Published : 12 Dec 2015 06:30 PM
Last Updated : 12 Dec 2015 06:30 PM
சொந்தமாக ஃபேப்ரிகேஷன் தொழில் செய்துவரும் தியாகராஜன் வெள்ளத்துக்கு நடுவே இருந்தும் எப்படியோ தப்பித்துவிட்டார். வெள்ளம் சூழ்ந்த விருகம்பாக்கத்தில் வீடு அவருக்கு. அவர் இருப்பது உயர்த்திக்கட்டப்பட்ட வீட்டில். ஆனால், துண்டிக்கப்பட்ட மின்சாரம், துண்டிக்கப்பட்ட மொபைல் சர்வீஸ், வெளிஉலகிலிருந்து துண்டிக்கப்பட்ட வாழ்க்கை என்ற பொதுவான எந்தப் பாதிப்புகளிலிருந்து அவர் தப்பவில்லை.
சேப்பாக்கம் முகாமுக்கு நிவாரணப் பொருட்களைத் தர வந்தவர். நிவாரணப் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.
''சொந்த ஊரு சேலம். அப்பா விவசாயம். சிஸ்டர் சேலம் ஜிஎச்ல டாக்டர். நான் மூனு வருஷமா சென்னையில பிஸினஸ் பண்ணிகிட்டிருக்கேன். மாசத்துல ரெண்டு முறை ஊருக்குப் போய்வருவேன். ஏற்கெனவே அண்ணா நகர் வாசகர் திருவிழாவுல கலந்துக்கும்போது கடலூரில் நிவாரண உதவிகள் செய்யறதைப் பத்தி சொல்லிகிட்டிருந்தாங்க.
அப்பவே நாமும் ஏதாவது செய்யணும்னு தோணிச்சி. அப்புறம் மழையன்னைக்கு யாரையும் காண்டக்ட் பண்ண முடியல. ஒருநாள் பேப்பரே கிடைக்கல. ஊடகங்கள் பாக்கமுடியாத அளவுக்கு உலகத் தொடர்புகள் ஏதுமில்லை. அப்புறம்தான் தெரிஞ்சிகிட்டு இங்கே வந்தேன்.
போர்வைகள், குழந்தைகள் துணிகள், பாத்திங் சோப்கள், வாஷிங் சோப்கள், பிஸ்கட் பாக்கெட்கள்னு ஒரு பெரிய காட்டன் பாக்ஸ்ல எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மௌண்ட் ரோடு கஸ்தூரி ரங்கன் கட்டடத்துக்கு வந்து கொடுத்தேன். முகாம் சேப்பாக்கத்துல இருக்கறதை தெரிஞ்சிகிட்டு உடனே இங்க வந்து இணைஞ்சி வேலை செய்ய ஆரம்பிச்சேன்.
நான் அடிப்படையில விவசாயப் பின்னணி கொண்டவன்ங்கறதால மக்களோட கஷ்டம்னா என்னன்னு நல்லா தெரியும் அதேநேரத்துல தமிழ் இந்து வாசகர் அப்படிங்கற ஸ்பிரிட் என்னை இங்க கொண்டுவந்து சேத்தது.''
மக்களுக்கு உதவவேண்டும் என்ற அக்கறைக்கான நம்பிக்கை இடமாக இந்த முகாம் திகழ்வதைப் பற்றி மேலும் சிறிது நேரம் சிலாகித்துப் பேசிய தியாகராஜன் முகத்தில் சில நாட்களாக முடங்கிக் கிடக்கும் தன் சொந்தத் தொழிலைப் பற்றிய கவலைகள் துளியும் இருப்பதாகத் தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT