந்து இவர் கண்டறிந்த முதல் டிரான்சிஸ்டரை தங்கள் நிறுவனத்தின் சக ஊழியர்களிடம் இயக்கிக் காட்டினர். நவீன எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் முக்கிய கண்டுபிடிப்பாக இது திகழ்ந்தது.
# குறைகடத்திகள், டிரான்சிஸ்டர் எஃபெக்ட் மற்றும் பாயின்ட் கான்டாக்ட் டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்புகளுக்காக ஜான் பர்டின், வில்லியம் ஷாக்லேயுடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை 1956-ல் பெற்றார். பொருட்களின் மேற்பரப்பில் காணப்படும் எலெக்ட்ரான் நிலைகள் குறித்த ஆராய்ச்சிக்காக வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டார். மின்வேதியியல் செயல்முறைகள் குறித்து ஆராய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டார். ரத்தம் உறைதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
# ஹார்வர்டு பல்கலைக்கழகம், விட்மேன் கல்லூரிகளில் வருகைதரு விரிவுரையாளராக, பேராசிரியராகவும் பணியாற்றினார். ஸ்டூவர்ட் பாலன்டைன் பதக்கம், ஜான் ஸ்காட் பதக்கம் உள்ளிட்ட பரிசுகளைப் பெற்றார்.
# அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி, ஃபிராங்க்ளின் இன்ஸ்டிடி யூட், அமெரிக்கன் ஃபிசிக்கல் சொசைட்டி உள்ளிட்ட பல அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராக செயல்பட்டார். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த இயற்பியல் மேதை வால்டர் ஹவுசர் பிராட்டன் 85-வது வயதில் (1987) மறைந்தார்.
WRITE A COMMENT