Published : 20 Feb 2016 11:39 AM
Last Updated : 20 Feb 2016 11:39 AM

எம்ஜிஆர் 100 | 5 - மனிதமும் மதநல்லிணக்கமும்

M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.

தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..

வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.

அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.

தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!

1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.

அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.

அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?

1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.

பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’

மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.



வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.

அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.



தொடரும்..

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x