Published : 14 Jun 2021 10:00 AM
Last Updated : 14 Jun 2021 10:00 AM
1977-நவம்பர் 17-ந்தேதி விஷ்ணுபிரியா நிறுவனத்தின் சார்பில், ‘சிட்டுக்குருவி’ படத்திற்கு பூஜை போடப்பட்டது. தேவராஜ்-மோகன் இரட்டையரின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம். ஒளிப்பதிவை -கன்னடத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் பிரபலமாக இருந்த நடிகர் ஜெமினி படங்களில் காரெக்டர் ரோல் நடித்தவர், நாகேந்திரராவ், அவர் மகன் ஆர்.என்.கே. பிரசாத் -கவனித்துக் கொள்கிறார்.
இசை இளையராஜா. தேவராஜ் மோகனின் குருவான டைரக்டர் பி. மாதவனும், ஒளிப்பதிவாளர் பி.என். சுந்தரமும் படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.
படத்தின் பெரும்பாலான பகுதி மைசூரை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டன. தலக்காடு கிராமம் மைசூரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் வடகிழக்கே இருக்கும் ஊர். சுற்றுலா கேந்திரமாக விளங்கும் பகுதி. தென்கரையில் மாலங்கி சிறிய கிராமம். ஆற்றின் வடகரையில் தலக்காடு கிராமம்.
தலக்காட்டின் தென்கரையில் பாலைவனம் போன்ற -சுமார் 60 அடி உயரத்துக்கு, 800 ஏக்கர் பரப்பளவில், மணல் மேடுகள் உள்ளன. அந்த மேட்டுப்பகுதியில் ஆங்காங்கே முந்திரி மரங்கள். மேடுகளின் சரிவில் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகள். தூரத்தில் தமிழகத்தின் எல்லையைக் காட்டும் நீல நிற மலைகள்.
தலக்காடு பகுதியில் இன்ஸ்பெக்சன் பங்களா ஒன்று 20 அடி நீளம், 20 அடி அகலம் இருக்கும். அதில் இரண்டு அறைகள். ஒன்றில் புத்தகங்கள். ஆவண ஃபைல்கள் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும். அந்த ஏரியா எஞ்சினியர் வந்தால் தங்குவதற்கு அதில் ஓர் அறை 10-க்கு 10 அடி அகல, நீளத்தில் தயாராக இருக்கும். அந்த அறை எனக்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது. படப்பிடிப்புக்குழு கோயில் மண்டபங்களில், பிரகாரங்களில் படுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
அதிகாலை நேரத்தில் விதவிதமான பறவைகளின் ஓசை.
கிளி, குயில்,தோக்குருவி, வண்ணாத்திக்குருவி, மயில், காகம் என்று எல்லாம் குரல் கொடுத்து எழுப்பி விடும். கோடு கிழித்தாற்போல வானத்தில் நாரைக்கூட்டம் பறக்கும் அழகு, இவற்றை பார்த்து ரசித்துக் கொண்டு மறைவிடம் சென்று காலைக்கடன் முடித்து திரும்புவேன்.
அதற்குள் ஒரு ஆயா, கெரோசின் அடுப்பில் ஒரு லிட்டர் வெந்நீர் வைத்துக் கொடுப்பார். ஒரு பக்கெட் தண்ணீரில் அதை ஊற்றி விளாவி குளியல், ஷேவிங் முடித்துக் கொள்வேன்.
ஒப்பனை முடித்து உடை அணிந்ததும் -என்னுடைய உடமைகள், மேக்கப் சாமான்கள், காஸ்ட்யூம் பெட்டி எல்லாம் அந்த அறைக்கு வெளியே எடுத்து வைத்து விட வேண்டும். இன்ஸ்பெக்சனுக்கு வரும் அதிகாரிகள் வந்து பார்த்தால் அறை காலியாக இருக்க வேண்டும். அந்த 15 நாட்களும் காலையில் குளியல் முடிந்ததும் என் சாமான்கள் வெளியே அனாதையாகக் கிடக்கும்.
தலக்காட்டிலிருந்து மைசூர் செல்லும் பாதையில் சுமார் 12 மைல் தொலைவில் திருமுக்கூடல் நரசிபூர்- (டி நர்சிபூர்) உள்ளது. இங்குள்ள நரசிம்மசுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. கோயிலின் இரண்டு புறமும் ஆறுகள். 1920-ல் ஆற்றில் பெருவெள்ளம் வந்தபோது பாதி கோபுரம் வரை நீர் உயர்ந்து சென்றதாம். அதன் அடையாளமாக கோயிலில் ஒரு கல் ஒன்றை பதித்து வைத்திருக்கிறார்கள்.
கோயிலைச் சுற்றி வானளாவிய அரச மரங்கள். தலக்காடு- காவேரிபுரம் பாதையில் மாதவ மந்திரி அணை. முடுகு துறை கிராமம் ஒன்றும் உள்ளது.
தலக்காட்டிலிருந்து மாலங்கி கிராமத்துக்குச் செல்ல சுமார் 2 பர்லாங் அகலமுள்ள காவிரி ஆற்றைக் கடக்க வேண்டும். இதில் நீர் செல்லும் பகுதி ஒரு பர்லாங் அகலம். சில இடங்களில் இடுப்பளவு தண்ணீரும், மற்ற இடங்களில் முழங்கால் அளவும் இருக்கும்.
மாலங்கி மிகவும் சிறிய கிராமம். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் வாழும் பகுதி. சுமார் 500 பேர் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் பிறந்தவன்தான் ராஜா என்கிற கதாநாயகன். சிறுவனாக ராஜா இருந்த போது அவன் செய்யாத தவறுக்கு, அவன் பாட்டி கையில் நெருப்பில் சூடு பண்ணின கம்பியால் சூடு வைத்து விட்டாள். ரோஷம் தாங்காமல் ஊரை விட்டே அந்தச்சிறுவன் ஓடி விட்டான்.
சமூக விரோத கும்பல் அவனை அரவணைத்து தொழிலும் கற்றுக் கொடுக்கிறது. இப்போது கள்ளக்கடத்தல் கும்பல் ஒன்றின் தலைவன் ராஜா. காட்டிக் கொடுத்த கூட்டாளி ஒருவனை சென்னை சாம்ராட் ஓட்டலில் ஒரு இரவு கொடூரமாகக் கொலை செய்து விடுகிறான் ராஜா. போலீஸில் அகப்படாமல் இருக்க, தன் சகாக்களை எங்காவது தலைமறைவாகி விடுங்கள்; கொஞ்ச நாள் தொழிலை மறந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டு, இவனும் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும், தன் பிறந்த கிராமத்துக்கு புறப்பட்டு வந்து விடுகிறான்.
15 ஆண்டுகளுக்கு முன் ஓடிப்போன பேரன் உயிரோடு இருக்கிறானா, செத்துப் போய் விட்டானா என்று தெரியாமல் தவித்த தாத்தா, பாட்டி, ராஜா வந்ததும் வாரி அணைத்துக் கொள்கிறார்கள்.
பால்ய வயதில் விளையாட்டுத் தோழியாக இருந்த சிட்டு இப்போது புதுமலராக மலர்ந்து அவனுக்காகவே காத்திருக்கிறாள்.
கள்ளங்கபடமில்லாத இந்த மக்களின் எளிய வாழ்க்கை ராஜாவை தூய்மைப்படுத்த ஆரம்பிக்கிறது. இலக்கு இல்லாமல் வாழ்ந்த ராஜாவுக்கு ஊருக்குப் பயன்படும் உத்தமனாக வாழ சிட்டு வழிகாட்டுகிறாள்.
தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வதாக இறைவனிடம் வேண்டிக் கொண்டு -தன் கிராமத்திற்கு நீர்பாசன வசதி, -பள்ளிக்கூட வசதி -கோயில் கும்பாபிஷேகம் -என சலிக்காமல் செய்து மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கிறான் ராஜா.
சட்டம் விழித்துக் கொண்டு காடுமேடெல்லாம் தேடி ஒரு கட்டத்தில் அவன் கையில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்ல நெருங்கி விட்டது.
கோவில் கும்பாபிஷேகம் பரபரப்பாக ஒரு பக்கம் நடக்க- போலீஸ் பட்டாலியன் ஊரைச்சுற்றி முற்றுகையிட்டது. கைது செய்வதற்கான ஆர்டருடன் போலீஸ் அதிகாரி ஊருக்குள் நுழைய, செய்தி அறிந்த மக்கள், அரிவாள், குத்தீட்டி, வேல் கம்பு என்று ராஜாவைப் பாதுகாக்க திரண்டு விடுகிறார்கள்.
ராஜா கொலைகாரன் என்று போலீஸ் அதிகாரி சொன்னது, பேரதிர்ச்சியை மக்களுக்கு கொடுத்தது. யாரும் அந்தக்குற்றச்சாட்டை ஏற்கத் தயாராக இல்லை.
ஊரே கொண்டாடும் உத்தமர் மீது கொலைப் பழியா? சிட்டு உறைந்து போய் விட்டாள். ‘சொல் ராஜா! நீ சத்தியமாக கொலைகாரன் அல்ல. தைரியமாக உண்மையைச் சொல். அதன் பிறகு இந்த போலீஸை ஒரு கை பார்த்து விடலாம்!’ என்பாள் சிட்டு. ‘ஏன் பேசாமல் நிற்கிறாய்? நீ கொலைகாரனா? இல்லை என்று சொல் என்று அவள் உணர்ச்சி மேலிட்டு கேட்க, தொண்டைக் குழியில் வார்த்தை வராமல் ‘ஆம்’ என்று ராஜா தலையை மட்டும் ஆட்டினான்.
ஊர் மக்கள் கையிலிருந்த ஆயுதங்கள் தரையில் விழுந்தன. ராஜாவின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத சிட்டு அந்த விநாடியே .உயிரற்ற சடலமாக பூமியில் விழுந்தாள்.
‘போயிட்டியா சிட்டு! உன்னால் நான் மனிதனானேன். என்னால நீ தெய்வமாயிட்டே!’ என்று வாலியின் வைர வார்த்தைகளை உதிர்த்து விட்டு ராஜா போலீஸூடன் கிளம்பி விடுவான்.
ராஜாவின் உருவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணேஷ் விடுதலையாகி வெளியே வர, ராஜா உள்ளே செல்வதாக படம் முடியும்.
படத்தின் கதை சூடு பிடிக்கும் இடமே, சந்தோஷத்தின் எல்லையில் ராஜா இருக்கும்போது, ஒரு சிறுவன் பாட்டியிடம் ஒரு கவரைக் கொடுத்துச் செல்வான். பாட்டியிடமிருந்து அதை வாங்கிப் பிரிப்பான் ராஜா. ‘சாம்ராட் ஓட்டலில் கொலை- குற்றவாளியைப் போலீஸ் தேடுகிறது!’ என்ற பத்திரிகை செய்தியை வெட்டி என் விலாசம் தேடி இங்கு அனுப்பியது யார்? நம்மை தெரிந்த ஒருவன் இப்போது நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான். உடம்பெல்லாம் வியர்த்துப் போகிறது அவனுக்கு.
அடுத்தநாள் ஒரு பார்சல் வருகிறது. பிரித்துப் பார்த்தால் ஒரு புகைப்படம். கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படம். நடுங்கிப் போய் விட்டான் ராஜா.
மறுநாள் ராஜா ஆற்றங்கரையோரம் படித்துறையில் அமர்ந்திருந்தபோது மரத்தின் பின்புறம் ஒரு உருவம் நிழலாடியது. வந்தவன் அந்நியன். ஊருக்குப் புதியவன். சாகசச்சிரிப்புடன் அருகே வந்தான். ‘நீ போலீஸை ஏமாற்றி விட்டு இங்கு வந்து விட்டால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தாயா? இப்போது என்னிடமிருந்து தப்பிக்க முடியாது!’ என்று மிரட்டியவன் -துப்பறியும் போலீஸ் துறையை சேர்ந்தவனல்ல.
சிறுவனாக இருந்த போது தன் தாய்மாமனால், அநியாயமாக தன் சொத்துக்களை பறி கொடுத்தவன். அந்த வேடத்தில் ஸ்ரீகாந்த் நடித்தார். ‘எப்படியாவது மாமா வீட்டுக்குள் சென்று அந்த சொத்து பத்திரங்களை எடுத்து வந்து கொடுத்து விடு. போலீஸிற்கு உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்!’ என்றான்.
‘ஐயா! நான் கடத்தல் தொழிலை சுத்தமாக மறந்தே விட்டேன். நிம்மதியாக இருக்கிறேன்!’
‘சந்தோஷம். ஆனால் இந்த ஒரு கடத்தலை மட்டும் எனக்காக நீ செய்தே ஆக வேண்டும்!’
வேறு வழியில்லை. சென்னை போனான். ஒரு நடுநிசியில் பங்களாவுக்குள் சாமர்த்தியமாக நுழைந்து தாண்டுவளப்பெட்டியைத் திறந்து பத்திரங்களை எடுத்துக் கொண்டு நைசாக வெளியேறுகையில், நாய் குரைத்து விரட்டியது. கூர்க்கா விழித்து துரத்தினான். சுவரேறிக் குதிக்கையில் கூர்க்கா வீசிய கத்தி இடது கையில் பாய்ந்து விட்டது.
இந்த களேபரத்தில் கழுத்தில் இருந்த லாக்கட் அறுந்து வீட்டுத் தோட்டத்தில் விழுந்து விட்டது. மறுநாள் வந்து துப்புதுலக்கிய போலீஸ் கையில் லாக்கட் கிடைத்தது. ரூபாய் நாணயம் அளவுள்ள அந்த டாலருள் ஒரு படம். அது ராஜாவும் சிட்டுவும் உள்ள படம். பின்னணியில் ஏதோ ஒரு அணைக்கட்டு.
கம்யூட்டர் யுகம் தொடங்கப்படுவதற்கு முன்பாக சினிமா வழி -கம்ப்யூட்டரில் அந்த சிறிய படத்தைக் கொடுத்து பெரிதாக்கியபோது, ஒரு அணைக்கட்டு அது மாதவ மந்திரி அணைக்கட்டு -கட்டப்பட்ட ஆண்டு -பெயரும் - ஆண்டும் தெளிவாகத் தெரிந்ததும் போலீஸ் இந்த அணை தமிழகத்தில் எங்கு உள்ளது என்று விசாரித்து, அந்தப் பகுதிக்கு வந்து ஹீரோவைக் கைது செய்வதாக காட்டி அசத்தியிருந்தார்கள்.
இளையராஜாவின் அத்தனை பாடல்களும் ஹிட். அதில் பஸ்ஸூக்குள் நானும், மீராவும் -எங்கள் மனசாட்சியின் இரண்டு உருவங்களும் சேர்ந்து பாடும், ‘என் கண்மணி -உன் காதலி’ -பாடல் படப்பிடிப்பு மட்டுமல்ல, எஸ்.பி.பி- சுசீலா குரலில்- ரீமிக்ஸ் முறையில் அற்புதமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பேருந்துகளில் ரேடியோ, டேப்ரிக்கார்டர்கள் பொருத்தப்பட்டு அமர்க்களப்பட்டது. அப்போது இந்த பாடல் ஒலிக்காத பேருந்துகளின் டேப்ரிக்கார்டர்களே இல்லை. பாடலின் இடையே வரும், ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்’ இறங்கு!’ போன்ற கண்டக்டரின் வசனங்கள் அனைவரின் கவனத்தையும் கொள்ளை கொண்டது. சென்னைக்கு வெளியே வசிக்கும் -சென்னையை பார்த்தேயிராத மக்களுக்கெல்லாம் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்னையைப் பார்க்க வேண்டும்; இதேபோல் சென்னை டவுன்பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலை இப்பாடல் தூண்டி விட்டது.
மைசூரிலிருந்து பிருந்தாவனம் செல்லும் பாதையில் பாலமுரிகோத்ரா என்ற புண்ணியத்தலம் ஒன்றுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பாழடைந்த கோயிலும், அதைச் சுற்றி வானளாவிய அரச மரங்களும், ஆலமரங்களும் அந்த இடம் ஒரு ஆசிரமம் என்பதை சொல்லாமல் சொல்லியது.
‘பொன்னுல பொன்னுல பண்ணின மூக்குத்தி; மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி, போக்கிரிப் பொண்ணுக்கு பங்குனி மாதம் கல்யாணம்; பொய்க்காலு குதிரையிலே ஊர்கோலம்’ என்று ராஜா சிட்டுவுக்கு மூக்கு குத்தி விட்ட விழாவில் இரவில் பாடுவதாக படமாக்கப்பட்ட பாடல் இன்னொரு அற்புதம்.
‘அடட மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே. பத்து நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலியே’ என்ற பாடல் தலக்காடு- அணைக்கட்டுப்பகுதியில் படமாக்கினோம்.
‘உன்னை நம்பி நெத்தியில பொட்டு வச்சேன் மத்தியில!’ என்ற உருக்கமான பாடல் ராஜா சென்னைக்குப் போய் கத்திக்குத்துப்பட்டு வந்த பிறகு சிட்டு பாடுவதாக படமாக்கப்பட்டது.
இரட்டை வேடத்தில் பட்டிக்காட்டு ராஜா படத்திற்குப் பிறகு நான் ரசித்து நடித்தபடம் இது.
---
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT