Published : 11 Dec 2015 10:16 AM
Last Updated : 11 Dec 2015 10:16 AM

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்: விஸ்வநாதன் ஆனந்த் 10

உலகப் புகழ்பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand) பிறந்த நாள் இன்று (டிசம்பர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l மயிலாடுதுறையில் (1969) பிறந்தவர். தந்தை தெற்கு ரயில்வே பொது மேலாளராக இருந்தவர். கூர்மையான நினைவாற்றல் கொண்ட ஆனந்த் 6 வயது முதல், அம்மாவிடம் சதுரங்கப் பயிற்சி பெற்றார். சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றார்.

l ஆனந்தை சிறு வயதிலேயே ‘டால்’ என்ற செஸ் கிளப்பில் சேர்த்தார் தாய். 14 வயதில் தேசிய சப்-ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றார். 15 வயதில் அனைத்துலக மாஸ்டர் விருது பெற்றார். 1985-ல் தேசிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார்.

l லயோலா கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றவர். 3-ம் ஆண்டு படிக்கும்போதே உலக அளவில் செஸ் தரவரிசை பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தார். இறுதித் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.

l 1987-ல் சர்வதேச ஜூனியர் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். இதன்மூலம் இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். கோவையில் 1988-ல் நடந்த சர்வதேச போட்டியில் வென்று இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரானார்.

l சர்வதேச போட்டிக்கு 1991-ல் முதன்முதலாக தகுதி பெற்றார். 1995-ல் அரையிறுதி வரையும், 1996-ல் பிசிஏ உலக சாம்பியன் போட்டியில் இறுதிச்சுற்று வரையும் முன்னேறினார். ஸ்விட்சர்லாந்தில் 1997-ல் நடந்த ஃபிடே (FIDE) உலக போட்டியில் இறுதிச்சுற்று வரை சென்றார்.

l 2000-ல் நடந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷ்யாவின் அலெக்ஸீ ஷிரோவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் பெற்றார். இதன்மூலம் இந்தியாவின் புகழை உலக அளவில் உயர்த்தினார். 2007, 2009 ஆகிய ஆண்டுகளிலும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.

l பல்கேரியாவில் 2010-ல் நடந்த போட்டியிலும், 2012-ல் மாஸ்கோவில் நடந்த போட்டியிலும் வென்று மொத்தம் 5 முறை சாம்பியன் என்ற உலக சாதனை படைத்தார்.

l உலக செஸ் கூட்டமைப்பு சார்பில் 2003-ல் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்று, ‘உலக அதிவேக செஸ் வெற்றி வீரர்’ என்ற பட்டத்தை வென்றார். 2005-ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச போட்டியில் 2-ம் இடம் பிடித்தார். 2007 முதல் 2013 வரை உலக தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்த பெருமைக்குரியவர்.

l அர்ஜுனா விருது, பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்ம, தேசிய குடிமகன் விருது, சோவியத் லேண்ட் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 1997, 1998, 2003, 2004, 2007, 2008-ம் ஆண்டுகளுக்கான ‘செஸ் ஆஸ்கர்’ உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

l ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த செஸ் விளையாட்டில், இந்திய ஆற்றலின் பெருமையை நிலைநாட்டியவர். செஸ் ரசிகர்களால் ‘விஷி’ என்று அன்புடன் அழைக்கப்படும் உலக சாதனை வீரரான விஸ்வநாதன் ஆனந்த் தனது வெற்றிப் பயணத்தை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x