Published : 25 Dec 2015 10:39 AM
Last Updated : 25 Dec 2015 10:39 AM
இந்தி திரையுலகுக்கு வசீகரமான புதிய இசையை அறிமுகம் செய்த பிரபல இசை இயக்குநர் நவ்ஷாத் அலி (Naushad Ali) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் (1919) பிறந்தார். தந்தை நீதிமன்ற குமாஸ்தா. சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். இசைக் கருவிகள் விற்கும் கடையை ஆர்வத்தோடு பார்ப்பார். இதை பார்த்த கடைக்காரர், சிறுவனை கடையில் வேலைக்கு சேர்த்துக்கொண்டார்.
l வாத்தியங்களை சுத்தம் செய்வது இவரது வேலை. முதலாளி இல்லாத நேரத்தில் அவற்றை எடுத்து வாசித்துப் பழகினார். ஒருநாள் மெய்மறந்து ஹார்மோனியம் வாசித்தபோது, முதலாளி வந்துவிட்டார். இவர் பயத்தில் நடுங்கினார். முதலாளியோ, அந்த ஹார்மோனியத்தை அவருக்கே பரிசாக அளித்து வாழ்த்தி அனுப்பினார்.
l உஸ்தாத் உமர் அன்சாரியிடம் சங்கீதம் கற்றார். தந்தைக்கு இதில் விருப்பம் இல்லாததால், பாட்டியின் ஆதரவுடன் இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார். நடுவே, மெட்ரிக் வகுப்பிலும் தேறினார்.
l லக்னோவின் வின்ட்ஸர் இசைக் குழுவுடன் டெல்லி, மொராதாபாத், ஜெய்ப்பூர் என பல ஊர்களுக்கு சென்றார். 1935-ல் இக்குழு கலைக்கப்பட்டது. சொந்த ஊர் திரும்ப விருப்பமின்றி, மும்பை சென்றார். வருமானம் இல்லாததால், நடைபாதையில் தங்கினார்.
l தீவிர முயற்சிக்குப் பிறகு ‘பாக்பான்’, ‘கஞ்சன்’ திரைப்படங்களில் இணை இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். 1940-ல் ‘பிரேம் நகர்’ திரைப்படத்துக்கு இசையமைத்தார். அடுத்து வெளிவந்த ‘ஸ்டேஷன் மாஸ்டர்’ திரைப்படம் வெற்றிபெற்றது. 1944-ல் வெளிவந்த ‘ரத்தன்’ திரைப்படம், இந்தி திரையுலகில் இவருக்கு தனி அடையாளம் தந்தது.
l பாரம்பரிய இந்துஸ்தானி இசையை திரைஇசையில் கொண்டு வந்தார். கிளாரினட், மாண்டலின் போன்ற ஐரோப்பிய இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் பெற்றவர். புல்லாங்குழல், கிளாரினட், சிதார், மாண்டலினை இணைத்து இசை மழை பொழிந்தார். ‘சங்கீத சக்ரவர்த்தி’ என்று போற்றப்பட்டார்.
l இவரது இசையில் வெளிவந்த ஏறக்குறைய அனைத்துப் படங்களுமே வெள்ளி விழா, பொன்விழா, வைர விழா கொண்டாடின. ‘பைஜு பாவ்ரா’, ‘முகலே ஆஸம்’, ‘கங்கா ஜம்னா’, ‘மேரே மெஹபூப்’, ‘அனோகி அதா’, ‘மேளா’, ‘அந்தாஸ்’, ‘கோஹினூர்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
l 1942 முதல் 1960-களின் இறுதி வரை இந்தி திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். ‘அக்பர் தி கிரேட்’ தொலைக்காட்சித் தொடருக்கு இசை அமைத்தார். இவர் நல்ல கவிஞரும்கூட. இவரது ‘ஆட்வா சுர்’ என்ற உருது கவிதைத் தொகுப்பு 8 கஜல்களுடன் ஆல்பமாக வெளிவந்தது.
l ஃபிலிம்ஃபேர் சிறந்த இசையமைப்பாளர் விருதை 1954-ல் பெற்றார். 1957-ல் ‘மதர் இந்தியா’ திரைப்பட இசைக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். தாதா சாஹேப் பால்கே, பத்மபூஷண் விருதுகளும் பெற்றார். 86 வயதில் ‘தாஜ்மஹால்’ திரைப்படத்துக்கு இசையமைத்ததன்மூலம், உலகின் வயது முதிர்ந்த இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
l தனது அற்புத இசை ஆற்றலால் இந்தி திரைஉலகில் பல கோடி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்ட நவ்ஷாத் அலி 87-வது வயதில் (2006) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT