Published : 12 Dec 2015 06:33 PM
Last Updated : 12 Dec 2015 06:33 PM
கிடங்கில் பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டும் பணியாற்றும் தன்னார்வலர்களிடம் எடுத்துக் கொடுத்தவண்ணமும் இருந்தார் ருக்மணி. அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவி. அப்பா டீச்சர் அப்பா அக்கவுண்டென்ட். வீடு சூளைமேடு.
''செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் தள்ளிப் போயிடுச்சி. வீட்ல சும்மா இருக்கமுடியாது. சரி நம்மால முடிஞ்ச உதவி செய்யலாம்னு வந்தோம். நாங்க இருக்கற பகுதிகள்ல பாதிப்பு இருந்தது. ஆனா எங்க வீட்ல அந்த அளவுக்கு பாதிக்கப்படலை. என் ஃப்ரன்ட் ரோஹினி வந்திருக்கா. அப்புறம் என்தம்பி ஸ்ரீராம் அவனோட பிரண்ட் ஜனனி எல்லாம் வந்திருக்கோம் நான் கால்வின் டீம்ல இருக்கேன் சார்'' என ஒரு பக்கம் வேலை பார்த்தவாறே படபடத்தார்.
''இங்க என்னோட வேலைன்னு பாத்தீங்கன்னா, ரீக்கோ கம்பெனி 920 பைகள் கொடுத்திருக்கு. அதில் ஒவ்வொன்றிலும் ரஸ்க், வாட்டர் பாட்டில், சாப்ட் நாப்கின்ஸ், கோல்கேட் பேஸ்ட், பிரஷ், ஹட்சன் பால் பவுடர், பெர்க் சாக்லேட், சக்கரை, ப்ரூ இன்ஸ்டண்ட் காபி, ஓடோமாஸ் என 11 பொருட்கள் அடங்கிய 920 பைகளை ரீக்கோ கொடுத்துள்ளது.
இப்போதைக்கு அதை எடுத்து வைக்கிற வேலைதான். அப்புறம் மளிகை சாமான்கள், பிஸ்கட், ரஸ்க்னு நிறைய பாக்கெட்கள் இருக்கு....
நாங்க மொதல்ல மஸ்கிட்டோ காயில், நாப்கின், சீப்பு ஆகியனவற்றை திருவல்லிக்கேணி பகுதியில் கொடுத்துகிட்டிருந்தோம். அப்புறம்தான் எங்க ஃபிரண்ட் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழத்துல படிக்கும் கால்வின் மெஸேஜ் அனுப்புனாரு வரச்சொல்லி. இங்க வந்தப்புறம் பெரிய அளவுல மக்களுக்கு உதவிகள் நடக்கறதைப் பாத்து இன்னும் ஆர்வம் கூடிடிச்சி. என்றார். அப்போது அங்கு கால்வின் வரவே அவரை அறிமுகப்படுத்தினார்.
''அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு (5வது ஆண்டு) படிச்சிகிட்டிருக்கேன் சார். கால்வின் 24 நாட்களுக்குமுன் உருவான டீம் எங்களுடையது. முதல்மழையின்போது பஸ்ஸ்டாண்ட்ல இருக்கறவங்களுக்கு பெட்ஷீட் கொடுக்கலாம்னுதான் மொதல்ல 23, ஆயிரம் பணம் கலெக்ட் செய்தோம். இது நடக்கும்போதே ரெண்டு மூனு நாள்ல மிகப்பெரிய வெள்ளம் சென்னையைத் தாக்க ஆரம்பிச்சது. அதுக்கப்புறம்தான் மதுரவாயல் பகுதிக்குப் போய் அங்க உணவு கொடுக்க ஆரம்பிச்சோம்.
அம்பேத்கார் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்லூரி மாணவ மாணவிகளை ஒருங்கிணைச்சோம். அவங்களோட அப்பாஅம்மா, மாணவர்கள் என பலரும் முன்வந்து ரெண்டரை லட்ச ரூபாய் கொடுத்தாங்க. அதைக்கொண்டு மதுரவாயிலில் ரெண்டு கேம்ப், ஓஎம்ஆர் பெருங்குடியில நிவாரணம்னு எங்களோட பணி விரிவடைஞ்சது. நாங்க மூனு தன்னார்வலர்கள் எனத் தொடங்கி பாரிமுனை சட்டக்கல்லூரி, சட்டப் பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம், எஸ்விசி கல்லூரின்னு இன்னிக்கு 123 தன்னார்வலர்கள் அளவுக்கு சேர்ந்து இப்போ உதவிப்பணிகள் செய்யறாங்க..
சட்டப் பல்கலைக்கழகம் மூலமாக 1 வேனும் 2 காரும் அனுப்பியிருக்காங்க. சேப்பாக்கம் முகாம்ல எங்களோட கால்வின் டீம் ஆட்களை சின்னச் சின்னக் குழுவா பிரிச்சி பல வேலைகளை செஞ்சிகிட்டிருக்கோம். சென்னையில பல இடங்கள்ல பீல்டு போறது. சேப்பாக்கத்தில இருந்து எங்களோட ஒரு குழு நிவாரணப் பொருளோட கடலூர் போயிருக்கு.
சட்டக்கல்லூரியில படிக்கும் ஒரு ஸ்டூடண்ட்டோட பேரன்ட்ஸ் ஸ்ரீமதி மேடம்னு அவங்களுக்கு பாரதி சார் மெஸேஜ் அனுப்பியிருந்தார். அந்த மெஸேஜை நாங்க எல்லாரும் பகிர்ந்துகிட்டோம். நல்லவங்களுக்கு எல்லாருக்கும் உதவி செய்ய ஒரு நல்ல பிளாட்ஃபார்ம் தேவைப்படுது. அத 'தி இந்து' செஞ்சிருக்கு. காசு இருக்கு, இல்ல; அது மேட்டரில்ல. நம்மால என்ன முடியுமோ அதை செய்யலாம்.
உடல் உழைப்புதான் தரமுடியும்னாலும் அதுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கு இங்க. இங்க எல்லாமே சிஸ்டமேடிக்காக செய்யறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு'' எனக் கூறும் உதவிக் கரங்களுடன் சேர்ந்து இணைந்த கைகளாக வந்திருக்கும் கால்வின் சொற்களில் இன்னும் நிறைய சாதிக்கும் உற்சாகம் தெரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT