Published : 02 Jun 2014 09:52 AM
Last Updated : 02 Jun 2014 09:52 AM
வீடு அல்லது வணிக மின் இணைப்புக்கு விண்ணப்பப் படிவம் 1ல் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பப் படிவம் எங்கு கிடைக்கும்?
இந்த விண்ணப்பம் மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.
மின் இணைப்புக்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களுடன், மின் இணைப்பு தேவைப்படும் இடத்துக்குறிய சட்டப்படி உரிமை தாரருக்கான ஆவணம் கொடுக்க வேண்டும். தனது பொறுப் பிலுள்ள இடமாக இருந்தால், மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர் படிவம் 5ன் படி, தடையில்லா சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், கட்டட மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் மேற் கொள்ளும்போது உள்ளாட்சி மற்றும் அரசுத்துறைகளின் அனுமதி நகல்கள் மற்றும் வழக்குகள் இருந்தால் சிவில் நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய வேண்டும்.
நிரப்பப்பட்ட படிவத்தை எங்கு கொடுக்கலாம்?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மின் வாரிய பகுதி அலுவலகத்தில், உதவி செயற்பொறியாளரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ கொடுத்து உரிய ஒப்புகைச் சீட்டு கண்டிப்பாக பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டதும் என்ன செய்வது?
விண்ணப்பம் ஏற்கப்பட்டதும், மின் இணைப்பு கேட்போரின் இடத்தில் தரை தளத்தில் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய இடம் மற்றும் /மின் மீட்டர் பொருத்தும் இடத்தை முடிவு செய்துகொள்ள, மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், மின் இணைப்புக்கான கட்டணங்களை செலுத்த அறிவிப்புக் கடிதம் கிடைத்ததும், கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும்.
மின் மீட்டர்களை மாடியில் வைக்கலாமா?
எல்லா அடுக்குமாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும், மின் வாரிய கணக்கீட்டாளர்கள் எளிதில் கணக்கெடுக்கும் வகையில், தரை தளத்தில்தான் மின் மீட்டர், மின் கட்டை (ப்யூஸ் கேரியர்) பொருத்த இடம் ஒதுக்க வேண்டும்.
மின் கம்பம் அமைப்பது எப்படி?
மின் இணைப்பு கேட்போர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்தின் மின் கம்பங்கள் நடுவதற்கு இடமளிக்க வேண்டும். மின் கம்பங்கள், கம்பிகள் அமைக்கும் வழித் தடத்தை மின் இணைப்பு கேட்போரே தன்னுடைய சொந்த செலவில் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
மின் இணைப்பு எப்போது கிடைக்கும்?
தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங் பணிகளையும் உரிய அரசு அங்கீகாரம் பெற்ற எலக்ட்ரீசியன்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், பொறியாளரின் ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை பொறியாளருக்கு நுகர்வோர் அறிவிக்க வேண்டும். ஆய்வுக்குப் பின், மின் இணைப்பு கேட்போருக்கு நோட்டீஸ் அனுப்பி, இணைப்புகள் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT