Published : 22 Dec 2015 05:02 PM
Last Updated : 22 Dec 2015 05:02 PM
ஆங்கிலக் கவிதைகளையும் கவிஞர்களையும் தேட உதவும் தேடியந்திரங்கள். கவிதை ஆர்வலர்களுக்கான இணைய சமூகமும் கூட!
இணையத்தில் கவிதைகளை தேடிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? எப்போதோ படித்த மனதில் தைத்த கவிதை வரிகளை தேடி அல்லது ஆதர்ச கவிஞரின் கவிதைகளை நீங்கள் தேடியிருக்கலாம். ஆம், எனில் போயம்ஹன்டர் இணையதளம் உங்களுக்கு பரிச்சயம் ஆகியிருக்கலாம். ஏனெனில், போயம்ஹன்டர் ஆங்கிலக் கவிதைகளுக்கான தேடியந்திரம். கவிஞர்கள் மற்றும் கவிதைகளுக்கான தேடலை நிறைவேற்றித் தரும் தேடியந்திரம். இது வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல; கவிதைகளை பொருத்தவரை அதற்கும் மேல்!
தேடியந்திரம் என்றதும் நினைவுக்கு வரக்கூடிய வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறுபட்டு போயம்ஹன்டர் இணையத்தின் ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்த வலைவாசல் போல காட்சி அளிக்கிறது. உண்மையில், இது கவிதைகளுக்கான வலைவாசல். கவிதைகளை தேடவும் வழி செய்கிறது.
பொதுவாக தேடியந்திரங்களின் எளிமையான வடிவமைப்புக்கு பழகியவர்களுக்கு இதன் முகப்பு பக்கம் முதல் பார்வைக்கு கொஞ்சம் குழப்பமாக கூட இருக்கலாம். எங்கு பார்த்தாலும் கட்டம் கட்டமாக ஒவ்வொரு பகுதி இருக்கின்றன. ஒரிடத்தில் பார்த்தால் இன்றைய கவிதை எனும் தலைப்பில் ஒரு கவிதை முன் வைக்கப்படுகிறது. அதன் கீழ் பார்த்தால் நவீன கவிதை எனும் தலைப்பில் இன்னொரு கவிதை அறிமுகம். பக்கத்தில் பார்த்தால், கவிதைகள் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப பட்டியலிடப்பட்டுள்ளன. வலது பக்கம் பார்த்தால் கவிஞர்களின் பட்டியல். கொஞ்சம் கீழே இறங்கி பார்த்தால் ஓர் ஓரத்தில் முன்னணி 500 கவிதைகளின் பட்டியல். அதற்கு பக்கத்தில் முன்னணி 500 கவிஞர்களின் பட்டியல். இவை போதாது என்று புதிய கவிதைகளின் பட்டியல். இன்னும் பல கவிதை பகுதிகள் இருக்கின்றன.
இந்த அம்சங்களுக்கு மத்தியில் மேல் பக்கத்தில் ஆரஞ்சு வண்ண நீள பெட்டியில் தேடல் கட்டத்தை காணலாம். கூகுளின் அழகியல் மற்றும் செயல்பாட்டுவியலுக்கு பழகியவர்களுக்கு இது மிரட்சியையும் குழப்பத்தையும் அளிக்கலாம்.
ஆனால், குழப்பமடைந்து இந்த தேடியந்திரம் மீது தீர்ப்பளிக்கும் முன் இதில் தேடல் சோதனை நடத்திப்பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதிய கவிஞர்கள் அல்லது ஆங்கில கவிதைகள் பெயரை டைப் செய்து தேடு பார்க்கலாம் என்று கட்டளையிட்டால் அழகாக கவிதைகளை பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியல் கவி மனத்தை பரவசம் கொள்ள வைக்கிறது. கூகுள் போல பக்கம் தேடல் முடிவுகள் வரிசையாக பட்டியலிடப்பட்டு, பக்கம் பக்கமாக நீள்வதில்லை. மாறாக கேட்டது கேட்டபடி என்பது போல கவிதைகளும்,கவிஞர்களுமே பரிந்துரைக்கப்படுவதை பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக வாழ்க்கை (Life) எனும் பதத்தை தேடினால் 52 கவிஞர்கள் வாழ்க்கை பற்றி எழுதிய கவிதைகளும், அதன் அருகிலேயே வாழ்க்கை தொடர்பான 928 கவிதைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. கவிஞர்களை தேர்வு செய்து கிளிக் செய்தால் அவர்கள் எழுதிய கவிதைகளை படிக்கலாம். ரசிக்கலாம். அல்லது நாம் தேடி வந்த கவிதையை கிளிக் செய்து படிக்கலாம்.
வழக்கமான தேடல் பட்டியல் போல முதலில் நமக்கு தேவையான தகவல் எந்தத் தளத்தில் இருக்கிறது என்று தேடிப்பார்க்க வேண்டிய தேவை எல்லாம் இல்லை. கவிதை தேடல் என்பதால் எல்லாமே கவிதைகள் தான்.
பரிந்துரைக்கப்படும் கவிதைகளில் மொத்த கவிதைகள் பட்டியலையும் விரிவாக்கி காணலாம். அடுத்த கட்டமாக காவிய கால கவிஞர்கள் மட்டும் என்றோ அல்லது வாழ்க்கை தலைப்பிலான கவிதை என்றும் மட்டுமோ கூட தேடலை சுருக்கி கொள்ளலாம்.
எல்லா தேடல்களுமே இப்படி ஒரு பக்கம் கவிஞர்கள் எனவும், அருகிலேயே கவிதைகள் எனவும் முன்னிறுத்தப்படுகின்றன.
இந்தப் பகுதிக்கு கீழேயே பாடகர்கள், பாடல்கள் ஆகிய பரிந்துரைகள் மற்றும் மேற்கோள்கள் பட்டியலும் இடம்பெறுகின்றன. புகழ்பெற்ற கவிஞர்கள் தொடர்பான தேடல் என்றால் மேற்கோள் மழையையே எதிர்கொள்ளலாம்.
தேடல் கட்டத்தின் கீழே பிரபலமான தேடல் பதங்களும் வழிகாட்டுகின்றன.
குறிப்பிட்ட கவிஞர்களின் பெயர் அல்லது குறிப்பிட்ட கவிதைகளை தேடிப்பார்க்கும்போது இந்தத் தளம் தனது பரிந்துரைகளால் திருப்திகொள்ள வைக்கும். ராபர்ட் பிராஸ்ட், பாப்லோ நெருடா, மாயா ஆஞ்சலோ போன்ற பிரபல கவிஞர்கள் என்றால் விருந்தே படைக்கிறது.
கவிதை தலைப்பு மட்டும் நினைவில் இருக்கும்போது அல்லது கவிதையின் ஏதேனும் ஒரு வரி நினைவில் இருக்கும்போது இதில் தேடிப் பார்த்தால் இதன் பயன் சரியாக தெரியும்.
குறிப்பிட்ட கவிதைகளை தேடுவது என்றாலும் சரி, அல்லது பொதுவில் கவிதைகளை தேடினாலும் சரி, இதன் பரிந்துரைகள் கவி மனதை கொள்ளை கொள்ள வைக்கும்.
பொதுவாக கவிஞர்கள் பற்றிய கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்களில் தேடலாம் என்றாலும், நேரடியாக கவிதைகளையும் கவிஞர்களையும் தேடி களிப்புறுவதற்கான கவிதை தேடியந்திரமாக இதைக் கொண்டாடலாம்.
இந்தத் தளத்தை பயன்படுத்தும்போதே இதன் வலைவாசல் போன்ற தோற்றத்தையும் உள்ளடக்கதற்கான நியாயத்தையும் புரிந்து கொள்ளலாம். கவிதை வாசித்து மகிழ்வதற்கானது தானே. ஆகையால், கவிதை தேடியந்திரம் என்றாலும் கூட, அதில் தேடலோடும் எதிர்பார்ப்புடனும் நுழையும்போது வெற்றுத் தேடல் கட்டம் மட்டுமே வரவேற்றால் எப்படி இருக்கும்? கவி உள்ளம் வாடாதோ?
ஆனால் போயம் ஹன்டரில் கவிதைகளை தேடி வரும்போது அது கவிதைகளோடு வரவேற்கிறது.
கவிதைகளை தேடலாம். அத்துடன் அவரவர் ரசனைக்கேற்ப கவிதைகளை தேர்வு செய்து படித்து மகிழலாம். கவிதை தேர்வுக்கு எண்ணற்ற வழிகளும் அதற்கேற்ற பகுதிகளும் இருக்கின்றன. கவிஞர்களுக்கான பகுதி அவர்களை பற்றிய சுருக்கமான அறிமுக குறிப்புகளுடன் கவிதைகள், மேற்கோள்கள் என செறிவாகவே இருக்கிறது.
ஆக, இந்தத் தளத்தை கவிதைக்கான கூகுள் என வர்ணிப்பதை விட கவிதைகளுக்கான யாஹூ என வர்ணிக்கலாம். இதன் வலைவாசல் தன்மைக்கான நியாயமாகவும் அது அமையும்.
இந்தத் தளம் தேடலுக்கும், வாசிப்புக்கும் மட்டுமானது அல்ல, புதிய கவிஞர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு நட்பு பாராட்டுவதற்கான கவிதை சங்கமமாகவும் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. மிகத் துடிப்பான ஒரு கவிதை சமூகம் இதை சார்ந்து இயங்கி கொண்டிருப்பதை இதன் உறுப்பினர் வட்டத்தைப் பார்த்து புரிந்துகொள்ளலாம்.
தேடியந்திர முகவரி>http://www.poemhunter.com
*
போயம்ஹண்டர் தவிர கவிதைகளுக்காக என்றே வேறு பல தேடியந்திரங்களும் இருக்கின்றன. அவற்றில் போயட்ஸ்.ஆர்க் மற்றும் போயட்ரி பவுண்டேஷன்.ஆர்க் இரண்டுமே விஷேசமானவை.
போயட்ரி பவுண்டேஷன்.ஆர்க் கவிதைகளுக்கான போயட்ரி பத்திரிகையை வெளியிடும் அமைப்பின் இணையதளம். கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதை வழிகாட்டிகள், அலசல்கள், ஆய்வுகள் ஆகிய அம்சங்களுடன் தேடல் வசதியும் இருக்கிறது. கவிதை, கவிஞர்கள் பற்றி தேடலாம்: >http://www.poetryfoundation.org
போயட்ஸ்.ஆர்க் அமெரிக்க கவிஞர்கள் அகாடமி அமைப்பால் நடத்தப்படுவது. கவிதைகளையும் தேடலாம், கவிஞர்களையும் தேடலாம். இதற்காக தேடல் கட்டத்தையும் பயன்படுத்தலாம்; அல்லது இதில் உள்ள பட்டியலில் இருந்தும் தேடலாம் >https://www.poets.org
போயட்டி ஆர்க்கேவ் தளமும் கவிதைகளை தேடும் வசதியை அளிக்கிறது. உண்மையில் இது கவிதை வாசிப்புக்கான தளம் - அதாவது கவிதைகளை காதால் கேட்டு மகிழவைக்கும் இணையதளம். கவிதைகளை கவிஞர்களே வாசித்துக்காட்டும் ஒரு மரபு இருக்கிறது அல்லவா... அந்த மரபை காப்பாற்றும் வகையில் இந்த தளம் பிரபல கவிஞர்களின் கவிதைகளை மற்றவர்கள் வாசிக்க ஒலி வடிவில் கேட்க வழி செய்கிறது. பல விதங்களில் கவிதைகளை தேடும் வசதியும் இருக்கிறது >http://www.poetryarchive.org
இவை தவிர போயட்ரி நூக் ( >http://www.poetrynook.com/) ,போயட்ரி.காம் ( >http://poetry.com/), போயட்ரி சூப் ( >http://www.poetrysoup.com/ ) உள்ளிட்ட தளங்கள் பொதுமக்கள் தங்கள் கவிதைகளை சமர்பிப்பதற்கான இடமாக இருக்கின்றன. அதிலும் போயட்ரி.காம் தளம் கவிஞர்களுக்கான ஃபேஸ்புக் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கிறது. கவிதைகளை வெளியிடுவது, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது, கவிதைகளை விமர்சனம் செய்வது என கவிதை ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் தளமாக இது விளங்குகிறது. இவற்றிலும் கவிதைகளை தேடலாம் என்றாலும் பெரும்பாலானவை வாசகர்களின் கவிதைகள்.
- சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com
முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 15 - தகவல் பலகை தேடியந்திரங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT