Published : 03 Jul 2021 07:50 PM
Last Updated : 03 Jul 2021 07:50 PM
சருமத்தில் தோன்றும் வெண்புள்ளிகள் குறித்த அறிவியல்பூர்வமான உண்மைகளைக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தில் பரப்பி வருபவர் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளரான கே.உமாபதி. சமூகத்தில் வெண்புள்ளிகள் மீது கவிந்திருக்கும் இருளைப் போக்கி, வெண்புள்ளிகள் கொண்டவர்களுக்குத் திருமணம், அவர்களின் பணிப் பாதுகாப்புக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தல், வெண்புள்ளிகள் குறித்த தவறான கற்பிதங்களைச் சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து நீக்குதல் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து களப்பணி செய்து வருகிறார் கே.உமாபதி.
தற்போது பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணனைக் கொண்டு பொம்மலாட்டத்தின் மூலம் வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை சுவாரசியமான கதை வடிவில் நிகழ்த்தி அதைத் தங்களின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களிடையேயும் பொதுச் சமூகத்தினருக்கும் எளிதில் புரியும் வகையில் சொல்வதற்குப் பொம்மலாட்டக் கலை சிறந்த கலை வடிவம் என்பதாலேயே இதைச் செய்திருக்கிறோம் என்னும் கே.உமாபதி, ஒரு பெரிய சமூக மாற்றத்துக்கான தொடக்கப் புள்ளிதான் இது என்கிறார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “வெண்புள்ளிகள் என்பவை ஒன்றுமேயில்லை. அவை வெறும் நிறமிழப்பு மட்டுமே. அதையும் சரிசெய்துவிட முடியும். உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் போதுதான், ஆண்டாண்டு காலமாக நிலவிவரும் வெண்புள்ளிகள் குறித்த தவறான கருத்துகளை மக்களின் மனங்களிலிருந்து அகற்ற முடியும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் வெண்புள்ளிகள் குறித்த உண்மைத் தகவல்களைக் கொண்டுசேர்க்கும் பணிகளை வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா முன்னெடுத்துள்ளது.
கன்னியாகுமரியில் 2022 ஜூன் மாதம் தொடங்கும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு மாணவர்கள் சந்திப்புப் பயணம், எல்லாப் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும். வெண்புள்ளிகள் தொடர்பான அறிவியல்பூர்வ உண்மைகள் அடங்கிய பிரசுரத்தை மாணவர்களிடம் சேர்த்து, அதனை அவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரிந்த பத்துப் பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டுவோம். இப்படித் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களையும் சென்றடைவோம். இந்தப் பயணம் ஓராண்டு தொடரும். தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளோம்.
மாணவர்கள் வாயிலாகப் பட்டிதொட்டியெங்கும் இந்தப் பிரச்சாரத்தைக் கொண்டுசெல்வோம். இதன் மூலம் இந்தியாவிலேயே வெண்புள்ளிகள் குறித்த முழு விழிப்புணர்வைப் பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்க உள்ளோம்” என்று கே.உமாபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT