Last Updated : 14 Feb, 2016 01:48 PM

 

Published : 14 Feb 2016 01:48 PM
Last Updated : 14 Feb 2016 01:48 PM

நீயும் நானும்

வார்த்தையற்ற
மவுனப் பெருவெளியில்
நீயும் நானுமாய் கரங்கோர்த்து
நடக்கின்றோம்.
ஊரே பேசிக் கொண்டிருக்கிறது...
நம்மைப் பற்றி.

நீயும் நானும்
நாமாகி சேரும் கணமொன்றில்,
தூரமாய்... வெகுதூரமாய்
விலகியோடுகின்றன...
சாதியும் மதமும்.

காலத்தால் என்றும்
உலராததுதான்...
முத்த ஈரம்.
கண்களால்
பேசிக் கொள்கிறோம்.
உதடுகளால்
பார்த்துக் கொள்கிறோம்.
காதுகளால்
சுவாசித்துக் கொள்கிறோம்.
நாசியால்
கேட்டுக் கொள்கிறோம்.
காதலின் ரசமாற்றத்தில்
புலன்களும்கூட
தப்புவதில்லைதான்.

ருளென்பது
குறைந்த ஒளி’ என்ற
மகாகவி பாரதிக்கே
என் காதலைச் சமர்ப்பிக்கின்றேன்...
‘காதலென்பதே
மிகுந்த அன்பு’ என்பதை
உலகிற்குச் சொல்லவே.

காத்திருக்கும்
கணங்கள்தோறும்
பின்னோக்கியே
இழுத்துப் போகின்றன...
உன் நினைவுகள்.
எவ்வளவு தூரம் போனாலும்,
நீ அருகமர்ந்த அடுத்த நொடியே
ஓடி வந்து ஒட்டிக்கொள்கின்றன...
உன் நினைவுகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x