Last Updated : 17 Dec, 2015 10:56 AM

 

Published : 17 Dec 2015 10:56 AM
Last Updated : 17 Dec 2015 10:56 AM

சுட்டது நெட்டளவு: தேநீர்மழை

ஒரு வாரமாக வானிலை மையம் மக்களை உஷார் செய்துகொண்டிருந்தது. அந்த சனிக்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு கடுமையான மழை பெய்யும் என்று அறிவித்துக்கொண்டிருந்தது. கடுமையான மழை என்றால் தெரியுமா இல்லையா? மழை பெய்துகொண்டே இருக்கும். நிற்கவே நிற்காது. ஓய்வு என்ற ஒன்றே எடுக்காமல் மழை பெய்தது பெய்தபடி இருக்கும்.

மழைக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. டீ மழை அறிவிப்பு. ஆமாம் நீங்கள் கேட்டது சரிதான் டீ மழைதான். இலங்கை யில் இருந்து தமிழகம் நோக்கி அந்த கருமேகங்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. ஒரு பலத்த சுழல் காற்று இலங்கையில் இருந்த தேயிலை மலைகள் மீது வீசியது. அங்கே இருந்த செடிகள் அனைத் தும் அப்படியே வேரோடு காற்றில் பறந்தன. மூன்று மலையில் இருந்த செடிகள் அனைத்தும் வேரோடு கருமேகங்களுக்குள் புகுந்தன.

தேயிலை அங்கே இருந்த கருமேகங்களுக்குள் மாட்டி தேயிலை நீராக மாறி மழையுடன் கலக்க ஆரம்பித்துவிட்டது. கன்னியாகுமரியில் முதல் மழை பெய்ய தொடங்கிய போதுதான் மழை விநோதமாக இருப்பது மக் களுக்கு புரிந்தது. மழை ஏன் கலங் கலாக போல இருக்கிறது என குழம் பினார்கள். வானிலை ஆய்வு மையத்தில் பெரும் குழப்பம் நிலவியது. எப்படி மழை இவ்வளவு அழுக்காக மாறியது என்று குழம்பினார்கள்.

அமில மழை என்று முதலில் பயமுறுத்தினார்கள். ஆனால் கன்னியாகுமரிக்கு அருகே இருந்த கிராமம் ஒன்றில் மழையில் விளை யாடிய இரண்டு சிறுவர்கள்தான் அது தேநீர் மழை என்பதைக் கண்டுபிடித்தனர். “அப்பா, இது டீ தண்ணிப்பா” என்று தங்கள் அப்பாவிடம் சொல்ல, அவரும் சுவைத்துப் பார்த்தார். ‘ஆமாம் டீ தண்ணி’. உடனே ஒரு அண்டாவை எடுத்து வைத்து மழை நீரை பிடிக்க ஆரம்பித்தார். அவர் பக்கத்து விட்டுக்கு சொல்ல அவர்கள் பக் கத்து ஏரியாவுக்கு சொல்ல, அவர் கள் பக்கத்து ஊருக்கு சொல்ல தமிழகம் முழுவதும் செய்தி பரவியது.

மழைக்கு பயந்து உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் மழையை வரவேற்க தயாராகி விட்டார்கள். வீட்டில் இருந்த பெரிய பாத்திரங்கள் அனைத்தையும் காலி செய்து மொட்டைமாடியிலும் வாச லிலும் வைத்துக்கொண்டு தயா ரானார்கள். சிலர் பாலும் சர்க்கரையும் கலந்து மழை பெய்ததும் தேநீர் தயார் செய்துவிடலாம் என்று கனவு கண்டார்கள்.

அந்த நேரத்தில் இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது. பாண்டிச் சேரியை கடக்கும்போது இன் னொரு சூறாவளிக் காற்று ஆவின் பால் தொழிற்சாலையில் இருந்து நான்கு பால் வேன்களை அலேக்காக காற்றில் சுழற்றியது. மேலே வந்த வேன்கள் தலைகீழாக கவிழ்ந்தன. மொத்த பாலும் மேகங்களுக்குள் சென்றன.

இப்போது சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்தது மழை. இப்போது தேயிலை நீரும் பாலும் கலந்து தேநீராகவே மாறிவிட்டது. வானிலை மையம் இன்னும் குழம்பிவிட்டது. செயற்கைக் கோளில் இருந்து வந்த படங்களும் இவர்களை குழப்பியேவிட்டது. இப்படி அவர் கள் படங்களை பார்த்ததே இல்லை. ஒரே ஒரு விஞ்ஞானி மட்டும் சரியாக கணித்து எல்லா டிவி சேனல்களுக்கு செய்தியை கொடுத்தார்.

“இரவு 10 மணியில் இருந்து 12 மணி வரை ஸ்ட்ராங் டீ மழை பெய்யும், 12-ல் இருந்து இரவு ரெண்டு மணி வரை மீடியம் டீ மழை ஆங்காங்கே பெய்யும், இரண்டு மணியில் இருந்து காலை நான்குமணி வரையில் வெறும் டீ தண்ணி பெய்யும், அதற்கு மேல் எப்படி பெய்யும் என எங்களால் கணிக்க முடியவில்லை.”

சரி, இரவு எத்தனை மணிக்கு எழுந்து என்ன மழையை பார்க்கப்போகிறீர்கள்? பாத்திரங்கள் எல்லாம் தயாரா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x