Published : 02 Feb 2016 11:20 AM
Last Updated : 02 Feb 2016 11:20 AM

பா.வே.மாணிக்க நாயக்கர் 10

தமிழ் அறிஞர், பொறியியலாளர்

சிறந்த தமிழ் அறிஞர், பொறியியலாளரான பா.வே.மாணிக்க நாயக்கர் (Pa.Ve.Manikka Nayakar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

l சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் (1871) பிறந்தவர். பள்ளியில் படிக் கும்போதே கவிபாடும் ஆற்றல் கொண்டிருந்தார். தமிழில் அதிக புலமையும், ஆர்வமும் கொண்ட வர். துறவி முனுசாமி நாயுடு உதவியால் சேலம் கல்லூரியில் சேர்ந்து, பட்டம் பெற்றார்.

l சேலம் கல்லூரி முதல்வரின் உதவி யால், சென்னை கிண்டி பொறியி யல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 4 பவுன் தங்கப் பதக்கத்தை பரிசாகப் பெற்றார்.

l பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராக 1896-ல் சேர்ந்தார். திருச்சியில் பணியாற்றியபோது, ஞாயிறுதோறும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நிகழ்த்துவார். 1919-ல் கூட்டப்பட்ட புலவர்கள் மாநாட்டில், தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் அனைத்து மொழிகளில் உள்ள சொற்களையும் எழுத முடியும் என்று நிரூபித்தார்.

l தமிழுக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர். பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து பல அறிவியல் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினார். மறைமலையடிகளால் ‘தனித்திறமார் பேரறிஞர்’ என்று பாராட்டு பெற்றவர்.

l மு.ராகவையங்காரின் தொல்காப்பிய ஆராய்ச்சி நூலைப் படித்த இவர், அதில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக அவருக்கு 4 கடிதங்கள் எழுதினார். அவற்றுக்கு 2 கடிதங்கள் வாயிலாக அவர் பதில் எழுதினார். ந.மு.வேங்கடசாமியிடம் இருந்தும் இவருக்கு 2 பதில் கடிதங்கள் வந்தன. 8 கடிதங்களையும் தொகுத்து ‘தமிழ்வகைத் தொடர் தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார்.

l நாமக்கல் கவிஞரின் ஓவியத் திறமையை அறிந்த இவர், அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று ஐந்தாம் ஜார் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். நிகழ்ச்சியை ஓவியமாகத் தீட்டிய கவிஞருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

l ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித் தார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். ‘தமிழ் உச்சரிப்பு’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தமிழின் சிறப்பை ஆங்கிலேயர் அறியவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாற்றுவார்.

l ‘டார்வினுக்குப் பிறகு ஐரோப்பியர்கள் கண்டறிந்த பல இயற்கை உண்மைகளை தமிழ் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு உணர்ந்திருந்தனர்’ என்பது இவரது நம்பிக்கை. ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கிலும் புலமை பெற்றவர். தையல், தச்சு, ஓவியம், இசையிலும் பயிற்சி பெற்றிருந்ததால், பலரும் இவரை ‘பல்கலைக்கழகம்’ என்றனர்.

l பொறியியல் துறையில் 60-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். விலங்கியல், வானியல், நிலவியல் துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கான்க்ரீட் பற்றி ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணைக்கான வரைமுறையை அமைத்தவர் என்றும் கூறப்படுகிறது.

l அறிவியல் சிந்தனையாளர், கணக்கியல் முறைகளைக் கண்டறிந் தவர், ஒலி நூலாராய்ச்சியில் ஈடு இணையற்றவர் என்றெல்லாம் போற்றப்பட்ட பா.வே.மாணிக்க நாயக்கர், ஜோதிடக் கலையிலும் வல்லவர். தனது ஆயுட்காலம் 60 ஆண்டுகள் என்று கணித்து வைத்திருந்தார். 60-வது வயதில் (1931) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x