Published : 11 May 2021 01:39 PM
Last Updated : 11 May 2021 01:39 PM
அடக்குமுறையால் என் குரலை ஒடுக்க முடியாது
என்னை நீ குறைத்து மதிப்பிடாதே
கடும் புயல், இடி, மின்னலிலும்
என் குரல் ஒலிக்கும்…
இப்படிப்பட்ட நம்பிக்கை மொழிகளோடு ‘அலாதீன்’ திரைப்படத்தில் நவோமி ஸ்காட் பாடியிருக்கும் `ஸ்பீச்லெஸ்’ பாடலை, கண்ணுக்குத் தெரியாத கோவிட் நுண் கிருமியின் கரோனா பெருந்தொற்றுப் பேரிடரில் இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் நம்பிக்கை வெளிச்சம் சுடர்விடும் வகையில் பாடி, அதைத் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் எட்டாம் வகுப்புப் படிக்கும் சிறுமி ரிஷிகா.
ரிஷிகா கர்நாடக இசை கற்றுக் கொள்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம்.கன்சர்வேட்டிவில் பியானோ வாசிப்பதற்கும் கற்றுக் கொள்கிறார். G3 இசைப் பள்ளியில் மேற்கத்திய பாணியில் பாடுவதற்கான பயிற்சியையும் எடுத்துவருகிறார். விரைவிலேயே லண்டன் ரிடினிடி இசைத் தேர்வை எழுதுவதற்குத் தயாராகி வருகிறார்.
“ ‘அலாதீன்’ திரைப்படமும் அதில் வரும் ஜாஸ்மின் கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஜாஸ்மின் பாடுவதாக இந்தப் பாடல் வரும். இந்தப் பாடலைப் பாடியிருக்கும் நவோமி ஸ்காட் எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர். நேர்மறைச் சிந்தனைகளை வளர்க்கும் கருத்துகள் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும்.
பாடலின் வரிகளைப் பாடும்போதே நமக்குள் நம்பிக்கையும் உறுதியும் புத்துணர்ச்சியும் பிறக்கும். சுதந்திரமான காற்றை சுவாசிக்க வைக்கும். பாடலில் வெளிப்படும் இந்த உணர்வுகள்தான் இந்தப் பாடலைப் பாடவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது” என்கிறார் ரிஷிகா.
நவோமி ஸ்காட்டின் பாணியில் பாடாமல் தன்னுடைய பாணியில் பாடியிருப்பதும், உச்ச ஸ்தாயியில் பாடும்போது நம்மை மாய உலகில் சஞ்சரிக்க வைக்கும் குழந்தைத்தனம் விலகாத குரலும், உச்சரிப்பு நேர்த்தியும் இந்தப் பாடலில் வெளிப்படும் ரிஷிகாவின் சிறப்புகள்.
பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=-uIIBmWlY9k
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT