Published : 23 Jul 2021 10:25 AM
Last Updated : 23 Jul 2021 10:25 AM
பன்முகக் கலைஞர் சிவகுமார் வழங்கும் திருக்குறள் கதைகள் 100 அறிமுக உரை
உலகப் பொதுமறை திருக்குறள் என்று ஏன் சொல்கிறோம்? அந்தக் குறளில் தமிழ்நாடு சிறந்தது என்றோ, தமிழ் மொழி சிறந்தது என்றோ, தமிழ்க் கடவுள் உயர்ந்தவர் என்றோ ஒரு வரி கூட இல்லை.
நாடு, இனம், மொழி, இறைவன் அனைத்தையும் கடந்த பொதுச் செய்திகளே அதில் உள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட குறளைப் பின்னால் வந்த இலக்கியங்கள் சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், கந்த புராணம் உள்ளிட்ட இலக்கியங்களில் ஆங்காங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளதே தவிர, பொதுமக்களுக்குத் திருக்குறளின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ராமாயணம், மகாபாரதக் கதைகள் தெருக்கூத்து வழியாக காலங்காலமாக கிராமப் புறங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அப்படித் திருக்குறளைச் சொல்ல முடியாது. அது பழமொழி போல, நீதி நூல் போல, கதாநாயகன்-கதாநாயகி என்று யார் பெயரையும் வைத்துக் கதைகளாகச் சொல்லப்படவில்லை என்பதால் பாமர மக்களைச் சென்றடையவே இல்லை என்று சொல்லலாம்.
இந்த உலகப்பொதுமறை திருக்குறள் நமக்குத் தெரியவந்ததே கி.பி.1812-ல்தான் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
13-ம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுதினார். கி.பி.1730-ல் வீரமாமுனிவர் மொழிபெயர்த்தார். இதுபோன்ற செய்திகள் மெத்தப் படித்தவர்களுக்கே தெரியும். சராசரி மனிதர்களுக்கு இவை சென்று சேரவேயில்லை.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை 209 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறள் பற்றி அக்கால மக்கள் அறிந்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.
வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனி தமிழ்நாட்டின் பெரும்பகுதியில் ஆட்சியைப் பிடித்திருந்தபோது, சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் பிரான்சிஸ் வொயிட் எல்லிஸ். அந்த எஃப். டபிள்யூ. எல்லிஸ்தான் சமஸ்கிருதம் கலக்காத ஒரு மொழி தென்னாட்டில் உள்ளது. அதுதான் தமிழ் என்று உலகுக்குச் சொன்னவன்.
44 மொழிகள் அடங்கிய திராவிட மொழிக் குடும்பம் இங்கு இருந்தது. அதில் ஒன்றுதான் தமிழ் என்றான் எல்லிஸ்.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக ஹாரிங்டன் இருந்தார். அவரிடம் கந்தப்பன் என்ற பெயரில் ஒருவர் சமையல் வேலை பார்த்தார். அவர் வசித்த ஊர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம். சமையல்காரருக்கு அடுப்பெரிக்க ஓலைச்சுவடிகளைச் சிலர் கொண்டு வந்து கொடுத்தார்கள். சென்னையில் கலெக்டர் எல்லிஸ் ஓலைச்சுவடிகளைச் சேகரிக்கிறாரே; அவருக்கு இது பயன்படும் என்று நினைத்தார்.
மதுரை கலெக்டர் ஹாரிங்டனிடம் கொடுத்தார். அவர்தான் எல்லீஸிற்கு அந்த ஓலைச்சுவடிகளை அனுப்பி வைத்தார். அந்த ஓலையில் இருந்தவைதான் திருக்குறள்.
தமிழ்ப் பேராசான் அயோத்திதாசர் பாட்டனார்தான் இந்தச் சமையல்காரர் கந்தப்பன்.
சென்னை கலெக்டர் எல்லிஸ்தான் 1812-ல் திருக்குறளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிட்டு வெளியிட்டார்.
கோவை மாவட்டம் சூலூரில் வசிக்கும் புலவர் செந்தலை கவுதமன் இதைத் தன்னுடைய உரையில் விரிவாக விளக்கமாகக் கூறியுள்ளார்.
குறளுக்கு பரிமேலழகர், மணக்குடவர் என்று ஆரம்பித்து டாக்டர் மு.வரதராசனார், திருக்குறள் முனுசாமி, கி.ஆ.பெ.விஸ்வநாதம்- கலைஞர் - பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்பட பல நூற்றுக்கணக்கான பேர் உரை எழுதியுள்ளனர்.
1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் திருக்குறளை எழுதி மக்களுக்கு நினைவூட்டியது.
என்ன செய்தும் இந்த உலகப்பொதுமறை ஒரு வேதம் போல் புத்தகங்களில் உள்ளதே தவிர பொதுமக்களிடையே போய்ச் சேரவில்லை.
பள்ளியில் படிக்கும்போது பத்து, இருபது குறள் மனப்பாடம் செய்வதோடு சரி. மற்றவர்களிடம் பேசும்போது பழமொழி போல திருக்குறளை உதாரணம் காட்டி பேசுவோரைத் தேட வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில்தான், வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை- அரசியல் உலகில் நிகழ்ந்தவற்றை - சினிமா உலகில் பார்த்தவற்றை, கேட்டவற்றை- எனது தனிமனித வாழ்க்கையில் அனுபவித்தவற்றைக் கதையாக்கி அந்தச் சம்பவங்களுக்குப் பொருந்துவது போல குறள்களைத் தேர்வு செய்து - அதுவும் கடினமான குறளாக இல்லாமல், எளிய வார்த்தைகளில் அமைந்த குறளைத் தேர்வு செய்து திருக்குறள் 100 என்ற உரையை 3 ஆண்டுகளாகத் தேர்வு செய்து வைத்துள்ளேன்.
கரோனா தொற்று நம்மைத் தாக்காமல் இருந்திருந்தால் சென்ற ஆண்டு, அக்டோபரில் ராமாயணம், மகாபாரதம் உரை போலவே 10 ஆயிரம் பேர் முன்னிலையில் உரை நிகழ்த்தி இருப்பேன்.
இந்த ஆண்டும் கல்லூரிகள் திறக்கிற மாதிரி தெரியவில்லை. திறந்தாலும், சமூக இடைவெளியில்லாமல், எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு இல்லை. முகக்கவசம் போடாமல் மாணவிகள் வந்தால்தான், நாம் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியும். ஆக, இந்த ஆண்டும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
அதனால் 'இந்து தமிழ் திசை' வாசகர்களுடன் ஆன்லைனில் முதலில் இதைப் பகிர்ந்து கொண்டு, சூழ்நிலை சாதகமாகும்போது, மேடையில் உரை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
நான் சொல்லும் கதைகளின் உண்மைத்தன்மையும், உருக்கமும், சுவையும் வாசகர்களை நிச்சயம் கவரும் என்று மனப்பூர்வமாக நம்பகிறேன்.
மேலும் இங்கே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். திருக்குறள் கதைகள்-100 உரை 3 ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்டவை. இதில் வரும் கதை மாந்தர்கள் -ஆண்கள், பெண்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகக் கலைஞர்கள், சிலரின் வாழ்க்கை வரலாற்றை ‘கொங்கு தேன், சித்திரச்சோலை, திரைப்படச் சோலை’ தொடர்களில் அந்தந்த இடத்திற்கு ஏற்ப ஏற்கெனவே நான் பயன்படுத்தி உள்ளேன். குறள் கதைகளில் அவர்கள் மீண்டும் வருவார்கள். அதை வாசகர்கள் சற்றே பொறுத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் நான் எழுதியுள்ள இந்தத் திருக்குறள் கதைகள் ஒவ்வொன்றுக்கும் 5-6 திருக்குறள்கள் பொருந்தலாம். எனக்குப் பிடித்த எளிய குறளை மட்டுமே இதில் பொருத்தியுள்ளேன். நீங்கள் உங்களுக்குப் பிடித்த குறளை பொருத்தி ரசித்துக் கொள்ளுங்கள்... இனி கதைக்குள் செல்வோம்...
*******************
திருக்குறள் கதைகள்: 1- புயல்
திருச்சியில் வழக்கறிஞர் தொழில் செய்யும் பெரியவர். ஒரு நாள் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு இரவு 10 மணி விமானத்தில் பயணம் செய்தார். பாதி வழியில், 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானி புயல் எச்சரிக்கை செய்தார்.
விமானத்திலிருந்த சுமார் 120 பயணிகளும் சிவன், விஷ்ணு, முருகன், விநாயகனை இந்துக்களும், ஏசுபிரானை கிறிஸ்தவர்களும், அல்லாவை இஸ்லாமியர்களும் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்துப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த வழக்கறிஞர் மட்டும், கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஜாலியாக இவற்றை வேடிக்கை பார்த்து வந்தார்.
நேராக விமானம் டெல்லிக்குச் செல்லாமல், புயலிலிருந்து தப்பிக்க 300 மைல் சுற்றி ஒருவழியாக பத்திரமாக டெல்லியில் இறங்கியது.
