Published : 14 Feb 2016 02:43 PM
Last Updated : 14 Feb 2016 02:43 PM
ஸ்வீடனை சேர்ந்த வானியலாளரும் கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் முக்கியப் பங்காற்றியவருமான ஃபிரிட்ஸ் ஸ்விக்கி (Fritz Zwicky) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பல்கேரியா நாட்டின் வர்னா நகரில் (1898) பிறந்தவர். தந்தை பிரபல தொழிலதிபர், நார்வே நாட்டு தூதராகவும் பணிபுரிந்தார். சுவிட்சர்லாந்தின் கிளாரஸ் நகரில் உள்ள தாத்தா, பாட்டியின் வீட்டுக்கு 6 வயதில் அனுப்பப்பட்ட ஸ்விக்கி அங்கேயே கல்வி கற்றார்.
* முதலில் வர்த்தகம் தொடர்பான கல்வி பயின்றார். பின்னர் கணிதம், இயற்பியலில் ஆர்வம் பிறந்தது. சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிதம், சோதனை இயற்பியல் பயின்றார். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
* அமெரிக்காவுக்கு 1825-ல் சென்று குடியேறினார். அயனி படிகங் கள், மின்பகுளிகள் என குறிப்பிடப்படும் எலெக்ட்ரோலைட்ஸ் குறித்து ஆராய்ந்தார். ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் உதவித்தொகை பெற்று கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். ஏறக்குறைய இறுதிவரை இங்கு பணியாற்றினார்.
* அண்டவியல் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். 1924-ல் வானியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். வால்டர் பேட் என்ற விஞ்ஞானியுடன் இணைந்து, காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆராயத் தொடங்கினார். இதற்காக ஜெர்மனியில் இருந்து லென்ஸ்கள் வாங்கிவந்து தொலைநோக்கியில் பயன்படுத்தினார்.
* நியூட்ரான் நட்சத்திரங்களைக் கண்டறிந்தார். இவற்றைக் குறிப்பிட ‘சூப்பர்நோவா’ என்ற சொல்லை 1934-ல் பயன்படுத்தத் தொடங்கினார். இதுபற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டவர் மொத்தம் 122 நட்சத்திரங்களைக் கண்டறிந்தார்.
* நியூக்ளியர் காப்ளின்ஸ் குறித்து ஆராய்ந்தார். 1933-ல் கோமா கேலக்ஸி கிளஸ்டர் தொடர்பான ஆராய்ச்சியில் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்றாக இருந்துவரும் கண்ணுக்குத் தெரியாத பருப்பொருள்களை (டார்க் மேட்டர்) கண்டறிந்தார். இத னால் ‘கரும்பொருளின் தந்தை’ என போற்றப்படுகிறார். இவற்றைக் கண்டறிய வைரல் தேற்றத்தை முதன்முதலாகப் பயன்படுத்தினார்.
* விண்மீன் திரள்களைக் கண்டறிவதிலும் அவற்றுக்கான அட்டவணைகளைத் தயாரிக்கும் பணியிலும் முழுமூச்சாக ஈடுபட்டார். அண்டவெளி தொடர்பாக 6 தொகுதிகள் கொண்ட நூலை தன் சகாக்களுடன் இணைந்து எழுதி வெளியிட்டார். ஆராய்ச்சிக்காக செயற்கை விண்கற்களை உருவாக்கினார். ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
* மனிதநேயம் மிக்கவர். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தாராளமாக நன்கொடை வழங்கினார். வானியல் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைத் திரட்டினார். இரண்டாம் உலகப்போரால் பெரும் அழிவை சந்தித்திருந்த ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் அறிவியல் நூலகங்களுக்காக அந்த புத்தகங்களை கப்பலில் அனுப்பிவைத்தார்.
* இரண்டாம் உலகப் போரின்போது, ராக்கெட் உந்துதல் தொடர்பான பங்களிப்புகளுக்காக அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கத்தைப் பெற்றார். கவுரவம் மிக்க ராயல் வானியல் சங்கத்தின் தங்கப் பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது. ஒரு விண்கல்லுக்கும், நிலவில் உள்ள ஒரு பள்ளத்துக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* கோட்பாட்டு இயற்பியல், வானியலின் பல்வேறு களங்களில் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கியவரும் ‘கரும்பொருளின் தந்தை’ எனப் போற்றப்பட்டவருமான ஃபிரிட்ஸ் ஸ்விக்கி 1974-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி 76 வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT