Published : 29 Apr 2021 11:40 AM
Last Updated : 29 Apr 2021 11:40 AM
திருநங்கை ஸ்வேதாவின் ‘சாதிக்கப் பிறந்தவர்கள்’ சமூக அமைப்பு எட்டாவது ஆண்டாக, ’பார்ன் டு வின்’ விருதுகளைப் பல துறைகளில் சாதித்த மாற்றுப் பாலினத்தவருக்கும், மாற்றுப் பாலினத்தவருக்குப் பல வகையிலும் உதவியாக இருக்கும் பொதுச் சமூகத்தினருக்கும் தேசிய திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 அன்று வழங்கியது. இந்த விருதைக் கேரளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்தும்கூட திருநங்கைகள் சிலர் பெற்றது சிறப்பு.
“திருநங்கை சமூகத்துக்கும் பொதுச் சமூகத்துக்கும் பல்வேறு நலப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் திருநங்கையர், ஆட்டோ ஓட்டும் திருநங்கை, செவிலியர் பணியிலிருக்கும் திருநங்கை, சிறந்த தொழில்முனைவோர், சிறந்த மாணவர், ஆன்மிகப் பணியில் சிறந்த பணிகளைச் செய்பவர், திருநர் தம்பதிகள், சிறந்த திருநம்பி வாகன ஓட்டுநர், சிறந்த திருநம்பி உடற்பயிற்சியாளர் எனப் பல்துறைகளில் தங்களின் ஆளுமையை நிரூபித்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கையையும் சமூகத்தில் அவர்களின் மீதான நம்பிக்கையையும் ஒரே சமயத்தில் உயர்த்துகிறோம். இந்த ஆண்டு மதுரையிலிருக்கும் பாரதி கண்ணம்மாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியிருக்கிறோம்” என்கிறார் ’பார்ன் டு வின்’ அமைப்பின் நிறுவனரான ஸ்வேதா.
முன்னுதாரண காலண்டர்
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் திருநங்கைகளை முன்னுதாரணமாகப் பொதுவெளியில் அடையாளப்படுத்த 2013-ல் தொடங்கப்பட்ட ‘பார்ன் டு வின்’ அறக்கட்டளை மூலம் 2014இல் முதல் முறையாக நாள்காட்டி வெளியிடப்பட்டது. “நாள்காட்டியின் வழியாக முன்னோடி திருநங்கைகளை வெளிக்கொணர்ந்ததில் நாம் முன்னோடிகள்” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஸ்வேதா.
குடும்பச் சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறும் இளம் திருநங்கைகள், திருநம்பிகளின் கல்விக் கனவை நனவாக்க இந்த அமைப்பு உதவுகிறது. அத்துடன் தையல், சோப்புத் தயாரிப்பு, அடுமனை போன்ற தொழில்களைக் கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது. இவர்களுக்கென்றே தையல் பிரிவு, அடுமனைப் பிரிவு போன்றவையும் இயங்குகின்றன.
விரும்பும் படிப்பைப் படிப்பதற்கு உதவுவதோடு, படிப்புக்குப் பின் அவர்கள் சிறுதொழில் செய்வதற்கு விரும்பினால் அதற்கான கடன் உதவியையும் வங்கிகளின் மூலமாகப் பெற்றுத் தர உதவுகிறது இந்த அமைப்பு.
திருநம்பிகளுக்கும் உதவி
திருநம்பிகளையும் ஆதரித்து, ஆலோசனை வழங்கி, அவர்களுக்கான பணி வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகின்றனர். அவர்களின் கருத்துகளை மேடையில் சொல்ல வைப்பதன் மூலமாக அவர்களைப் பற்றிய சமூகத்தின் தவறான பார்வையையும் போக்கி வருகின்றனர். 2021 நாள்காட்டியில் இடம்பிடித்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநம்பி தாரன், தற்போது சென்னை மாநகராட்சியின் கோவிட் விழிப்புணர்வுத் திட்டப்பணி கண்காணிப்பாளராக இருக்கிறார். மற்றொரு திருநம்பி பிரதீஷ், ஃபோர்டு நிறுவனத்தில் சில காலம் பணி செய்துவிட்டுத் தற்போது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராக இருக்கிறார்.
“இசை, பக்தி, தொழில்முனைவோர், கல்வி, அழகுக் கலை இப்படி ஒவ்வொரு பிரிவிலும் சாதனை புரிந்த திருநங்கைகளைக் கொண்ட காலண்டர்களை வெளியிட்டு வருகிறோம். மூன்றாம் பாலினத்தவருக்கான கல்வி, பணிகளில் இட ஒதுக்கீட்டைத் தருவதற்கு அரசு சார்ந்த அமைப்புகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசு இட ஒதுக்கீடு கிடைப்பதில்தான் மாற்றுப் பாலினத்தவருக்கான எதிர்காலம் இருக்கிறது” என்கிறார் ஸ்வேதா.
கரோனா பெருந்தொற்றுப் பேரிடர் அனைவரையும் போலவே மாற்றுப் பாலினத்தவர் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால், வழக்கம்போல் அதிலிருந்தும் மீண்டு வருவதற்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று நிரூபிக்கும் வகையில் சாதிக்கப் பிறந்தவர்கள் கூட்டமைப்பின் இந்த விருது வழங்கும் விழா இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT