Published : 12 Dec 2015 06:32 PM
Last Updated : 12 Dec 2015 06:32 PM
வேர்க்க விறுவிறுக்க சளைக்காமல் தொடர்ந்து பெட்டிகளை கொண்டுபோய் வைத்துக்கொண்டிருக்கும் விஜய்கிருஷ்ணா எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்துக்கொண்டிருக்கிறார். வியர்வையில் நனைந்துகொண்டிருந்தவரை சற்றுநேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு பின்னர் பேசினோம்.
பெரம்பூரிலிருந்து 5 நாட்களாக வந்து உதவிகள் செய்கிறார். விஜய்கிருஷ்ணாவின் அப்பா, ஊரப்பாக்கத்தில் டெக்ஸ்டைல் மேனிபேக்சரிங் ஃபேக்டரியில் ஜிஎம்மாகப் பணியாற்றி வருகிறார்.
''பெரம்பூர்ல கனமழை அன்னிக்கு ரொம்ப சிரமப்பட்டோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 4 மணிக்கு ஊரப்பாக்கத்துல டிரெயின் பிடிச்ச அப்பா ராத்திரி பன்னிரண்டரைக்குத்தான் திரும்பினார். எங்கப் பாத்தாலும் தண்ணி. ஆனா குடியிருப்புப் பகுதியில அன்னிக்கு தண்ணி தேங்கிச்சே தவிர மறுநாள் வடிஞ்சிடிச்சி. காரணம் பெரம்பூர்ல பக்கா டிரைனேஜ் சிஸ்டம். ரெயில்வே ஸ்டேசன்தான் பாதிக்கப்பட்டுச்சி. ரயில் பாதையே தெரியவில்லை. ரயில் சர்வீஸ் பாதிக்கப்பட்டதால ஜனங்க வெளிய எங்கேயும்போகமுடியல.
என்ன பிரச்சனைன்னா மழைநீர்ல சாக்கடை நீர் கலந்துடிச்சி. இதனால் அங்க பலருக்கும் சேற்றுப்புண். பெரம்பூர் அருகே வியாசர்பாடி, ஓட்டேரி, கொளத்தூர்ல்லாம் இன்னும்கூட வடியவில்லை. வடிய நாளாகுமா இல்ல அப்படியே இருக்குமான்னு தெரியல.. நண்பனோட ஊரான வியாசர்பாடிக்கு போய் உணவுப்பொட்டலம் பிஸ்கெட பாக்கெட், எல்லாம் கொடுக்க இருந்தோம். ஆனா மடிப்பாக்கம் வரணும்னு நண்பர்கள் சொன்னதால அங்கே போய் உதவிகள் செஞ்சோம். அப்புறம்தான் நியூஸ்பேப்பர்ல பாத்துட்டு இங்கே வந்தேன்.
இங்க ஒரு கிரேட் ஃபிளாட்பாரம் கிடைச்சிருக்கு. இஸ்லாம், இந்து, கிறிஸ்டியன், ஜெயின்ஸ், சீக்கியர்கள்னு ஜாதி, மதம், இன பேதமில்லாம வேறவேற மொழி பேசறவங்களை ஒன்னா இணைச்சிருக்கு இந்த நிவாரண முகாம். வேறுபாடே கிடையாது. யாரையும் ஒதுக்கறதில்லை. ஒருத்தருக்கு ஒன்னுன்னா எல்லாரும் ஓடிவந்து பாக்கறாங்க. ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்யறாங்க.
உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் யாராக இருந்தாலும் இந்த காம்ப் வரவேற்கிறது. நான் பேசறது ஏதோ மேடைப் பேச்சில்ல. நாளைய இந்தியா இளைஞர்கள் கையிலன்னு சொல்றாங்களே. ஆனா அது எப்படியிருக்கணும்னு யாரும் சொல்றதில்ல. ஆனா அதை இங்கே பாத்து தெரிஞ்சிகிட்டேன் சார்.''
வியர்வையில் குளிப்பதைப் பற்றி கவலைப்படாமல் திரும்பவும் ''நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டியடுக்கிற வேலை இருக்கு சார்'' என நம்மிடமிருந்து விடைபெற்றார் விஜய்கிருஷ்ணா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT