Published : 06 Dec 2015 09:55 AM
Last Updated : 06 Dec 2015 09:55 AM

சாவித்திரி 10

‘நடிகையர் திலகம்’ என போற்றப்பட்டவர்

புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளரான சாவித்திரி (Savitri) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அன்றைய மதராஸ் மாகாணத் தின் குண்டூர் மாவட்டம் சிறாவூ ரில் (தற்போது ஆந்திரப் பிரதேசத் தில் உள்ளது) 1935-ல் பிறந்தார். 6 மாதக் குழந்தையாக இருந்த போது தந்தையை இழந்தார். உள்ளூரில் உள்ள கஸ்தூரிபா உயர்நிலைப் பள்ளியில் பயின் றார்.

l சிஸ்தா பூர்ணய்யா சாஸ்திரிகளிடம் இசை, நடனம் பயின்றார். குழந்தை நட்சத்திரமாக விஜயவாடாவில் மேடைகளில் தோன்றி நடித்தார். என்.டி.ராமாராவ் நடத்திய நாடக கம்பெனியில் நடித்தார். பின்னர் சொந்தமாக ‘நவபாரத நாட்டிய மண்டலி’ என்ற நாடக கம்பெனியை தொடங்கினார். இவரது ‘ஆத்ம வஞ்சனா’ நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.

l 1949-ல் ‘அக்னி பரீட்சா’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அப்போது இவருக்கு வயது 14. முதிர்ச்சியான அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று கூறி, நிராகரிக்கப்பட்டார். பிறகு, ‘சம்சாரம்’ என்ற படத்துக்கு தேர்வானார். அதிக ரீடேக் வாங்கியதால், முக்கிய வேடத்தில் இருந்து நீக்கப்பட்டு, துணை வேடம் கொடுக்கப்பட்டது.

l ‘பாதாள பைரவி’ திரைப்படத்தில் 1951-ல் நடனமாடினார். ‘பெல்லி சேசி சூடு’ திரைப்படத்தில் 2-வது நாயகியாக இவர் நடித்தது, முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் இவரது நடிப்பும் நடன பாவங்களும் பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தது.

l ‘தேவதாசு’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். தொடர்ந்து ‘சந்திரஹாரம்’, ‘அர்தாங்கை’, ‘மிஸ்ஸம்மா’, ‘டோங்கா ராமுடு’, ‘மாயாபஜார்’, ‘ஆராதனா’, ‘ரக்த திலகம்’, ‘பூஜாபலன்’ என ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தார்.

l ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார். ‘மனம் போல் மாங்கல்யம்’ திரைப்படத்தில் நடித்தபோது, ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார்.

l 1950-களின் மத்தியிலும் 60-களிலும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் சிறப்பாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒருசில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

l களத்தூர் கண்ணம்மா, மிஸியம்மா, திருவிளையாடல், கந்தன் கருணை, படித்தால் மட்டும் போதுமா, பரிசு, பாசமலர், பாவ மன்னிப்பு, கைகொடுத்த தெய்வம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தன.

l தமிழ்த் திரையுலகில் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டார். ‘சிவராக்கு கிலேடி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவர் விருதை 1960-ல் பெற்றார். தயாரிப்பாளர், இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘தென்னிந்திய மீனாகுமாரி’ என்று அழைக்கப்பட்டார்.

l அன்பு, பாசம், நேசம், காதல், கோபம், ஆவேசம், வீரம், நகைச்சுவை என எந்த வகையான உணர்ச்சியாக இருந்தாலும் இயல்பாகவும், தனித்துவம் வாய்ந்த திறனுடனும் வெளிப்படுத்தினார். பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், தனது அபார நடிப்புத் திறனால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த வருமான சாவித்திரி 46-வது வயதில் (1981) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x