Published : 07 Dec 2015 07:41 PM
Last Updated : 07 Dec 2015 07:41 PM

தமிழகத்தில் பல்லாயிரம் நான் கடவுள் மகேந்திரன்கள்!

வெள்ளம் சூழத் தொடங்கியதும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தேன். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து கடுமையான மழையில் எனது வீட்டில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக பயணிக்கத் தொடங்கினேன்.

ஒரு தெருவை கடந்துதான் என் வீடு இருக்கும் தெருவை அடைய முடியும். அந்தத் தெருவில் இடுப்பளவு மேல் தண்ணீர். அங்கே ஒருவர் ப்ளூ கலரில் இருக்கும் தண்ணீர் ட்ரம்மை தண்ணீரில் நீந்தியபடி தள்ளிக் கொண்டிருந்தார். நானும் அவருக்கு உதவலாமே என்று தள்ளினேன். ட்ரம்மை தள்ள முடியவில்லை, மிகவும் கடினமாக இருந்தது.

ட்ரம்முக்குள் என்ன இருக்கிறது என்று கேட்பதற்கு கூச்சமாக இருந்தது. சிறிது தூரம் தள்ளிவிட்டு, "உள்ளே என்ன சார் இருக்கு?" என்றேன். "பிஸ்கட்ஸ், மில்க் பாக்கெட்ஸ், பிரெட்ஸ், சில மளிகை பொருட்கள்" என்று ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் பேசுகிறார், நமது தெருவில் இப்படி ஒருவரா என்று அடுத்ததாக "நான் உங்களை இந்த ஏரியாவில் பார்த்ததில்லையே.. எங்கு இருக்கிறீர்கள்?" என்றேன்.

"நான் இந்த ஏரியாவே இல்ல ஜி.. நான் தாம்பரத்துல இருக்கேன்" என்றார். "இங்கே சொந்தக்காரங்க இருக்காங்களா" என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். "நோ ஜி... இந்த ஏரியாதான் ரொம்ப பாதிப்பு, தேர் இஸ் நோ ஃபுட்ஸ், மில்க்ஸ் என்று டி.வியில் பார்த்தேன். அதான் தாம்பரத்தில இருந்து வந்தேன்" என்றார்.

நாமும் இதே தெருவில்தான் இருக்கிறோம்; பாதிப்பில் இருந்து மீளாததால்தான் என்னவோ நமக்கு இந்த எண்ணம் இன்னும் வரவில்லையே என்று எனக்கு நானே வெற்று ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அடுத்த நொடியே "உங்கள் பெயர் என்ன?" என்றேன். "மகேந்திரன் ஜி.. ஐ.டி.ல ஒர்க் பண்றேன்" என்றார்.

"தாம்பரத்துல இருந்து எப்படி வர்றீங்க. பல்லாவரம் தாண்டி பஸ், டூவிலர் எல்லாம் வந்திருக்காதே.. எப்படி வந்தீங்க" என்று அடுத்த கேள்வியை ட்ரம்மை தள்ளிக்கொண்டே கேட்டேன். "என் பைக் குரோம்பேட்டை பெட்ரோல் பங்க்ல இருக்கு. பல்லாவரத்துல இருந்து லிஃப்ட் கேட்டு இங்க வந்தேன். அப்புறம் இப்ப வாக் பண்ணிட்டு வர்றேன்" என்றார்.

அவர் சொன்ன அடுத்த நிமிடம், நாம் கடவுள்களில் ஒருவரை கண்டுவிட்டோம் என்ற உத்வேகத்தில் ட்ரம்மை முழூவீச்சில் தள்ளினேன். நாங்கள் தள்ளிக்கொண்டே போகும்போது, இடது பக்கமாக ஒரு தெரு திரும்பியது. அப்போது, "ஜி... ஐயம் கோயிங் டு திஸ் ஸ்ட்ரீட் ஃபார் ஹெல்ப்" என்று தனியாக ட்ரம்மை தள்ளிக்கொண்டு திரும்பினார்.

நான் நின்றுக் கொண்டே அந்தக் கடவுள் ட்ரம்மை தள்ளிக்கொண்டே போவதைப் பார்த்து கொண்டிருந்தேன். அதுவரை நம்ம வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் போச்சே என்று சோகமாக இருந்தவன், கடவுளைச் சந்தித்த அடுத்த நொடி "என்ன பொருள் போனால் என்ன, சம்பாதித்து வாங்கிவிடலாம்... நம்மால் முடிந்தததைச் செய்வோம்" என்ற உற்சாகத்துடன், வெள்ளத்தால் மூழ்கியிருந்த எனது வீடு உள்ள தெருவை நோக்கி நீந்தினேன்!

'நான் கடவுள்' என்று சொல்லாமல் எனக்கு தரிசனம் தந்த மகேந்திரனைப் போன்ற பல்லாயிக்கணக்கானோரை இப்போது தமிழகத்தில் காணலாம். நீங்களும் கூட மகேந்திரனாக செயல்பட்டிருக்கலாம் அல்லது மகேந்திரன்களை தரிசித்திருக்கலாம்.

மகேந்திரன்களால் நிச்சயம் குறையும் பெருமழை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x