Published : 12 Feb 2016 10:43 AM
Last Updated : 12 Feb 2016 10:43 AM

ஆபிரகாம் லிங்கன் 10

அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர்

அடிமைத்தனத்தையும் இனவெறிக் கொடுமையையும் தனது நேர்மையான செயல்பாடுகளாலும் நெஞ்சுரத்தாலும் ஒழித்துக்கட்டிய வரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஹார்டின் என்ற கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் (1809). தந்தை செருப்பு தைத்தல், தச்சுத் தொழில், உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

# சிறிய வயதில் இந்தச் சிறுவன் புத்தகங்களை சத்தமாக வாசிப்பதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிசயப்படுவார்கள். பள்ளியில் படித்தது சுமார் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் யாரிடமாவது ஏதாவது புத்தகம் இருந்தால், எப்படியாவது கெஞ்சிக் கேட்டு வாங்கி வந்து படித்து முடித்துவிடுவான், சிறுவன்.

# ஊர் ஊராகச் சென்று பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் ஒருவரிடம் மூன்று வாரங்கள் ஆரம்பக் கல்வி பயின்றார். அந்த ஆசிரியர் தேர்வு நாளன்று ஒரு புத்தகத்தைக் கொடுத்து சில பக்கங்களை வாசிக்கச் சொன்னார். இந்தச் சிறுவனைவிட வயதில் மூத்த பையன்கள் வாசிக்க முடியாமல் திணறினார்கள். ஆபிரகாமோ மேடையில் சொற்பொழிவாற்றுவது போல கட கடவென வாசித்துக் காட்டினான்.

# கரித்துண்டால் சுவரிலும் தரையிலும் எழுதிப் பழகினான். கட்டுரைகள் எழுதினான். குழந்தைப் பருவத்தில் இருந்தே அப்பாவின் அனைத்து வேலைகளிலும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்தான். 14 வயதில் ஒரு விவசாயியிடமிருந்த ‘தி லைஃப் ஆஃப் வாஷிங்டன்’ என்ற ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வாங்குவதற்காக 12 மைல் தூரம் நடந்து சென்றான். இந்த நூலை திரும்பத் திரும்ப படித்தான்.

# நேர்மை, பிறரிடம் அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவுதல் ஆகிய குணாம்சங்களைக் கொண்டிருந்தான். நியு ஆர்லியன்சில் இவர்கள் வசித்தபோது, கறுப்பினத்தவர் விலைக்கு வாங்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும், சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தப்படுவதையும் கண்டு மனவேதனை அடைந்தார்.

# இந்தக் கொடுமைகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூண்டபோது இவருக்கு வயது 15. தனிப்பட்ட முறையில் படித்து வழக்கறிஞரானார். சிறிது காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1830-ல் குடும்பம் இல்லினாய்சுக்குக் குடியேறியது.

# அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அரசியலின் முதல் அஸ்திரமான பேச்சாற்றல் இவருக்கு கைவந்த கலை. ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்த பல தோல்விகளை அடுத்து, 25-வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

# அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். இது மற்றவர்களிட மிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது. 1860-ல் அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863-ல் வெளியிட்டார்.

# இதை எதிர்த்தும் ஆதரித்தும் உள்நாட்டுப் போர் தொடங்கியது. 4 ஆண்டுகள் நீடித்த இந்தப் போரில் எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசியது ‘கெஸ்டிஸ்பர்க் உரை’ என்று உலகப்புகழ் பெற்றுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 1864-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

# 1865-ம் ஆண்டு புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் பார்க்கச் சென்றிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். மறுநாள், ஏப்ரல் 15-ல் மரணமடைந்தார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியவரும், மனித குல வரலாற்றில் ஈடிணையற்ற சகாப்தமாக விளங்கிய லிங்கன் உயிரிழந்தபோது அவருக்கு வயது 56.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x