Published : 23 Feb 2016 09:42 AM
Last Updated : 23 Feb 2016 09:42 AM
வைட்டமின்களை கண்டறிந்தவர்
போலந்து நாட்டை சேர்ந்த உயிரி வேதியியலாளரும், வைட்டமின்களை கண்டறிந்தவர்களில் முதன்மையானவரு மான கஸிமிர் ஃபூங்க் (Casimir Funk) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# போலந்து தலைநகர் வார்ஸாவில் (1884) பிறந்தார். தந்தை தோல் மருத்துவர். பொதுப் பள்ளிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த தால், அந்த காலக்கட்டத்தில் பள்ளி யில் சேருவது மிகவும் சிரமமான காரியம். அதனால், ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார்.
# வால்ஷா ஜிம்னாசியம் பள்ளியில் 10 வயதில் சேர்க்கப்பட்டார். பட்டப் படிப்பை முடித்து, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உயிரியலில் மேல்படிப்பு பயின்றார். ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றார். 1904-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
# பாரீஸில் உள்ள பாஸ்டர் அறிவியல் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கரிமங்கள், அமினோ அமிலங்கள் குறித்து பயின்றார். அதுதொடர்பாக பல சோதனைகளை மேற்கொண்டார். சர்க்கரை, புரதங்கள், புரத வளர்சிதை மாற்றம் ஆகியவை குறித்தும் ஆராய்ச்சி செய்தார்.
# ஜெர்மனியில் இருந்து லண்டன் சென்றவர் லிஸ்டர் தடுப்பு மருந்து நிறுவனத்தில் இணைந்தார். அமினோ அமிலம் குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். பெரிபெரி நோய் குறித்து ஆராயும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. உணவுக் குறைபாடு மனித ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து இவரது ஆய்வு அமைந்தது.
# அரிசி பாலிஷ் செய்யப்படும்போது அகற்றப்படும் மேல் தோலை ஆய்வு செய்தார். பெரிபெரி நோயை குணப்படுத்தும் தன்மை அதில் இருப்பதை கண்டறிந்தார். சில உணவுப் பொருட்களை இயற்கை யான முறையில் உட்கொண்டால் பெரிபெரி, ரிக்கட்ஸ், ஸ்கர்வி போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்பதையும் கண்டறிந்தார்.
# உணவுப் பொருட்களில் இயற்கையாக இருக்கும் இத்தகைய பொருட்களை ‘விட்டா அமினஸ்’ (உயிர் + நைட்ரஜன் அடங்கிய ரசாயனக் கலவை) என்று குறிப்பிட்டார். இவையே பின்னர் ‘வைட்டமின்ஸ்’ என குறிப்பிடப்பட்டன. விட்டாமினஸ் பற்றிய கட்டுரையை 1912-ல் வெளியிட்டார்.
# லண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார். முதல் உலகப் போரின்போது அமெரிக்கா வந்தவர், அமெரிக்க குடியுரிமை பெற்றார். மீண்டும் போலந்து சென்று அரசு சுகாதார மையத்தில் உயிரி வேதியியல் துறைத் தலைவராக பணிபுரிந்தார். அங்கு சோதனைக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட இன்சுலினின் தரத்தை மேம்படுத்தினார்.
# இவரது முதல் புத்தகமான ‘டை விட்டமின்’ (Die Vitamine) 1922-ல் வெளிவந்தது. தொடர்ந்து பல நூல்களை எழுதினார். டாக்டர் டுபினுடன் இணைந்து ஆஸ்கோடல் மீன் எண்ணெய் வைட்டமின் செறிவை தயாரித்தார். பாரீஸில் உயிர் வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்யும் கேசா பயோகெமிகா என்ற ஆய்வகத்தை தொடங்கினார்.
# போலந்தை ஜெர்மனி கைப்பற்றியபோது நியூயார்க் திரும்பினார். அங்கு தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஹார்மோன், புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகியவை தொடர்பாக பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 140-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
# உணவு, ஊட்டச்சத்து, வைட்டமின்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மனிதகுல ஆரோக்கிய மேம்பாட்டுக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய கஸிமிர் ஃபூங்க் 83-வது வயதில் (1967) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT