Published : 14 Dec 2015 10:17 AM
Last Updated : 14 Dec 2015 10:17 AM

ராஜ்கபூர் 10

‘திஷோ மேன் ஆஃப் பாலிவுட்’ என்று புகழப்படும் இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநரான ராஜ்கபூர் (Raj Kapoor) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பாகிஸ்தானின் பெஷாவரில் (1924) பிறந்தார். இவரது தந்தை பிருத்விராஜ் கபூர் திரைப்பட, நாடக நடிகர். 1929-ல் குடும்பம் பாம்பேயில் குடியேறியது. படப்பிடிப்புத் தளத்தில் உதவி செய்யும் பையனாக திரைப்படத் துறையில் நுழைந்தவர், 11 வயதில் ‘இன்குலாப்’ என்ற படத்தில் நடித் தார்.

l 12 ஆண்டுகளுக்கு பிறகு, ‘நீல் கமல்’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுக நாயகி மதுபாலாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 24 வயதில் ஆர்.கே.பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக ஸ்டுடியோ தொடங்கினார்.

l இவர் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த முதல் படம்‘ஆக்’. இதில் ஜோடியாக நர்கீஸ் நடித்தார். இந்த ஜோடி இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. 1949-ல் மெஹபூப் கான் தயாரித்த ‘அந்தாஜ்’ திரைப்படம் மூலம் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்து பெற்றார்.

l தொடர்ந்து ‘பர்சாத்’, ‘ஆவாரா’, ‘சோரி சோரி’, ‘ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதீ ஹை’ என பல வெற்றிப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்தார். 1964-ல் தனது முதல் வண்ணப்படமான ‘சங்கம்’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். இதன் வெற்றி மூலம், உலகப்புகழ் பெற்றார்.

l இசை இயக்குநர்கள் ஷங்கர் ஜெய்கிஷன், பாடல் ஆசிரியர் ஹஸ்ரத் ஜெய்புரி, நடிகை டிம்பிள் கபாடியா உட்பட பலரை அறிமுகம் செய்தவர். இவரது ‘பாடும் குரல்’ என்று பேசப்பட்ட முகேஷ், அனேகமாக இவரது எல்லா படங்களிலும் இவருக்குப் பின்னணி பாடினார்.

l தனது லட்சியத் திரைப்படமான ‘மேரா நாம் ஜோக்கர்’ திரைப்படத்தை 6 ஆண்டுகள் போராடி தயாரித்தார். படம் தோல்வி அடைந்தபோதிலும் இதுதான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்பார்.

l மூத்த மகன் ரண்தீர் கபூர் இயக்குநராக, நடிகராக அறிமுகமான ‘கல் ஆஜ் அவுர் கல்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். நடிப்பதைவிட திரைப்படங்கள் தயாரிப்பது, இயக்குவதில் அதிக கவனம் செலுத்தினார்.

l இரண்டாவது மகன் ரிஷி கபூரை நாயகனாக வைத்து இவர் தயாரித்து, இயக்கிய ‘பாபி’ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ‘ 420’, ‘சப்னோ கா சவுதாகர்’, ‘பூட் பாலிஷ்’, ‘சத்யம் சிவம் சுந்தரம்’, ‘பிரேம் ரோக்’, ‘ராம் தேரி கங்கா மைலி’ ஆகிய திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்தன.

l 1982-ல் நடித்த ‘வக்கீல் பாபு’ திரைப்படம்தான் ஒரு நடிகராக இவரது இறுதிப் படம். ‘ஹென்னா’ திரைப்பட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு, 63-வது வயதில் (1988) மறைந்தார்.

l இந்திய சினிமாவின் சார்லி சாப்ளின் எனப்படும் ராஜ்கபூர் 12 முறை ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார். 1987-ல் தாதா சாஹேப் பால்கே விருது பெற்றார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் திரை நட்சத்திரங்களாக பாலிவுட்டில் கோலோச்சி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x