Published : 01 Feb 2016 10:42 AM
Last Updated : 01 Feb 2016 10:42 AM

ஸ்டான்லி ஹால்10

அமெரிக்க முன்னோடி உளவியலாளர்

அமெரிக்க முன்னோடி உளவியலாளர், கல்வியாளரான கிரான்வில் ஸ்டான்லி ஹால் (Granville Stanley Hall) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆஷ்ஃபீல்டு நகரில் (1844) பிறந்தார். பட்டப் படிப்பு முடித்ததும் யூனியன் தியாலஜி செமினரியில் பயின்றார். இவர் படித்த ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் பிசியலாஜிகல் சைக்காலஜி’ என்ற நூல், வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

l ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். அமெரிக்காவில் உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனாலும், படித்த துறை சம்பந்தமாக வேலை கிடைக்காததால், 1879-ல் ஜெர்மனி சென்று, பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு லெய்ப்சிக் ஆய்வுக்கூடத்தில் சிறிது காலம் ஆய்வுகளை மேற்கொண்டார்.

l அமெரிக்கா திரும்பியவர், ஒஹியோ மாநிலத்தின் ஆன்டியோக் கல்லூரியிலும் பிறகு வில்லியம்ஸ் கல்லூரியிலும் ஆங்கிலம், தத்துவம் கற்றுக்கொடுத்தார். பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையில் உளவியலையும், கற்பித் தல் வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தார். அங்கு ஒரு ஆய்வகத் தையும் தொடங்கினார். இது அமெரிக்காவின் முறைசார்ந்த முதலாவது உளவியல் ஆய்வுக்கூடம் என்று பெயர் பெற்றது.

l ‘பள்ளிக்கல்வி, பட்டப்படிப்பை முடிக்கவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தக்கூடாது. பதின்பருவப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கேற்ப அவர்களுக்கு அறிவு புகட்டப்படுவது முக்கியம்’ என்று வலியுறுத்தினார்.

l அமெரிக்க உளவியல் கழகத்தின் முதல் தலைவராக 1892-ல் நியமிக்கப்பட்டார். கிளார்க் பல்கலைக்கழகத் தலைவராகப் பொறுப்பேற்று, 1920 வரை அங்கு பணியாற்றினார். சிக்மண்ட் ஃபிராய்டு, கார்ல் ஜங் போன்ற பிரபல உளவியல் நிபுணர்களின் சிறப்புரைக்கு ஏற்பாடு செய்தார்.

l இங்கு ஆசிரியராகவும், தலைவராகவும் பணியாற்றிய 32 ஆண்டு காலத்தில் எதிர்கால உளவியல் களத்துக்கான வலுவான அடித் தளத்தை ஏற்படுத்தினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் இவர் நிறுவிய ஆய்வுக்கூடங்கள் முழுமையான நவீன உளவியல் துறையின் அளவுகோல்களாகப் புகழ்பெற்றன.

l அதிகம் பிரபலமாகாத உளவியலாளர்களைக் கண்டறிந்து பிரபலப்படுத்தினார். உளவியல் தொடர்பாக பல பத்திரிகைகள், இதழ்களைத் தொடங்கினார். ஏராளமான அறிவுசார் அமைப்புகளை நிறுவினார். அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு நிறுவப்பட துணை நின்றார். அமெரிக்கன் ஃபிசிகல் ரிசர்ச் சொசைட்டியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

l மத உளவியல் சம்பந்தமாக ‘ஜீசஸ் தி கிறைஸ்ட் இன் தி லைட் ஆஃப் சைக்காலஜி’ என்ற நூலை 1917-ல் வெளியிட்டார். மானுடவியல், குழந்தைப்பருவ நடத்தைகள் குறித்து பல நூல்களை எழுதினார். முதுமையடைவது குறித்த நூலை 78 வயதில் எழுதினார்.

l சகோதர, சகோதரிகள் இல்லாமல் குடும்பத்தில் ஒரே குழந்தையாக இருப்பது நோய்க்கு சமமானது என்பார். இந்த குழந்தைகள் வாழ்க்கையில் எதனுடனும் ஒத்துப்போகும் திறனின்றி இருக்கும் என்று கூறியுள்ளார். பதின்பருவம் குறித்து ஏராளமான ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்.

l குழந்தை உளவியல், பதின்பருவ நடத்தை உளவியல் மற்றும் உளவியல் கல்வியின் ஆரம்பகர்த்தா என்று போற்றப்படும் ஸ்டான்லி ஹால் 80-வது வயதில் (1924) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x