Published : 20 Aug 2021 09:55 AM
Last Updated : 20 Aug 2021 09:55 AM
குறள் க(வி)தை 16: புகழ்
பள்ளிப்படிப்பு இல்லை.
பரம்பரை பெருமை இல்லை.
இளமையில் வறுமையை
இறுகத் தழுவியவன்- ஆயினும்
கலையுலகின் நாயகி
கலைவாணி ஆசியினை
வரமாய்ப் பெற்று- திரையில்
வரலாறு படைத்திட்டான்...
ஒரு சாண் முகத்தில்
ஓராயிரம் பாவம் காட்டி,
சிம்மக்குரலில்
தீந்தமிழ் வசனம் பேசி
அவன் படைத்த பாத்திரங்கள் -திரையில்
அசைகின்ற ஓவியங்கள்.
கர்ணனாக,
கட்டபொம்மனாக
சிவாஜியாக
செங்குட்டுவனாக
அரிச்சந்திரனாக
அசோகனாக
அப்பராக
ஐந்தாம் ஜார்ஜாக
வ.உ.சி.யாக
வாஞ்சியாக
அவன் ஏற்ற வேடங்கள்
எங்களுக்குப் பாடங்கள்
நடக்கும் நடையில்
நானூறு வகை காட்டினான்
மரமேறிக்கு ஒரு நடை
மனோகரனுக்கு ஒரு நடை
சட்டி சுட்டதடா பாடலுக்கு ஒரு நடை
போனால் போகட்டும் போடாவுக்கு ஒரு நடை
மொத்தத்தில்-
நவரசங்களையும்
நமக்கு
நவராத்திரியில்
காட்டிவிட்டான்.
கிறிஸ்துவுக்கு முன்
கிறிஸ்துவுக்குப் பின்
என்று
மானுட வரலாறு தொடர
சிவாஜிக்கு முன்
சிவாஜிக்குப் பின்
என்று
தமிழ்த் திரையுலக வரலாறு தொடரும்...
வாழ்க சிவாஜி
ஓங்குக அவர் நாமம்..
-செவாலியே சிவாஜி விருது அவருக்குக் கொடுக்கப்பட்டபோது மேடையில் நான் கூறிய கவிதை வரிகள் இவை. இந்த மகா கலைஞனுக்கும் பொருந்தும் குறள்...
‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று!’
(1995- ஏப்ரல் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் செவாலியர் விருது பெற்ற சிவாஜி பாராட்டு விழாவில் என் உரை)
--------------------
குறள் கதை 17: துணிவு
மதுரை உசிலம்பட்டி பக்கத்தில் எழுமலை கிராமத்தில் பிறந்தவர் கலைஞானம் அண்ணா. 2-ம் வகுப்பு மட்டுமே படித்தவர், இன்றும் 92 வயதில் மூளையில் ஆயிரம் கதைகளுக்கான கருவை வைத்துள்ளவர். இவரோடு ஐந்து குழந்தைகள். அப்பா பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளார்க் வேலை பார்த்தவர். 39 வயதில் அப்பா அகால மரணமடைந்து விட, விதவையான தாயார் சுட்டுத்தரும் இட்லிகளை தெருத்தெருவாக விற்றவர். 6 வயதில் ஊமைப்படம் பார்த்தார். 8 வயதில் டூரிங் தியேட்டரில் அம்மாவிடம் 2 அணா திருடி எடுத்துப் போய் ஒன்றரை அணாவுக்கு டிக்கெட், அரை அணாவிற்கு முறுக்கு வாங்கி சாப்பிட்டார். வீடு வந்ததும் அம்மாவிடம் அடி வாங்கி வீட்டை விட்டு விரட்டப்பட்டார்.
டூரிங் டாக்கீஸில் முறுக்கு விற்கும் வேலை. 19 வயதுக்குள் இப்படி ஓசியிலேயே ஆயிரம் படம் பார்த்திருப்பார். பின் சென்னை வந்தார். திரையுலகில் கதை விவாதம், தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என்று சிரஞ்சீவியாய் இன்று வரை வாழ்ந்து வருகிறார்.
1978-ன் தொடக்கம். தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் வேலை பார்த்த நேரம். தேவர் அண்ணா, ‘கலைஞானம், குடும்பம் குழந்தைன்னு ஆயிடுச்சு. அவங்களுக்கு ஏதாவது சேர்த்து வைக்கணுமல்ல? நீ படம் எடு. நான் பைனான்ஸ் பண்றேன்!’ என்றார்.
கலைஞானம் கதை ‘ஆறு புஷ்பங்கள்’ என்ற பெயரில் படமாகி நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லன் வேடம். படப்பிடிப்பு சமயத்தில் அவரோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது.
துறுதுறுவென்று வித்தியாசமாக எதையும் ஸ்டைலாகச் செய்யும் ரஜினியை அவருக்கு பிடித்துப் போயிற்று. படம் எடுத்தால் இவரை வைத்துத்தான் முதலில் எடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
தேவர் அண்ணா சொன்னதும், ராயப்பேட்டையில் வாடகை வீட்டில் இருந்த ரஜினியைப் பார்த்து கதை சொன்னார். கதை நன்றாக இருக்கிறது. யாருண்ணே ஹீரோவா நடிக்கறாங்க’ன்னு ரஜினி கேட்க, ‘நீதாம்பா’ என்று இவர் சொல்ல, ‘விளையாடறீங்களா. என்னை ஹீரோவா போட்டு யார் படம் எடுப்பாங்க. எனக்கு வில்லன் வேடத்தில் நடிக்கத்தான் பிடிக்கும்!’ என்றார் ரஜினி.
‘மத்த படங்களில் வில்லனா நடி. இதில் நீதான் ஹீரோ!’ - ரஜினிக்கு தலை சுற்றிவிட்டது.
சம்பளம் ஆறு புஷ்பங்களில் ரூ.7000. இப்ப ரஜினி பரபரப்பாக வளர்ச்சியடையும் நேரம். கலைஞானம் அண்ணா உனக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம். அட்வான்ஸ் ரூ.5 ஆயிரம் நாளை தருகிறேன்!’ என்று சொல்லி விட்டு வந்துவிட்டார். எங்கும் பணம் புரட்ட முடியவில்லை. மனைவியின் தாலியை விற்று ரூ.4500, அத்துடன் வெங்கட்ராமய்யரிடம் ரூ.500 கடன் வாங்கி ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுத்தார்.
தேவர் அண்ணாவைப் போய்ப் பார்த்தார். விவரம் சொன்னார். ‘‘மடையா, மடையா! புதுமுகத்தை ஹீரோவா போட்டா எவன்டா பைனான்ஸ் பண்ணுவான்? அந்தக் கதையில வில்லன் வேஷம் வருதல்லவா? அந்த வேஷத்தில் ரஜினி நடிக்கட்டும். ஹீரோவா ஜெய், ரவிச்சந்திரனைப் போடு...!’’
‘‘இல்லண்ணே. நான் வாக்குக் குடுத்துட்டேன்!’’
‘‘என் மூஞ்சிலயே முழிக்காதே. போடா வெளியே’’... தேவர் அண்ணா துரத்திவிட்டார்.
பிறகு பணம் புரட்ட வேண்டுமே. உடந்தை மணாளன் வட ஆற்காடு- தென் ஆற்காடு -செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு படம் வாங்கிக் கொண்டு ரூ.10 ஆயிரம் கொடுத்தார். திருச்சி, பெங்களூர் ஏரியாக்களுக்கு ராஜ்கிரண் முன்பணம் தந்தார். சென்னை ஏரியாவை ரூ.5000க்கு வாங்கியிருந்த ஒருவரிடம் மேற்கொண்டு இன்னும் ரூ.5000 கொடுத்து கலைப்புலி தாணு வாங்கிக் கொண்டார்.
எப்படியோ பணம் புரட்டி மேட்டுப்பாளையம் சென்று 100 அடி பாறை- கொதிக்கும் பாறை மீதெல்லாம் ரஜினியை ஏற்றி விட்டு நடிக்கச் சொல்லி படத்தை முடித்துவிட்டார்.
பின்னணி இசை (RE- RECORDING) சேர்க்க 3 நாளைக்கு மட்டுமே கலைஞானத்திடம் பணம் இருந்தது. இளையராஜா படம் நன்றாக வரும். 4 நாள் தேவை என்றார். என்னிடம் பணம் இல்லையே என்று இவர் சொல்ல, என் சம்பளத்தில் குறைத்துக் கொள்கிறேன் என்று ராஜா சொல்லி வேலை முடிந்தது.
படம் வெளியாயிற்று. ராஜகுமாரி தியேட்டரில் மேட்னி ஷோ. ஆரவாரமான கைதட்டல். வாஹினி ஸ்டுடியோவிலிருந்து ரஜினியை அழைத்து வந்து காட்ட அவர் ஆகாயத்தில் மிதந்தார்.
தேவர் அலுவலகத்திலிருந்து போன். நடுங்கிக்கொண்டே கலைஞானம் போனார். ‘டேய் கலைஞானம்! நீ ஜெயிச்சிட்டேடா. நிச்சயம் நீ தோற்றுப் போவே. கடனை அடைக்க என் கால்ல விழுந்து கெஞ்சுவே. செட்டில் பண்ணிட்டு, உன்னைக் கூட வச்சுக்கலாம்னு நெனச்சேன். ஆனா, அந்த முருகன், உன்னை ஜெயிக்க வச்சு என் மூஞ்சில கரியைப் பூசிட்டான்டா. கலைஞானம்! ரஜினியைப் போட வேண்டாம்னு நான்தான் உங்கிட்ட சொன்னேன். இப்ப நானே கேக்கறேன். ரஜினி கால்ஷீட் 2 படத்துக்கு வாங்கிக் கொடுடா!’’...
இவர் வாங்கிக் கொடுத்தார். 'தாய்மீது சத்தியம்', 'அன்னை ஓர் ஆலயம்' என இரண்டு படங்களில் தேவர் பிலிம்ஸில் ரஜினி நடித்துக் கொடுத்தார்.
கலைஞானம் அண்ணா துணிச்சலுக்குப் பொருந்தும் குறள்:
‘எண்ணித் துணிக கருமம்- துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு!’
---
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT