Published : 15 Feb 2016 10:16 AM
Last Updated : 15 Feb 2016 10:16 AM
உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும், மெய்யியல், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் முக்கிய பங்காற்றியவருமான ஆல்ஃபிரட் நார்த் ஒயிட் ஹெட் (Alfred North Whitehead) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
#
இங்கிலாந்தின் ராம்ஸ்கேட் என்ற நகரில் பிறந்தார் (1861). அப்பாவும் அவரது உறவினர்களில் பலரும் மத போதகர்கள். தாத்தா சிறுவர்களுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரது தந்தையும் அங்கே பணியாற்றினார். ஆனால் தன் மகனை அங்கே படிக்க வைக்காமல் ஷெர்போன் என்ற சிறந்த தனியார் பள்ளியில் சேர்த்தார்.
# இந்த மகன், சிறு வயதில் கணிதத்திலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 1880-ம் ஆண்டு கணிதத்தில் பட்டம் பெற்றார். 1884-ல் டிரினிட்டியில் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1910 வரை அங்கே கணிதமும் இயற்பியலும் கற்பித்தார்.
# இயற்கணிதம் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 1920-ம் ஆண்டு ‘கான்சப்ட் ஆஃப் நேச்சர்’ என்ற நூலை வெளியிட்டார். மேலும் ‘ட்ரிட்டிஸ் ஆன் யுனிவர்சல் அல்ஜீப்ரா’, ‘பிராசஸ் அன்ட் ரியாலிட்டி, ரிலிஜியன் இன் தி மேக்கிங்’, ‘தி எய்ம்ஸ் ஆஃப் எஜுகேஷன் அன்ட் அதர் எஸ்சேஸ்’, ‘மோட்ஸ் ஆஃப் தாட்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.
# இயற்கணிதம், தர்க்கம், அறிவியல் தத்துவம், இயற்பியல், மாறா நிலைவாதம், கணித கோட்பாடுகள் உள்ளிட்ட களங்களுக்கும், ஒட்டு மொத்தமாக கல்விக்கும் அபாரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
# தனிப்பட்ட முறையில் அறிவை சோதிப்பதையே முன்னுரிமையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்வு முறை வீணானது என்று கூறினார். இவரது முன்னாள் மாணவரும் தத்துவ அறிஞரும் கணிதவியலாளருமான பெர்ட்ரன்ட் ரஸ்ஸலுடன் இணைந்து எழுதிய பிரின்சிபியா மாத்தமேட்டிகா என்ற நூல் கணிதவியலின் பேரிலக்கியமாகக் கருதப்படுகிறது.
# பிரிட்டனில் பிறந்தவர் என்றாலும் பெரும்பாலும் இவர் வாழ்ந்தது அமெரிக்காவில்தான். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக பணிபுரிந்தார். தர்க்கம் மற்றும் பகுப்பாய்வு தத்துவத் துறைகளை புதுமையான முறையில் அறிமுகம் செய்தார். செயல்முறை தத்துவத் துறையை வரையறுத்தவராக கருதப்படுகிறார்.
# இதுவே இன்று சூழலியல், இறையியல், கல்வி, இயற்பியல், உயிரியியல், பொருளாதாரம் மற்றும் உளவியல் உள்ளிட்டப் பல துறைகளுக்குப் பயன்படுத்தப்படும் அடிப்படைத் தத்துவமாகத் திகழ்கிறது. லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மற்றும் இம்பீரியல் காலேஜில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அறிவியலில் இளங்கலைப் பட்டப் படிப்பைத் தொடங்குவதற்கு உதவினார். (அதற்கு முன்னர் பி.ஏ. பட்டங்களே வழங்கப்பட்டன).
# முறையான பட்டம் பெறவில்லை என்றாலும் தத்துவத்துறையில் இவரது பங்களிப்புகள் பெரும் வரவேற்பையும் மதிப்பையும் பெற்றன. 1903-ல் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாக தேர்ந்தெடுக் கப்பட்டார். அரிஸ்ட்டாட்டிலின் சொசைடி ஃபார் தி சிஸ்டமேடிக் ஸ்டடி ஆஃப் ஃபிலாசபி அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
# இவரது 63-வது வயதில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1937-ல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் மசாசூசெட்சில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இறுதிவரை பணியாற்றி வந்தார்.
# அமெரிக்க முற்போக்கு இறையியல் களத்தில் இவரது பங்களிப்பு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தலைசிறந்த ஆசிரியராகவும் கணிதம் மற்றும் தத்துவக் களத்தில் முன்னோடியாகவும் செயல்பட்ட ஆல்ஃபிரட் நார்த் ஒயிட்ஹெட் 1947-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT