Published : 19 Dec 2015 10:18 AM
Last Updated : 19 Dec 2015 10:18 AM
ஜெர்மனியை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் ஹெல் (Rudolf Hell) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள எக்முல் கிராமத்தில் (1901) பிறந்தார். தந்தை ராயல் பவேரியன் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர். அவருடன் அலுவலகம் சென்றபோது அங்கிருந்த டெலிகிராபி கருவி இவரை ஈர்த்தது. அங்கு போகும்போதெல்லாம் அதையே பார்த்துக்கொண்டிருப்பார்.
l செக் குடியரசில் உள்ள செப் என்ற இடத்துக்கு அப்பா மாற்றலானதால் அங்கேயே இவரது ஆரம்பக் கல்வி தொடங்கியது. மொழிப் பாடங்கள், விருப்பம் இல்லாத மற்ற பாடங்களில் சராசரி மதிப்பெண்தான் வாங்குவார். ஆனால், விருப்பமான அறிவியல், கணிதத்தில் அதிக மதிப்பெண்களைக் குவித்தார்.
l மூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியலில் டிப்ளமோ பெற்றார். 1923-ல் எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். மின் சாதனங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
l வீடியோ கேமரா ட்யூபை முதன்முதலாக கண்டறிந்தார். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (Hellschreiber) என்ற கருவியை 1920-ல் கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. ஃபேக்ஸ், டெலக்ஸ், கலர் ஸ்கேனர் ஆகியவற்றுக்கு இதுவே முன்னோடி.
l விமானப் போக்குவரத்துக்கான ரேடியோ திசை காட்டும் கருவி குறித்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி 1927-ல் முனைவர் பட்டம் பெற்றார். விமானத்துக்கான தானியங்கி வழிகாட்டி உள்ளிட்ட கருவிகளைக் கண்டறிய இவரது ஆராய்ச்சி அடிப்படையாக அமைந்தது.
l இவரது ‘ஹெல் ரெக்கார்டர்’ கருவி, தகவல் தொடர்பு துறையில் பெரும் வரவேற்பை பெற்றதால், 1929-ல் சொந்த நிறுவனம் தொடங்கினார். தவறுகளைத் திருத்துதல், ஒருங்கிணைத்தல் போன்ற பிரச்சினைகளைக் கையாளும் அமைப்புடன் இக்கருவி வடிவமைக்கப்பட்டது.
l செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவரை இது முழுமையாக ஒருங்கிணைக்காவிட்டாலும்கூட, தெளிவாகப் படிக்க ஏதுவாக, காகித நாடாவில் ஒவ்வொரு வார்த்தையும் 2 முறை அச்சிடும்படி வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற பிரத்யேக அம்சங்களால், செய்தி நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் மட்டுமின்றி, காவல் துறையிலும் இக்கருவி பிரபலமடைந்தது. இதன் வேகமும் நம்பகத்தன்மையும் இதை உலகம் முழுவதும் பிரபலமடையச் செய்தன.
l 1931-ல் இரண்டாம் உலகப் போரின்போது குறியீட்டு இயந்திரங்களைத் தயாரித்தார். அடுத்த ஆண்டு எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஹெலிகல் ஸ்கேன் பிரின்ட் சிஸ்டம் என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.
l பெர்லினில் இருந்த இவரது தொழிற்சாலை 1940-ல் இரண்டாம் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளானது. தளர்ந்துவிடாத அவர், தனது தொழிலை 1947-ல் மீண்டும் தொடங்கினார். கிளிஸ்கோகிராஃப், கோலோகிராஃப், டைப்செட்டிங் இயந்திரம் உட்பட பலவற்றை உருவாக்கினார். 1989 வரை பல்வேறு கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.
l
வியன்னா போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். பல நாடுகள் இவருக்கு கவுரவ குடியுரிமை வழங்கின. தொலைத்தொடர்பு துறையின் பிதாமகராகப் போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் நூறாண்டு வாழ்க்கையைப் பூர்த்தி செய்து 2002-ல் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT