Published : 20 May 2021 12:43 PM
Last Updated : 20 May 2021 12:43 PM
இந்த கரோனா காலத்தில் ‘வார் ரூம்’ என்றழைக்கப்படும் ‘போர் அறை’ அல்லது ‘கட்டளை மையம்’ முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்கள் ‘வார் ரூம்’களை அமைத்து கரோனாவுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றன. தமிழகத்தில் அண்மையில் இந்த ‘வார் ரூம்’ சென்னையில் உருவாக்கப்பட்டது. இந்த ‘வார் ரூம்’ எப்படி உருவானது?
‘வார் ரூம்’ என்றே பெயரே இது போர்க்காலங்களில் உருவானது என்பதை சொல்லிவிடுகிறது. உலகப் போர்களில் தலைவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க ‘வார் ரூம்’கள் உதவியுள்ளன. முதல் உலகப் போரில் ‘வார் ரூம்’ என்ற பெயரில் எதுவும் செயல்படவில்லை. ஆனால், ‘ரூம் 40” என்ற பெயரில் ஒரு குழு பிரிட்டனில் உருவாக்கப்பட்டது. 1914-ல் பிரிட்டன் கப்பற்படைக்கு உதவும் வகையில் இந்தக் குழு செயல்பட்டுள்ளது. ஜெர்மனி வானொலி நிலையங்களில் பகிரப்படும் தகவல்களை இடைமறித்துக் கேட்கவும், திரைமறைவில் பகிரும் சங்கேத வார்த்தைகளை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்த ‘ரூம் 40’ என்ற குழு உதவியிருக்கிறது. முதல் உலகப் போரில் இந்த அறை, ஒரு தகவல் களஞ்சியம் போல பிரிட்டனுக்கு உதவியிருக்கிறது.
இதேபோல இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்கு வகித்த பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உருவாக்கிய ‘சர்ச்சில் வார் ரூம்’ மிகப் பிரபலம். இதை ‘சர்ச்சில் கேபினெட் ரூம்’, ‘மேப் ரூம்’ என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின்போது லண்டனில் நிலவறையில் செயல்பட்டு வந்த இந்த வார் ரூமில், கேபினெட் கூடி முக்கிய முடிவுகளை எடுப்பது, போர் உத்திகளை வகுப்பது, களத்தில் உள்ள ராணுவத்தினருக்கு உதவுவது எனப் பல பணிகளை இந்த அறையிலிருந்து செய்திருக்கிறார்கள். இந்த ‘சர்ச்சில் வார் ரூம்’ லண்டனில் தற்போது அருங்காட்சியமாகச் செயல்பட்டு வருகிறது.
போரைத் தாண்டி தற்போது இந்த ‘வார் ரூம்’ என்ற பெயர் பொதுவான பெயராகிவிட்டது. இன்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் எல்லாம் ‘வார் ரூம்’கள் உள்ளன. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களில் கொஞ்சம் அதிகம். நிறுவனங்களில் ஏற்படும் கடினமான விவகாரங்களுக்குத் தீர்வு காணவும், பணிகளை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடுவதற்கும் பேசும் அறைகளை ‘வார் ரூம்’ என்றுதான் அழைக்கிறார்கள்.
இப்போது தமிழகம் உள்படப் பல மாநில அரசுகள் அமைத்துள்ள இந்த ‘வார் ரூம்’ புதிது அல்ல. ஏற்கெனவே மழை, வெள்ளம், புயல் காலங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் அல்லவா? அதேபோன்ற ஓர் உத்திதான் ‘வார் ரூம்’. கரோனா வார் ரூம் என்பது மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, மருந்துகள் இருப்பு போன்ற தகவல்களை ஓரிடத்தில் ஒருங்கிணைந்து பெற்று, இந்த மையத்தைத் தொடர்புகொள்ளும் பொதுமக்களுக்கு அவை பகிரப்படுகின்றன. இதற்காகப் பிரத்யேகத் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
இப்படிப் போர்க்காலங்களில் உருவான ‘வார் ரூம்’ என்ற வார்த்தைதான், இன்று பலவாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT