Last Updated : 18 Dec, 2015 01:21 PM

 

Published : 18 Dec 2015 01:21 PM
Last Updated : 18 Dec 2015 01:21 PM

மழை முகங்கள்: நிவாரண உதவிகளை கடமையாகச் செய்யும் டாக்டர் முகில் கண்ணப்பன்

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

ஒருநாள் தன்னார்வலர்களுக்கு உடல்நலப் பரிசோதனை செய்யும் பணி. இன்னொருநாள் முகாமுக்கு வந்திருக்கும் மருந்துகளை ஆய்வு செய்யும் பணியில் மூழ்கியிருந்தார் எம்பிபிஎஸ் ஸ்டான்லி மெடிக்கல் கல்லூரியில் 2014ல் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் முகில் கண்ணப்பன். நல்ல டாக்டர்களுக்கே உண்டான தன்னடக்கம், புன்முறுவல் இவரின் பண்பாகவும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

அப்பா அம்மா நாமக்கல்லில் இருக்கிறார்கள். இங்கே படிப்பதற்காக அடையாறு மாமா வீட்டில் தங்கியிருக்கிறார் முகில். அப்பாவுக்கு நாமக்கல் ஜிஎச்-சில் ரீஜனல் மெடிக்கல் ஆபீசராக (ஆர்த்தோ) பணி.

''மூணாவது லெவல் எக்ஸாம் எழுத யுஎஸ்சில் 5 மாதம் தங்கி எழுதிட்டு திரும்பிட்டேன். 'எம்எல்ஈ ஸ்டெப் சிஎஸ்' தேர்வை முடித்துக்கொண்டு நவம்பர் 28க்கு சென்னை வந்துசேர்ந்தேன். அப்போது வானிலை சரியாத்தான் இருந்தது. டிசம்பர் 1க்கு பிறகுதான் கனமழை.

முதல் மழை பத்தி யுஎஸ்ல இருக்கும்போதே தெரியும். இங்க வந்தபிறகு வானிலை செய்திகளையும் அறிந்தேன். இங்க வந்த பிறகு அம்மா 100 குடும்பங்களுக்கு தேவையான பாய், துணி எல்லாம் தமிழக தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தங்கமணிகிட்ட கொடுத்ததைப் பத்தி போன்ல சொன்னாங்க. அம்மா செஞ்சது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.

நல்ல மழை பெய்ஞ்ச அன்னிக்கு நானும் மாமா பொண்ணும் உதவி செயயலாம்னு கிளம்பினோம். ஐடிசி கிராண்ட் சோழா கிட்ட தண்ணில நண்பரோட கார் நின்னுடிச்சி. பின்னர் மத்த வண்டியெல்லாம் தள்ளிவிட்டு உதவினோம். மந்தைவெளில ஆர்எஸ்எஸ் குரூப் ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஒரு மேரேஜ் ஹால்ல எல்லாருக்கும் ஃபுட் பிரிப்பரேஷன் நடந்துகிட்டிருந்தது. அதுல நானும் கலந்துகிட்டேன்.

கிரீன்வேஸ் சாலை ரயில்வே ஸ்டேஷன்லேயே ஆயிரம்பேரை தங்க வச்சிருந்தாங்க. லேசா மழைநின்னதும் சத்யா நகர் மக்கள் அவங்களோட வீடெல்லாம் வீடு எப்படியிருக்குன்னு பாக்க புறப்பட்டபோது நாங்க அவங்க வீட்டுக்குப் போய் கொடுக்க போனோம்.

மந்தவெளி ரெயில்வே ஸ்டேஷன் வாசல்ல அப்போ ஒரு கணவன் மனைவி ரொம்ப சோகமா வந்து எங்களை கையெடுத்து கும்பிட்டு உதவிகேட்டது எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி. அவங்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்தோம்.

தனலட்சுமி அவென்யூவுக்கு பக்கத்துல இருந்த பள்ளிக்கூடத்துல தங்கியிருந்த மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் கொடுக்கப் போனோம். அங்கிருந்தவங்க, எங்களுக்கு சாப்பாடு நிறைய கிடைக்குது, டிரெஸ், நாப்கின் கொடுங்கன்னு கேட்டாங்க. இந்த வெள்ளம் எவ்வளவு பிரச்சனைகளைக்கொண்டுவந்திருக்கு பாத்தீங்களா?

பாதிக்கப்பட்டவங்களுக்கு துணிகளை கலெக்ட் பண்ணிக் கொடுக்க முயற்சிகள் செய்தோம். நாங்க இருக்கற தனலட்சுமி அவென்யூ மட்டும் போய் வீடுவீடா போய் கேட்டோம். ஒரு ஃப்ளோர்ல தாத்தா பாட்டி இருந்தாங்க. அந்த வீட்ல இருந்த குழந்தை மென்டலி டிஸ்ஏபில்டு குழந்தை.

துணிகளை அழகா மடிச்சி அந்தக் குழந்தை கையாலேயே கொடுக்கச் சொல்லி கொடுத்தாங்க. தங்களுக்கு இல்ல அந்தக் குழந்தைக்கு புண்ணியம் சேரணும் நினைக்கறாங்க பாருங்க. அல்லது இப்படியும் எடுத்துக்கலாம், அந்தக் குழந்தைக்கு இந்தமாதிரி ஈடுபாடுகள் இப்பவே வரணும்னு அவங்க செஞ்சவிதம் தாத்தா பாட்டிமேல பலமடங்கு மரியாதை கூடிடுச்சி எங்களுக்கு.

ஆனா தனியா செய்யணும்னு நெனைச்சா ஓரளவுக்குத்தான் செய்யமுடியும். பெரிய லெவல்ல எகனாமிக் சப்போர்ட் இருந்தாதான் பெரிய அளவுக்கு உதவிகள் ரீச் ஆகும். என்னோட மாமா பொண்ணு (கயல்) கால்வினோட காலேஜ் பேட்ச்மேட். அவர்கள் அழைப்பின் பேரில் இங்கே வந்தேன்.

இங்க எனக்கு 7வது நாள். உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப ஆர்கனைஸ்டா நடக்குது. சின்னசின்னப் பசங்க எல்லாம் அவ்வளவு அருமையா செய்யறாங்க. இங்கே யாரும் ஒரு பொருளையும் வீண் பண்றதில்லை. இங்க வந்து உதவிகள் செய்யறதை யாரும் பெருமையா நினைக்கலை. தங்களோட கடமையா நெனைக்கறாங்க. யங்ஸ்டர் மட்டுமில்ல பெரியவங்க பலரும் வந்து தங்களோட வயதுக்கு மீறின வேகத்தோடு உழைக்கறதைப் பாக்கறேன்'' என்று புன்முறுவலோடு கூறியவர் மீண்டும் தன் பணியிடத்திற்கு சென்று மருந்துப் பெட்டிகளைப் பிரிக்க ஆரம்பித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x