Published : 20 Feb 2016 10:33 AM
Last Updated : 20 Feb 2016 10:33 AM

கா.நமச்சிவாயம் 10

தமிழ் அறிஞர், எழுத்தாளர்

சிறந்த தமிழ் அறிஞர், புலவர், தமிழ் பேராசிரியரான கா.நமச்சிவாயம் (Ka.Namachivayam) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# வேலூர் மாவட்டம் காவேரிப்பாக் கத்தில் (1876) பிறந்தார். அதே ஊரில் தந்தை நடத்திய திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி ஆகிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

# சென்னை தண்டையார்பேட்டையில் 16 வயதில் குடியேறினார். ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மகாவித்வான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். சுமார் 12 ஆண்டு காலம் தண்டையார்பேட்டையில் இருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கற்றார்.

# சென்னையில் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளி, நார்விக் மகளிர் பள்ளி, சிங்கிலர் கல்லூரி என பல இடங்களில் பணியாற்றினார். வகுப்பில் முழு நேரமும் பாடம் நடத்த மாட்டார். கடைசி பத்து பதினைந்து நிமிடங்கள் உலக விவகாரங்களை அலசுவதற்காக ஒதுக்குவது இவரது வழக்கம். மாணவர்கள் கேள்வி கேட்க, இவர் பதில் கூறுவார்.

# ஆங்கிலேய அரசால் தமிழ் கழக தலைமைத் தேர்வாளராக 1917-ல் நியமிக்கப்பட்டார். அந்நாளில் வித்வான் பட்டங்கள் சமஸ்கிருத அறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றவர்களுக்கும் வித்வான் பட்டம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். இவரது கருத்தை அரசு ஏற்று அதை செயல்படுத்தியது.

# தை முதல் நாளை தமிழ் திருநாளாகக் கொண்டாட வழி செய்தவர். 1905 வரை மாணவர்கள் ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க இவரே தமிழ் பாட நூல்களை எழுதினார். எஸ்எஸ்எல்சி, இன்டர்மீடியட், பி.ஏ. ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன. நமச்சிவாயரின் நூல்களை பல பள்ளிகள் விரும்பிப் பயன்படுத்தின.

# ஏற்கெனவே தமிழ்ப்பாட நூல்களை வெளியிட்டு வந்த ஆங்கிலேயர் ஒருவர் இதனால் கோபம் அடைந்தார். நமச்சிவாயருக்கு பல நெருக்கடிகள் கொடுத்தார். புனித பவுல் உயர்நிலைப் பள்ளியில் இருந்து நமச்சிவாயரை நீக்கச் செய்தார். இதை அறிந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

#

பிருதிவிராஜன், கீசகன், தேசிங்குராஜன், ஜனகன் ஆகிய நாடகங் களை எழுதியுள்ளார். நாடகமஞ்சரி என்ற பெயரில் 10 நாடகங்களை யும் எழுதினார். இவை அனைத்தும் மேடைகளில் அரங்கேறின.

# சிறந்த குழந்தைக் கவிஞராகவும் திகழ்ந்தவர். ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ‘சிறுவர்களுக்கான நூல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

# இவர் சிறந்த முருக பக்தர். திருவிளையாடற் புராணத்தை இனிய, எளிய, அழகான வசன நடையில் எழுதி சஞ்சிகைகளாக வெளியிட்டார். நன்னூல் காண்டிகை என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதினார். ‘தமிழ்க்கடல்’ என்ற அச்சகம் தொடங்கி பல நூல்களைப் பதிப்பித்தார். ‘நல்லாசிரியன்’ என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றை 15 ஆண்டுகள் நடத்தினார். ‘ஜனவினோதினி’ என்ற மாத இதழில் பல கட்டுரைகளை எழுதி வந்தார்.

# எளிய நடையில் உரைநடை நூல்களை எழுதியவர், சிறந்த புலவர், உரைநடை எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்ட கா.நமச்சிவாயம் 60-வது வயதில் (1936) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x