Published : 14 May 2021 10:16 AM
Last Updated : 14 May 2021 10:16 AM

திரைப்படச்சோலை 31: கட்டுமரம்

சிவகுமார்

1981- ஜூலை 26-ந்தேதி நாகர்கோயில் குமாரசாமி லாட்ஜில் ‘ஆனந்தராகம்’ படப்பிடிப்பு குழுவினருக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். கிராமத்தில் எனது ’அத்தை சீரியஸ், உடனே புறப்பட்டு வரவும்!’ என்று சென்னையிலிருந்து என் துணைவியார் போன் மூலம் தகவல் தெரிவிக்கிறார்.

யார் இந்த அத்தை?

33 வயதில் இந்த உலகை விட்டு அகால மரணத்தைத் தழுவிய என் தந்தையின் மூத்த சகோதரி- மசாத்தாள். இப்போது அவருக்கு 88 வயது. தந்தையின் வம்சாவழியில் இருக்கும் ஒரே ஜீவன்...

அவர்கள் வாழ்ந்த காலம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பஞ்சம் தலைவிரித்தாடிய 1940-களின் மையப்பகுதி. மழை பெய்ய மறந்து விட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காய்ந்த புல் பூண்டு, பட்டுப்போன மரங்கள். ஒரு தீக்குச்சியே போதும் அந்த பூமியே நெருப்புக்கோளம் ஆவதற்கு. இத்தனை வறட்சியிலும் எருக்கஞ்செடியும், அரளி மரமும் மட்டும் எப்படி துளிர்க்கின்றன? ஒரு ஸ்பூன் எருக்கம்பால் ஒரு குடும்பத்தை மேலே அனுப்பப் போதுமானது. ஒரு அரளிக்கொட்டை அரைத்தால் பத்து பேர் உடனே பரலோகம் போக முடியும். இயற்கைக்கு ஏன் இந்த வன்மம்? வா, என் எருக்கம்பாலைக்குடி, அரளி விதையை அரைத்துக்குடித்து, சீக்கிரம் மேலே போ- என்று இவையெல்லாம் துளிர்க்கின்றனவா?

மாடு, கன்றுக்குத் தீனி இல்லை. கிராமத்தில் ஆடு, மாடுகளைப் பிரியமாக வளர்ப்பார்கள். இன்று அவை காணாமல் போய் விட்டன.

ஏழை, பாழை சாப்பிட, ஆற்றோரம் விளையும் கற்றாழை இலைகளை வெட்டி அடிமரம், தண்டுப் பகுதியில் கடப்பாறை போட்டு நெம்பி, தோண்டி எடுத்தால் வெள்ளையாக கிழங்கு வரும். அதை 2 அங்குல சதுரமாக வெட்டி -பெரிய மொடாக்களில் (பெரிய மண்பானைகள்) போட்டு, பாதி வரை நிரப்பி, நார் எடுத்த புளி, ஒரு கால்பந்து அளவில் உருட்டி உள்ளே போட்டு, 5-6 கருப்பட்டியைத் தட்டி பொடியாக்கி, உள்ளே தூவி, முக்கால் மொடாவுக்கு நீர் ஊற்றி 24 மணி நேரம் எரித்தால், புளியின் எஸன்சும், கருப்பட்டியின் இனிப்பும், அந்த கற்றாழக்கிழங்கில் ஊறி செக்கச்செவேல் என்று திருநெல்வேலி அல்வா போல இருக்கும். பசிக்கு அழுகும் குழந்தைகளுக்கு 4 துண்டு கொடுத்து விட்டு, பெரியவர்கள் ஆளுக்கு இரண்டு சாப்பிடுவார்கள். சரியாக ஒரு மணி நேரத்தில் அவை ஜீரணமாகி வயிற்றுப் போக்காக, தண்ணீராக மலம் கழியும். ஒட்டகப்பால் பவுடர் ரேஷனில் கொடுப்பார்கள். வாங்கி வந்து வெந்நீர் வைத்து 1 ஸ்பூன் பால் பவுடரை கலந்து, சர்க்கரை சேர்த்து குடிக்கத் தருவார்கள். ஒட்டகத்தின் உடம்பில் வரும் ‘கவிச்சு’ வாசனை அந்தப் பாலைக் குடிக்கும்போது வரும்.

ஆனந்த ராகம்

இதையெல்லாம் சாப்பிட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்தவர் என் அத்தை. சொந்தமாக நிலபுலன் கிடையாது. கூலி வேலை செய்துதான் பிழைக்க வேண்டும். இந்தப் பஞ்சத்தில் 4 ஆண்கள், 3 பெண்கள் வாரிசுகள். இதற்கும் வளரும் வரை கஞ்சி ஊத்த வேண்டும்.

காடுகரையில் வேலை இல்லை - விமான நிலையத்தில் ஓடுதளம் அமைக்கும் வேலை. லாரிகளில் கருங்கல் ஜல்லி, சிமெண்ட் மூட்டைகள் வந்து விடும். அவற்றை தரையில் கொட்டி, ஜல்லியுடன், சிமெண்ட் கலந்து, நீர் விட்டு, கலவையாக்கி, பாண்டு என்று சொல்கிற இரும்புக் கூடைகளில் அள்ளிக் கொடுப்பார்கள். இது ஆண்கள் வேலை. பெண்கள் தலையில் சும்மாடு கூட்டி வைத்து அதன் மேல் இந்த சிமெண்ட் கலவையை பாண்டில் சுமந்து சென்று ஓடுதளம் அமைக்க ஒரு கிலோமீட்டர் தூரம் வரை கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். ரோடு ரோலர் வந்து, அவற்றை சமனப்படுத்தி, அதை அமுக்கி காங்கிரீட் சாலையாக மாற்றும், இந்த பாண்டு சுமக்கும் வேலையை மாதக்கணக்கில் தினக்கூலிக்கு செய்தவர் என் அத்தை.

16 வயதில் சென்னைக்குப் படிக்கப்போகிறேன் என்று சொன்னபோது, ‘நான் செத்துப் போனா பொறந்த ஊட்டுக் கோடி (புடவைபோர்த்த) போட நீ இருக்கேன்னு நெனைச்சேன். இப்ப நீயும் பரதேசம் போறியா கண்ணு?’ என கண்ணீர் விட்டார். பரதேசம் என்பது கண்காணாத பூமி. ஈரோடு கோவையே போயிருக்காத பெண்மணிக்கு சென்னை பரதேசம்தான். ‘உலகத்திலே எந்த மூலையில் இருந்தாலும் உனக்கு மரியாதை செய்ய நான் வந்திருவேன்!’ என்று வாக்கு கொடுத்து விட்டு 1958-ல் சென்னை வந்தேன்.

இதழோடு இதழ்

இது 1981-ம் வருடம். இந்த 23 வருடங்களில்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள்?

ஓவியனாக தமிழ்நாட்டில் எத்தனை ஊர்கள், எத்தனை கோயில்கள், வடநாட்டில் பம்பாய், டெல்லி, ஹைதராபாத், அஜந்தா, எல்லோரா, கர்நாடகா, கேரளா என்று தேசாந்திரியாக எத்தனை இடங்களில் இந்தப் பாதம் பட்டிருக்கும்? 1965-ல் நடிக்க ஆரம்பித்து 1981 வரை 117 படங்கள் வெளி வந்து விட்டன. 54 கதாநாயகிகளை கட்டிப் பிடித்து டூயட் பாடியிருக்கிறேன். எத்தனை சாமி வேஷம்- வக்கீலாக, எஞ்சினியராக, வாத்தியாராக, விவசாயியாக... எத்தனை விதமான வேஷங்கள் போட்டிருக்கிறேன்?

சினிமாவுக்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்திருக்கிறேன். நீச்சல், குதிரை சவாரி, மோட்டார் சைக்கிள் சவாரி, ரேஸ் கார் ஓட்டுவது அத்தனையும் செய்து பார்த்திருக்கிறேன்.

இப்போது கடலில் அலைகளுக்கு நடுவே- கடற்கரையோரம் கூட 10 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக அடித்து வரும் அலைகளைத் தாண்டி, கட்டுமரத்தில் அமர்ந்து 3 மைல் தூரம் உள்ளே போய், துடுப்புப்போட்டு நகர்த்தியவாறு, ‘கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்’ பாடல் காட்சிக்கு நடிக்க வேண்டும்.

எதிலும் புதுமை செய்து பார்க்கும் பஞ்சு அருணாசலம் சார் தாமரைச் செந்தூர் பாண்டியின் மீனவர் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதிய கதையை வாங்கி கன்னியாகுமரி -முட்டம், உவரி, மணப்பாடு பகுதிகளில் படமாக்கத் திட்டமிட்டார்.

என்னுள் நீ

கடலில் மிதந்து வந்த படகில் மயங்கிக் கிடந்த அனாதை இளைஞன் ஹீரோ. அவனை மீனவன் சிவச்சந்திரன் மீட்டு தன்னோடு வைத்து மீன் பிடி தொழில் செய்யக்கற்றுக் கொடுக்கிறான். சிவச்சந்திரனுக்கு ராதா தங்கை. ராதாவுக்கும், ஹீரோவுக்கும் காதல் மலர்கிறது. இளையராஜாவின் பாடல், ‘மேகங்கருக்குது மழை வரப்பாக்குது வீசியடிக்குது காத்து - மழைக்காத்து’ - ‘ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ! ’என டூயட் பாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்கையாவது வசதியான, நிம்மதியான வாழ்க்கை வாழட்டும் என்று சிவச்சந்திரன் தன் தங்கை ராதாவை ஒரு பணக்காரன் வீட்டு பிள்ளை நிழல்கள் ரவிக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகிறார். அங்கு ராதா நிம்மதியாக வாழவில்லை. கணவனுக்கு உடல்ரீதியாக கோளாறு. ராதா அங்கேயும், ஹீரோ இங்கேயும் ஒருவரை ஒருவர் நினைத்து உருகி, கடைசியில் ஒன்று சேர்ந்து உயிரை விடுகிறார்கள். லைலா மஜ்னு காதல் கதையை அடிப்படையாக வைத்து பஞ்சு திரைக்கதை அமைத்திருந்தார்.

கட்டமரத்தில் வஜ்ராசனம் போல முழங்காலில் மண்டியிட்டுத்தான் உட்கார வேண்டும். சம்மணம் போட்டு உட்கார்ந்து துடுப்புப்போட்டால் அலையில் கட்டுமரம் மேலே எழும்பும்போது நாம் மல்லாக்க தண்ணீரில் விழுந்து விடுவோம். ஆகவே கடைசி வரை மண்டி போட்டபடியே துடுப்புப் போட வேண்டும். யோகாசனத்தல் வஜ்ராசனம் செய்து பழக்கப்பட்ட எனக்கு அது சிரமமில்லை. சிவச்சந்திரனுக்கு நீச்சல் தெரியாது. மண்டியிட்டு உட்காருவதும் சிரமம்.

கட்டுமரச் சவாரி

கொளுத்தும் வெயிலில் கடல் நீர் கொதித்துப் போய் சூடாக, ஆவி பறக்க ஆரம்பித்தது. மேலே நேரடியாக சுட்டெரிக்கும் வெயில், கீழே சூடான உப்புக்காற்று. இரண்டே நாளில் உடம்பு கறுத்து நீக்ரோ போல முகமே மாறி விட்டது. தொடர்ந்து அதே சூழலில் படப்பிடிப்பு நடந்ததால் அந்த கறுப்புத்தோல் அங்கங்கே உரிந்து வெண்குஷ்டம் வந்தவன் போல படப்பிடிப்பில் தெரிந்தது.

படத்தை டைரக்ட் செய்பவர் கமர்ஷியல் டிசைனர் ஓவியர் பரணி. மழைக்குக் கூட ஸ்டுடியோ பக்கம் ஒதுங்கி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்திருக்க மாட்டார் என்று தெரிகிறது. ஒளிப்பதிவாளர் -இளம் ஓவியர் -திருத்தணி சுவர்களிலெல்லாம் விளம்பர ஓவியம் தீட்டியவர். மிகுந்த ஆர்வம் உள்ளவர். இப்போது பெரியாரின் சீடர். வேலு பிரபாகர். ஆனால் அவருக்கு இது முதல் படம். கற்பனையில் தோன்றுவதைக் காட்சிப்படுத்த அனுபவம் போதாது. இரண்டு கத்துக்குட்டிகள் நடுவில் சிக்கி வதைபட்டேன்.

இந்த நேரத்தில் அத்தைக்கு ‘சீரியஸ்’னு தகவல். வேறு ஏதாவது காட்சிகளை எடுங்கள். இரண்டு நாளில் வந்து விடுவேன் என்று நாகர்கோயிலிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவனந்தபுரம் சென்றேன். அங்கிருந்து கொச்சி வழியாக கோவை செல்லும் ஃபோக்கர் பிரண்ஷிப் விமானத்திற்கு டிக்கெட் எடுத்து அமர்ந்தேன்.

விமானம் மேலே கிளம்பி, ஆடாமல் அசையாமல் பறந்து கொண்டிருந்தது. அசதியில் கண்ணயர்ந்தேன். அவ்வளவுதான். அடி வயிற்றிலிருந்து வாய் வரை காற்று முட்டியது போல உணர்வு. ஒன்றுமில்லை. விமானம் பறந்து கொண்டிருந்த 16 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 1000 அடி கீழே விழுந்து அப்படியே பறந்தது. அதிர்ச்சியில் ஏர்ஹோஸ்டஸைப் பார்த்தேன். ‘இது திருவநந்தபுரம், கொச்சின் ஏரியாவில் சகஜம். ஏர் பாக்கட் என்று இதைச் சொல்வோம். காற்று மண்டலம் ஒரே அளவு காற்றுடன் இராது. சில இடங்களில் காற்று மண்டலத்தில் வெற்றிடம் (VACUUM PLACE) இருக்கும். அந்த வெற்றிடத்தில் விமானம் கீழே விழும். ஆனாலும் இன்னும் 15 ஆயிரம் அடி கீழேதான் பூமி உள்ளது. அதனால் பயப்படவேண்டியதில்லை!’ என்று சொன்னார்.

புயல் நடுவே

கொச்சியைத் தாண்டுவதற்குள் சுமார் 10 ஏர் பாக்கட் இருந்திருக்கும். விழுந்து விழுந்து பயணிகளுக்கு வாந்தி வரவைத்து பயணம் தொடர்ந்தது. பிற்பகல் இரண்டரை மணிக்கு பீளமேடு விமான நிலையத்தில் இறங்கி ஊருக்கு ஓடினேன்.

அத்தை எழுந்து உட்கார்ந்து, வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்தார். ‘சாமி! நேத்துப் பேச்சு மூச்சு இல்லாம, வயிற்றுப் போக்கு வேற இருந்ததா? உனக்குத் தகவல் கொடுத்து வீணாக அலைய வச்சிட்டாங்க!’ என்றார்.

ஊர்ப்பெண்களுக்கு ஏகப்பட்ட கோபம். விளக்கெண்னைய தலையில வச்சு அரக்கி விட்டு, ஜன்னி வரவழைச்சு கொன்னுடலாமா? தலையணையை மூஞ்சி மேல வச்சு லேசா அமுக்கினா உயிர் போயிடும். இதுக்கு மேல பூமியில இருந்து என்ன சாதிக்கப் போறா கிழவி? இன்னொரு தடவை நீ எங்க இருப்பியோ, எப்படி கஷ்டப்படுவியோ கண்ணு. பேசாம கதைய முடிச்சிரலாமா?’ என்று கேட்டார்கள். கடுமையாக அவர்களை திட்டி விட்டு இரண்டு நாள் காத்திருந்தேன். அவர் சாகட்டும் என்று காத்திருப்பது போன்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.

ஒரு வழியாக நான் புறப்படுகிறேன். சேலத்தில்தான் எனக்குப் படப்பிடிப்பு. தகவல் சொன்னால் 6 மணி நேரத்தில் வந்து விடுவேன் என்று கூறி புறப்பட்டேன்.

மரணம் என்பது எப்போது வரும் என்பதை எந்த மருத்துவமும், ஜோதிடமும் உறுதியாக சொல்ல முடியாது. எந்த நிமிடமும் இறந்து விடுவான் என்று டாக்டர்கள் முடிவு செய்த நோயாளியிடம், ‘ஐயா, உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று டாக்டர் கேட்டார். ‘சிக்கன் பிரியாணி வேண்டும்!’ என்றார். எப்படியும் சாகப்போகிறவர். பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாக உயிரை விடட்டும் என்று பிரியாணி ஏற்பாடு செய்தார்கள். ரசித்துச் சாப்பிட்டு விட்டு அந்த பெரியவர் 2 நாள் உயிரோடு இருந்தார்.

ஃபோக்கர் விமானம்

சிவாஜி கடைசி காலத்தில் வாழைப்பழம் சாப்பிட ஆசைப்பட்டார். உங்க உடம்புக்கு அதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் மறுக்க, அந்த ஏக்கத்துடனே அவர் கண்ணை மூடினார். இந்த மாதிரி தருணங்களில் டாக்டர்கள் மனிதாபிமானத்துடன்- உறவினர் அனுமதியுடன் மருத்துவச் சட்டத்தை மீறி -நோயாளியின் விருப்பத்தை நிறைவேற்றலாம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

ஜூலை 26-ந்தேதி கவலைக்கிடம் என்று சொன்ன அத்தை 38 நாட்கள் உயிரோடு இருந்து செப்டம்பர் 2-ந்தேதி உண்மையிலேயே விடைபெற்றுக் கொண்டார்.

‘அன்று முதல் இன்று வரை’ மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பில் இருந்த நான் இரண்டு நாள் அனுமதி பெற்று கிராமம் சென்று அத்தைக்கு முறைப்படி பொறந்த வீட்டுக் கோடித்துணி போர்த்தி, இறுதி மரியாதை செய்து திரும்பினேன்.

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x