Published : 31 Dec 2015 09:46 AM
Last Updated : 31 Dec 2015 09:46 AM
புத்தாண்டு பிறப்பதற்கு சில நாட்களே இருந்தன. வீட்டில் உற்சாகம் களை கட்டியிருந்தது.
“அப்பா, எனக்கு புது வருஷத்துக்கு புது செல்போன் வேணும்” என்று கேட்டாள் கல்லூரி போகும் அமிர்தா.
“எனக்கு புது பைக்” என்றான் அலுவலகம் செல்லும் நரேஷ்.
“அவ்வளவுதானே.. எல்லோரும் அவங்கவங்க விருப்பப்பட்டதை வாங்கிக் கலாம்” என்ற அப்பா மூர்த்தி, “அது சரி, புது வருஷத்துக்கு ஏதாவது தீர்மானம் போடணுமே, போட்டாச்சா?” என்றார்.
“அப்பா இந்த வருஷம் நான் சொந்தமா பிசினஸ் பண்ணப்போறேன். அமிர்தா அரியர்ஸ் எல்லாம் கிளியர் பண்ணிடுவா” என்றான் நரேஷ்.
“உங்க தீர்மானம் என்னப்பா?” என்றாள் அமிர்தா.
“அப்பா புது கார் வாங்கப் போறார்” என்றான் நரேஷ்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் இந்த வருஷம் எல்லோருக்கும் உதவி செய்யப் போறேன்” என்றார் மூர்த்தி.
இவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் மூர்த்தியின் மனைவி விஜயா.
“என்ன விஜயா, நீ ஒண்ணும் பேச மாட்டேங்கிறே? உன் தீர்மானம் என்ன?” என்றார் மூர்த்தி.
“தீர்மானம் எல்லாம் எதுக்குங்க?”
“இதென்ன கேள்வி. தீர்மானிச்சதைதான் நாம வருஷம் முழுக்க கடைபிடிக்கணும்னு ஒரு கட்டாயம்.”
“இதுவரைக்கும் போட்ட தீர்மானத்த நீங்க யாராவது கடைபிடிச்சிருக்கீங்களா?” என்றாள் விஜயா.
எல்லோரும் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தனர்.
விஜயா தொடர்ந்தாள்.. “புது வருஷம்கிறது கொண்டாட்டத்துக்கு மட்டும் இல்லீங்க. மனசுக் கும்தான். போன வருஷம் செஞ்ச தப்பை, திருப்பி யாரும் செஞ்சுடக் கூடாதுன்னுதான் தீர்மானம் போடுறோம். இல்லையா?”
“ஆமா. அதுக்கென்ன இப்போ?” என்றார் மூர்த்தி.
“ஒரு வருஷத்துக்கு முன்ன, எல்லோரையும் அனுசரிச்சு போவேன்னு சொன்னீங்க.. ஆனா ஏதோ ஒரு மனஸ்தாபத்துல வயசான உங்க அம்மாவ முதியோர் இல்லத்துல சேர்த்துட்டீங்க. ஞாபகம் இருக்கா.. அவங்களை அங்க தனியா விட்டுட்டு, இங்க அடுத்த தீர்மானம் எதுக்குங்க?”
யோசித்த மூர்த்தி, “நீ சொல்றதுலேயும் நியாயம் இருக்கும்மா. தீர்மானம்கிறது பேச்சோடதான் போயிடுது. இந்த வருஷம் எல்லோருக்கும் உதவி செய்வேன்னு சொன்ன வார்த்தை, அம்மாவை வீட்டுக்கு கூட்டி வந்துடறதுல இருந்து ஆரம்பமாகட்டும்” என்றார்.
அங்கே புத்தாண்டுக்கான ஒளி தெரிய ஆரம்பித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT