Published : 03 Feb 2016 11:12 AM
Last Updated : 03 Feb 2016 11:12 AM

எலிசபெத் பிளாக்வெல் 10

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர்

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரும், பெண்களின் மருத்துவக் கல்விக்கான முன்னோடியுமான எலிசபெத் பிளாக்வெல் (Elizabeth Blackwell) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் (1821) பிறந்தார். தந்தை சர்க்கரை ஆலை உரிமையாளர். 1830-ல் குடும்பம் நியூயார்க் நகரில் குடியேறியது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒஹியோவுக்கு இடம்பெயர்ந்தனர். தந்தை 1838-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

l குடும்ப செலவை சமாளிக்க, சகோதரிகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கினார் எலிசபெத். பள்ளியை வெற்றிகரமாக நடத்தமுடியாததால், டியூஷன் வகுப்புகள் எடுத்தார். சிறுகதைகள் எழுதினார். இசை கற்றார். மகளிர் உரிமை தொடர்பான போராட்டங்கள், பிரச்சாரங்களில் பங்கேற்றார்.

l இவரது தோழி ஒருவர் பிறப்புறுப்பு தொற்றுக்காக ஆண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். ஒரு பெண் டாக்டர் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இவரிடம் வேதனையுடன் கூறினார். ‘நீ ஏன் மருத்துவம் படிக்கக் கூடாது’ என்றும் கேட்டார். அதுவே மருத்துவம் படிக்கும் உந்துதலை இவரிடம் ஏற்படுத்தியது.

l 12 மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்தார். ஆண்கள் மட்டுமே மருத்துவம் படித்த காலம் என்பதால், இவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, நியூயார்க் ஹோபர்ட் கல்லூரியில் இவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டது. ‘ஒரு பெண்ணை சேர்ப்பதா, வேண்டாமா?’ என்று 150 மாணவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

l படிப்பின்போதும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். அனைத் தையும் சமாளித்து 1849-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். அமெரிக் காவிலேயே முதன்முதலாக மருத்துவம் பயின்ற பெண் என்ற பெருமை பெற்றார்.

l உயர்கல்விக்காக ஐரோப்பா சென்றார். அப்போதும் நிராகரிக்கப் பட்டார். பாரீஸில் உள்ள லாமெடர்னைட் என்ற மருத்துவமனையில், மருத்துவர் என்பதற்கு பதிலாக மருத்துவ உதவியாளராக பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

l ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும்போது இவரது கண்ணில் ரசாயன திரவம் பட்டதால், ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். இதனால், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற ஆசை நிராசையானது. பின்னர், நியூயார்க் திரும்பியவர், மருத்துவப் பணியைத் தொடங்கினார். நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பல கட்டுரைகளை எழுதினார்.

l பெண்களின் உடல், மன வளர்ச்சி குறித்த தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். ஒரு மருத்துவமனை திறந்தார். இவரது தங்கையும் மருத்துவம் படித்து, அமெரிக்காவின் 3-வது பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உதவினார்.

l இங்கிலாந்து அரசால் ‘பெண் டாக்டர்’ என்று 1865-ல் அங்கீ கரிக்கப்பட்டார். இவரது தீவிர முயற்சியால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் ஃபார் வுமன்’ என்ற கல்வி நிறுவனம் 1874-ல் தொடங் கப்பட்டது. லண்டன் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

l கடும் போராட்டங்கள், தடைகள், சவால்கள், அவமானங்களை சந்தித்தாலும் அனைத்தையும் வென்று, பெண்களின் மருத்துவக் கல்வி உரிமையை நிலைநாட்டிய எலிசபெத் பிளாக்வெல் 89-வது வயதில் (1910) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x