Published : 18 Dec 2015 01:11 PM
Last Updated : 18 Dec 2015 01:11 PM
பரபரக்கும் நிவாரண முகாமின் துவக்கத்திலேயே இவரைப் பார்க்கலாம். முகாமில் 'கோமதி மேம்' என தன்னார்வலர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் ஒரு பத்திரிகையாளர். முன்பெல்லாம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவர் தூர்தர்ஷனில் டாக்டரோடு பேசுவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்களை பேட்டி எடுத்திருக்கிறார். பொங்கல், தீபாவளி போன்ற தருணங்களில் திரைநட்சத்திரங்களை நேர்காணுவார்.
கணவர் எஸ்.என்.சுரேஷ், டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸில் எச்ஆர் மேலாளர். முகாம் தொடங்கின முதல் இரண்டு நாள்களில் அவரும் தன்னார்வலராகப் பணியாற்றிச் சென்றுள்ளார்.
''இங்க வந்து நிறைய கத்துகிட்டேன். இது முடிச்சிட்டு நான் போகும்போது இங்கிருந்தே நிறைய எனக்கு நிறைய கண்டெண்ட் கிடைச்சிருக்கு. சின்ன வயதிலிருந்து 80 வயது வரை உள்ளவங்க வந்து உழைக்கறதைப் பாக்கறேன்.
எல்லாரும் பங்கெடுத்துக்கொள்ளும் இந்த மாதிரி இடங்களுக்கு வர்றத்துக்கு பலபேருக்கு கூச்சம். என்னைக் கேட்டா தயக்கம் உடையணும். குறைந்த பட்சம் கேட்புப் படிவம் எழுதித் தரலாம். இல்ல மேற்பார்வை நல்லா வரும்னா கூட அதையும் செய்யலாம். உடல் திடமா உள்ளவங்க லோடு இறக்கலாம் ஏற்றலாம். பெண்களைப் பொறுத்தவரை கிட்ஸ் பேக் தயார் பண்ணலாம். குழந்தைகள் பிஸ்கெட் பாக்கெட் பிரிச்சி அடுக்கலாம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ல நான் நேரலை நிகழ்சிகள்ல நிறைய தொலைபேசி அழைப்புகளைக் கேட்டிருக்கேன். அந்த அனுபவத்துல, ஒரே நேரத்துல பல குரல்களுக்கு என்னால இங்கே செவிசாய்க்க முடியுது. இங்கப் பாத்திங்கன்னா ஒருநாள் நான் ஆயிரம் தொலைபேசிகூட வரும். நன்கொடையாளர்கள் இவ்வளவு தரலாமான்னு கேப்பாங்க. வாங்கிக்கறவங்க இவ்வளவு வேணும்பாங்க. கொடுக்கறவங்களையும் வாங்கறவங்களையும் கேதர் பண்ணணும்.
வர்ற போன்கால்ல நான் முக்கியமா தெரிஞ்சிகிட்டது பெண்களோட பிரச்சனை. நிவாரணப் பொருட்களுக்கான லிஸ்ட்ல சானிடரி நாப்கின் ஆட் பண்ணுங்க சார்னு கேட்டேன். மழை, வெள்ளம், சுனாமி வரும் போகும். ஆனா பெண்களோட பிரச்சனை எப்பவும் மாறப்போறது இல்லை. அதேமாதிரி பிறந்த குழந்தைக்கு டயாபர் தேவைப்படும்.
இங்க வந்தபிறகுதான் சாப்பாடோட மதிப்பையே தெரிஞ்சிகிட்டேன். துணிமணிகளோட அருமையைத் தெரிஞ்சிகிட்டேன். ஒன்னு சொல்லட்டுங்களா? இங்க வர்ற ஒவ்வொருத்தரும் ரொம்ப பொறுமை காக்கறதைப் பாக்கிறேன். சிலபேர் வாங்கறதுக்கு ரொம்ப கூச்சப்படறாங்க சார். அதப்பாக்கும்போதுதான் கொடுக்கறதைவிட வாங்கறது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது.
காலைல வீட்ல சமைச்சி வச்சிட்டுத்தான் வர்றேன். குழந்தைங்களை தனியாத்தான் விட்டுட்டு வருவேன். ஒன்னும் பயமில்லை. மதியம் போன் பண்ணி தெரிஞ்சிப்பேன். இல்லைன்னா குழந்தைகளிடம் இருந்து சாப்பிட்டாச்சின்னு மெஸேஜ் வரும். என் குழந்தைங்ககிட்ட வீட்டுக்குப் போனதும் இன்னிக்கு என்னன்ன மாதிரி ஆட்களை சந்திச்சேன்னு சொல்வேன். அவங்களுக்குத் தெரியனுமில்லையா?
மழை வந்து நிறைய சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கு. கண்டிப்பான ஒரு ஆசிரியர் மாதிரி பளார்னு அடிச்சி சொல்லிட்டு போயிருக்கு. எவ்வளவோ பேரோட செல்வம் வெள்ளத்துல அடிச்சிகிட்டுப் போயிடுச்சி. பணம் நிலை இல்ல. அன்பு மட்டும்தான் நிலையானதுன்னு தெரிஞ்சிக்க இந்த அனுபவம் நமக்கு தேவைப்பட்டிருக்கு. என்ன சொல்ல!
ஃபோன்ல நிறைய பேரு வழியில தாங்கள் பாத்த விஷயங்களை தெரிவிச்சாங்க. ''அங்கே வயசானவங்க மாட்டிகிட்டாங்க, வழியில அந்தப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கு. இந்தப் பக்கம் ஜனங்க வரமுடியாம தவிக்கறாங்க'' அப்படின்னு வழியில பாத்தவங்க சொல்வாங்க. ஆச்சரியமா இருந்தது.
அடுத்தவங்க கஷ்டத்தை இவ்வளவு பொறுப்போட மக்கள் சொல்றதைப் பாக்க முடிஞ்சது. இங்கே வந்து நான் நிறைய கத்துகிட்டேன். இந்த முகாம்ல எக்கச்சக்கமான வாழ்க்கைக்கான செய்திகள் கிடைஞ்சிருக்கு. நிச்சயம் இதைப் பத்தி நிறைய எழுதுவேன்''என்று கூறும் கோமதிசுரேஷ் முகத்தில் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொண்ட மலர்ச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT