Last Updated : 06 Sep, 2021 10:15 AM

4  

Published : 06 Sep 2021 10:15 AM
Last Updated : 06 Sep 2021 10:15 AM

திருக்குறள் கதைகள் 26 - 27: அடக்கம்

குறள் 26: அடக்கம்

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்ற ஹீரோக்களைத் தவிர நாம் கொண்டாட வேண்டிய குணச்சித்திர நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எஸ்.வி.ரங்காராவ், நாகையா, பாலையா, வி.கே.ஆர்,. இப்படி பலர். அதிலே மறக்க முடியாத ஒருவர் எஸ்.வி.சுப்பையா அண்ணன். உணர்ச்சிப் பிழம்பாக நடிப்பவர். நெருப்பில் குதி என்றால் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் உடனே குதித்து விடுவார்.

‘கண்கண்ட தெய்வம்’ என்ற பெயரில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒரு படம் உருவாக்கினார். ரங்காராவ் தம்பியாக எஸ்.வி.எஸ்., மனைவி பத்மினி. இவர்களுக்கு 3 பிள்ளைகள். வடி கட்டின வாத்து மடையர்கள். எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் மூவருமே ஃபெயில் என்று பேப்பர் செய்தியில் தெரிந்ததும் புளியம் விளார் ஒடித்து மூன்று பேரையும் விளாசி சக்கையாகப் பிழிந்து விடுவார். கேமரா ‘கட்’ சொன்ன பிறகும் அடிப்பது நிற்கவில்லை. வலிதாளாமல் ஒருவன் அவர் வேஷ்டியையே அவிழ்த்து விட்டான். டைரக்டர் ஓடிப் போய் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

‘அரங்கேற்றம்’ படத்தின் புரோகிதம் செய்கிற சாஸ்திரி வேடம். தன் மகள் குடும்பத்தைக் காப்பாற்ற ஹைதராபாத் சென்று ஏதோ வேலை பார்க்கிறாள் என்று நினைத்தவர் அவள் செய்தது பாலியல் தொழில் என்று தெரிந்ததும், இனி அவள் என் மகளே இல்லை என்று குளத்தில் மூழ்கி ஒதுக்கி விடுவார்.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் கிறுக்கு குமாஸ்தா வேடம். 3 பெண்கள். மாப்பிள்ளை யாருக்கும் அமையாமல் திண்டாடுவார். அந்தச் சூழ்நிலையிலும், கல்யாணம் செய்ய சம்மதிக்காத மாப்பிள்ளை வீட்டாரை மூன்றே வார்த்தைகளில் ‘எழுந்து போங்கடா முண்டங்களா’ என்று விரட்டி விடுவார்.

பாரதியார் வேடம். அந்த பாரதியே நேரில் வந்தாலும் அவரைப் போல் நடிக்க முடியாது. மத்தியான சமையலுக்குப் பக்கத்து வீட்டில் அரிசி கடன் வாங்கி வந்திருப்பார் மனைவி செல்லம்மாள். பசியில் பறந்த சிட்டுக்குருவிகளுக்கு அவற்றை அப்படியே போட்டு, அவை சாப்பிடும் அழகை ரசிப்பார். ‘செல்லம்மா இதைச் சமைத்தால் நாம் இருவர் மட்டுமே பசியாறுவோம். இப்போது 10-15 ஜீவன்கள் பசி தீர்ந்து விடும் செல்லம்! உலகத்தில் மனிதப் பிறவியைத் தவிர எந்த ஜீவராசியும் பிச்சை எடுப்பதில்லை!’ என்பார்.

ஆதிபராசக்தி

‘ஆதிபராசக்தி’ படத்தில் அபிராம பட்டராகவே வாழ்ந்து விட்டார். அபிராமி பக்தரான அவர் இன்று இரவு முழு நிலவு வரும் என்று அமாவாசையன்று சொல்லிவிடுவார். நீ சொன்னது போல முழு நிலவு வராவிடில் நெருப்பைக் கொளுத்தி அதில் உன்னைத் தூக்கிப் போட்டுவிடுவோம் என்பார் ராஜா.

அபிராமி சிலை முன்பு- அவர் உணர்வுப்பூர்வமாக பேசும் நடிப்பு. நிலவு தோன்ற, ‘சொல்லடி அபிராமி’ என்று கண்ணீர் மல்க அவர் பாடும் பாடல் படம் பார்த்தோர் நெஞ்சை விட்டு அகலாது.

நடிப்புத் தொழிலில் வாய்ப்புகள் குறைந்தபோது, ரெட்ஹில்ஸ் பகுதியில் கரனோடை கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கி அவரே கலப்பை பிடித்து உழுது விவசாயம் பார்த்தார். ஏழுமலையான் மீது ஏதோ கோபம். அரை டிராயர், தோளில் ஒரு துண்டு போட்டுக் கொண்டு வெறுங்காலில் 120 மைல் திருப்பதிக்கு நடந்தே போய் வெங்கடாசலபதியுடன் சண்டை போட்டு விட்டுத் திரும்பினார்.

‘காவல் தெய்வம்’ ஜெயகாந்தனின் கைவிலங்கு குறுநாவலை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட படம். எஸ்.வி.எஸ்., தயாரிப்பு. கே.விஜயன் முதன் முதல் இயக்கம். நானும் லட்சுமியும் ஜோடி. சிவாஜி சாமுண்டி கிராமணி என்ற ஒரு கள் இறக்கும் தொழிலாளி வேடம். 3 நாள் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

சிறுமியான தன் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரையும் பாளையைச் சீவுவது போல, அவர்கள் தலையைச் சீவி பழி தீர்த்துக் கொள்வார் சிவாஜி.

ஓ.ஏ.கே.தேவரை சிறைச்சாலையில், கம்பிகளை வளைத்து உள்ளே சென்று -ஹிரணியனை நரசிம்ம அவதாரத்தில் விஷ்ணு வதம் செய்தது போல வயிற்றைக் கிழித்துக் கொலை செய்து விட்டு, சிறை அதிகாரி பின் நடந்து செல்லும் காட்சி இப்போது பார்த்தாலும் சிலிர்க்கும். படம் பார்த்த சிவாஜி எஸ்.வி.எஸ்-சின் சாந்தமான அமைதியான முகம், கருணை மிக்க பார்வை முன்பு, தன் நடிப்பு அடிபட்டு போய்விட்டது என்று சொல்லி- அவர் கொடுத்த சன்மானத்தை வாங்க மறுத்துவிட்டார்.

திருமண வரவேற்பில்

அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து அவர் கடனை அடைப்பேன் என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். படப்பிடிப்பு இடைவேளையில் டைரக்டர், கேமராமேன், உதவியாளர்கள், பத்துப் பாத்திரம் தேய்க்கும் பெண் இவர்கள் கடைசியாகச் சாப்பிடுவார்கள். அவர்கள் மோர்சாதம் சாப்பிட்டு முடியும்போது, ‘சடார்’ என்று பாய்ந்து அந்த பத்து ஊழியர்களின் எச்சில் இலைகளையும் ஒன்றாகச் சேர்த்து, எடுத்துச் சென்று குப்பைக்கூடையில் போடுவார் எஸ்.வி.எஸ். ‘என்னண்ணா பண்றீங்க’ என்று கேட்டால், ‘நான்’ங்கற அகந்ததை போகணும்னா அப்பப்ப இப்படிச் செய்யணும்!’ என்பார்.

இவரைப் போன்றவர்களுக்கு வள்ளுவர் எழுதிய குறள்:

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

---

குறள் 27 மேலோர்

யு.கே.வில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவர் என் மகன் கார்த்தியின் கல்லூரித் தோழன் பக்ருதீன். திருநெல்வேலி பூர்வீகம். கல்யாணமாகி, ஒரு குழந்தை ஒண்ணரை வயதாகியிருந்தது.

ஒரு மாத லீவில் சொந்த ஊர் பார்க்க சென்னை வந்தார். 5 நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்துத் தங்கினார்கள். சென்னை -மதுரை ஒரு மணி நேரம் விமானப் பயணம். அங்கிருந்து 3 மணி நேரம் காரில் பயணித்தால் நெல்லை சேர்ந்து விடலாம். ஆனால், காரில் பயணித்தால் வழியில் நம் நாட்டின் அழகை ரசிக்கலாம் என்று டூரிஸ்ட் கார் ஒன்று ஏற்பாடு செய்தார்கள்.

அதிகாலை 6 மணிக்கு எழுந்து தயாராகி 7 மணிக்குப் புறப்படும் முன் ஓட்டலில் ரூம் சர்வீஸ் போன் செய்தார் பக்ருதீன். குழந்தைக்கு சுத்தமான பால் ஒரு டம்ளர் அனுப்புங்கள் என்றார்.

பக்ருதீன்

‘சார்! இங்கு தனியே பால் விற்பதில்லை. காபிக்கு மிக்ஸ் பண்ணும் பால் இருக்கிறது. அனுப்பி வைக்கிறேன். ஆனால், காபிக்கும் சேர்த்துத்தான் பில் போடுவோம்!’ என்றனர்.

ஏதாவது செய்யுங்கள். பாலை அனுப்புங்கள் என்றார். பாட்டிலில் பாலை ஊற்றி எடுத்துக் கொண்டு அறையை காலி செய்து அக்கவுண்ட் செட்டில் செய்து புறப்பட்டனர்.

திண்டிவனம் ஊருக்கு முன்னால் பாதையோரம் கார், லாரி பயணிகளுக்கு சிற்றுண்டி தரும் கடைகள் வரிசையாக இருந்தன.

‘டிரைவர், அந்த டீக்கடைப் பக்கம் வண்டியை நிறுத்துங்க!’ என்றார் பக்ருதீன் மனைவி.

‘பக்கத்தில் திண்டிவனம் இருக்கு. ஊர் சுத்தமா இருக்கும். அஞ்சு நிமிடத்தில் போயிரலாம்! ’என்றார் பக்ருதீன்.

‘இது கிராமப் பகுதி. இங்குதான் கலப்படமில்லாத பால் கிடைக்கும். அந்த கடையோரம் வண்டியை நிறுத்துப்பா!’ என்றார் மனைவி.

ஒரு வாரம் தாடியுடன் 70 வயது வெள்ளை முடி தாத்தா கடையிலிருந்து கார் அருகே வந்து ‘என்ன தாயி வேணும்?’ என்று கேட்டார்.

‘குழந்தைக்குப் பால் வேணும்!’ என்றார் மனைவி.

கார்த்தி -பக்ருதீன்

‘பாட்டிலைக் குடுங்க!’-ன்னு வாங்கிப் போய் வெந்நீரில் பிரஷ் போட்டு நன்றாக பாட்டிலைக் கழுவி சுத்தமான பால் நுரையுடன் ஆற்றி பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தார் பெரியவர்.

‘‘எவ்வளவு காசு!’ என்றார் பக்ருதீன்.

‘குழந்தைக்குப் பால் குடுக்கறதுக்கு நாங்க காசு வாங்க மாட்டோம்!’ என்றார் பெரியவர்.

‘பரவால்லே வாங்கிக்குங்க!’

‘தம்பி! குழந்தைக்கு பால் தர்றது சாமிக்கு நைவேத்தியம் பண்ற மாதிரி. சாமிக்குப் படையல் வைக்கிற மாதிரி. 100 குழந்தைங்க வந்தாலும் இலவசமாத்தான் பால் குடுப்பமே தவிர, காசு வாங்க மாட்டோம்!’ என்றார் பெரியவர்.

விக்கித்துப் போய் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

டீக்கடை தாத்தா

அதற்குள் குழந்தை பாலைக் குடித்துவிட்டது.

‘பாருங்க. குழந்தைக்கு நல்ல பசி. பாட்டிலை காலி பண்ணிடுச்சு. குடுங்க. இன்னொரு பாட்டில் ஊற்றித் தர்றேன். வழியில் கடைகள் இருக்குமோ என்னமோ?’ என்று சொல்லி பாட்டிலை வாங்கி மீண்டும் ஒரு பாட்டில் பால் ஊற்றிக் கொடுத்தார் பெரியவர்.

இதைத்தான் மேலிருப்பவர்கள் எல்லாம் மேலானவர்கள் இல்லை. கீழிருப்பவர்கள் எல்லாம் கீழானவர்கள் இல்லை என்கிறார் வள்ளுவர்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.

---

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x