அத்தனை பயணிகளும் அளவு கடந்த மகிழ்ச்சியில், விமானிக்கு நன்றி தெரிவித்துப் புறப்பட்டனர். வழக்கறிஞர் அருகில் அமர்ந்திருந்த இஸ்லாமியருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் முன், இவரைப் பார்த்து, ‘ஏன் சார், புயல்னு கேள்விப்பட்டதும் அவனவன் உயிரைக் கையில் புடிச்சுகிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கிட்டிருந்தோம். நீங்க மட்டும் எந்தக் கவலையும் படாம கால் மேல் கால் போட்டு ஜாலியா உட்கார்ந்திருக்கீங்களே- எப்படி?’’ என்று கேட்டார்.
‘இத்தனை பேர், அவங்க சாமியக்கும்பிடறப்போ அவங்களையெல்லாம் காப்பாத்தற சாமி என்னை மட்டும் தனியா விட்டுடுமா? அதான் சும்மா இருந்தேன்!’ என்றார்.
‘பலே ஆசாமியப்பா நீங்க’ என்று கூறிவிட்டுப் போனார் இஸ்லாமியர்.
அந்த வழக்கறிஞரின் இளம் வயதில் ஒரு துன்பியல் சம்பவம். வழக்கறிஞருக்கு 36 வயது. சம்சாரத்துக்கு 29 வயது இருக்கும்போது அந்தம்மா இறந்துவிட்டார். 12 வயதில் ஒரு பையன். 9 வயது, 7 வயதில் 2 பெண்கள். மனைவி இறந்தபோது இவர் கண் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.
இவங்களை வளர்ப்பதற்கும் ஒரு பெண் வேண்டும்; இன்னொரு பெண்ணுக்கு வாழ்க்கை தந்த மாதிரியும் இருக்கும் என்று முகக்குறைபாடுள்ள ஒரு பெண்ணை மணந்துகொண்டார்.
‘இந்த மூன்று குழந்தைகளே நமக்குப் போதும். என் மூலமும் இன்னும் ஒரு குழந்தை வேண்டாம். கருத்தடை ஆபரேசன் (வாசக்டமி) நீங்கள் செய்து கொள்ளுங்கள்’ என்று அந்தப் பெண்மணி கேட்டபடியே அவரும் ஆபரேசன் செய்து கொண்டார்.
பெரிய பெண் ஆளாகி, திருமண வயது வந்ததும் நல்லபடியாக ஒரு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வைத்தார். புகுந்த வீடு போன மகள் அடுத்த ஆண்டு தலைப் பிரசவத்திற்கு அப்பா வீடு வந்தாள்.
மகப்பேறு மருத்துவமனையில் ஜெனரல் வார்டில் மகளைச் சேர்த்து விட்டுக் காத்திருந்தார். காலை 8, 9, 10, 11, 12 - பிற்பகல் 2 மணி ஆகியும் என்ன நிலவரம் என்று தெரியவில்லை. பிரசவ வார்டுக்குள் எட்டிப் பார்த்தார். அம்மா இறந்து 15 ஆண்டுகளாகி விட்டன. இருந்தாலும் பிரசவ வலி தாங்க முடியாமல், ‘அம்மா, இப்படி என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டியேம்மா. வலி தாங்க முடியலியேம்மா!’ என்று கத்திக் கதறினாள் மகள்.
வழக்கறிஞர் துடித்துப் போய்விட்டார். என்ன செய்து மகளைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. முதன் முறையாக நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று உணர்ந்து, ‘கொடுமைக்கார சாமி. எங்கடா இருக்கே? எம் மகளைக் காப்பாத்துடா!’ என்று கதறிவிட்டார்.
அந்த வழக்கறிஞர்தான் முத்து நாராயணன். அவர் மகள் சாந்தி. அவரது மருமகன் பட்டுக்கோட்டை பிரபாகர்.
இந்த உலகத்தைப் படைத்தது ஒரு மாபெரும் சக்தி. அதற்கு வடிவமெல்லாம் கிடையாது. மலைகள், அருவிகள், பறவைகள், விலங்குகள் என்று அத்தனை ஜீவராசிகளையும், மரம் செடி கொடிகளையும் படைத்தது அந்த சக்தி. அதைத்தான் கடவுள் என்கிறோம். அந்த சக்திக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு கிடையாது அப்படி ஒரு சக்தி இருக்கிறது என்று நாம் உணர்ந்து கொண்டால் நமக்குத் துன்பமில்லை என்பதைத்தான் வள்ளுவர்,
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’ - என்கிறார்.
--
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT