Published : 09 Feb 2016 02:43 PM
Last Updated : 09 Feb 2016 02:43 PM

விஐபிக்கள் குறி வைக்கும் மயிலாப்பூர் தொகுதி

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இதுவரை விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதி, தென் சென்னை பாராளுமன்றத்தொகுதிக்குள் வருகிறது.

அதிக அளவில் அரசு ஊழியர்களும், பிராமண சமுதாயத்தினரும் , அதே அளவில் குடிசைபகுதி மக்களும் நிறைந்துள்ள தொகுதி. இந்த தொகுதியில் திமுக , அதிமுக மாற்றி மாற்றி வென்றுள்ளன. ஆரம்பத்தில் திராவிட கட்சிகள் போட்டியிடாத 1952 தேர்தல் மற்றும் திமுக முதன் முதலில் போட்டியிட்ட 1957 ஆம் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமி வென்றுள்ளார்.

பின்னர் 1962, 1967 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராம அரங்கண்ணல் வென்றிருக்கிறார். 1971ல் திமுக அணியை எதிர்த்து போட்டியிட்ட காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் டி.என்.அனந்தநாயகி வென்றுள்ளார்.

1977 தேர்தலில் அதிமுக செல்வாக்கையும் மீறி லோக்கல் திமுக பிரமுகர் டி.கே.கபாலி வென்றார் பின்னர் அவர் அதிமுகவில் இணைந்ததன் மூலம் மயிலாப்பூர் தொகுதியில் 1980 ல் அதிமுக வெற்றிகணக்கை துவக்கிவைத்தார். அதன் பின்னர் 1984 ல் தற்போது அமைச்சராக உள்ள வளர்மதி முதன்முதலாக போட்டியிட்டு வென்றார். இரண்டாவது முறையாக அதிமுக வென்றது.

பின்னர் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989ல் அதிமுக இரண்டாக உடைந்து சந்தித்த தேர்தலில் திமுகவின் என்.கணபதி என்பவர் எளிதாக வென்றார். ஆனால் 1991 தேர்தலில் ஜெயலலிதா தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அதிமுக மீண்டும் மயிலாப்பூர் தொகுதியை தக்கவைத்து கொண்டது. ரங்கதாஜன் வெற்றி பெற்றார். 1996 ல் பலத்த எதிர்ப்பை அதிமுக சந்தித்த நிலையில் தமாக உருவாகி ரஜினி வாய்ஸ் எல்லாம் சேர்ந்த நிலையில் திமுக மீண்டும் ஜெயித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுகள் பெரிய வாக்குகள் வித்யாசத்தில் திமுக வேட்பாளர் ராமஜெயம் வென்றார்.

2001 ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக தலைமையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கே.என்.லட்சுமணன் வென்றார். மீண்டும் 2006 அதிமுக சார்பில் எஸ்.வி.சேகரும், 2011 தேர்தலில் அதிமுக ராஜலட்சுமியும் வென்றதன் மூலம் தொடர்ந்து அதிமுக தொகுதியை தக்க வைத்துக்கொண்டது.

தொடர்ச்சியாக பெரிய எதிர்ப்புகள், கட்சி உடைந்த காலகட்டங்களை தவிர அதிமுகவே அதிக தடவை வென்றுள்ள தொகுதி மயிலாப்பூர் . ஆகவே மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்பதால் பெரும்பாலானோர் மயிலாப்பூர் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்கள் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது. இதில் விருப்பமனு தாக்கல் செய்துள்ள விஐபிக்கள் எண்ணிக்கை 25 க்கும் மேல் .

நிதியமைச்சர் ஓபிஎஸ் மகன் பிரதீப் பன்னீர்செல்வம், முன்னாள் டிஜிபி நட்ராஜ், மிடாஸ் மோகன் மனைவி, புஷ்பவனம் குப்புசாமி மனைவி அனிதா குப்புசாமி, காஞ்சிமடத்துக்கு நெருக்கமான ராஜாராம் , ஆந்திரகிளப் நிர்வாகி ரெட்டி மற்றும் இவர்களைவிட முக்கியமான விவிஐபி முதல்வரின் நெருக்கமான இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் விருப்பமனு அளித்துள்ளார்.

இதில் விருப்பமனு தாக்கல் செய்துள்ள விஐபிக்கள் அனைவரும் மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள் என்பதால் எப்படியும் தங்களுக்கு தொகுதி கிடைத்துவிடும் என்று நினைக்கின்றனர். விஐபிக்கள், விவிஐபிக்கள் குறிவைக்கும் தொகுதியாக நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது மயிலாப்பூர் தொகுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x