Published : 30 Dec 2015 01:12 PM
Last Updated : 30 Dec 2015 01:12 PM
எழுத்தாளர் தேவிபாரதி டிசம்பர் 20-ம் தேதி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சாலை விபத்தில் தலையில் பலத்த அடிப்பட்டு நினைவிழந்த நிலையில், ஈரோடு சம்பத்நகரில் நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள பரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலில் செய்த ஸ்கேனில் மூளையில் இரத்தக் கசிவு மற்றும் இரத்தக் கட்டு ஏற்பட்டிருந்தது தெரிந்தது. பின்னர் செய்த ஸ்கேனில் இரத்தக்கசிவு நின்றிருந்த நல்ல சேதி கிட்டியது. அதோடு முகத்தில், மண்டையோட்டில் குறிப்பாக வலது பக்கம் முழுவதும் ஏழெட்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. பின்னர் அதற்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தேறி வருகிறார்.
மருத்துவமனை செலவுகளை எதிர்கொள்ளச் சிரமப்படும் அவருக்கு உதவும் நோக்கில் >ஃபேஸ்புக்கில் பதிவு எழுதுவதற்காக, வங்கி விபரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள எழுத்தாளர் தேவிபாரதியின் மனைவியை நேற்று அழைத்தபோது இறுதியாக ஒரு சிறு தயக்கத்தோடு... "சார் நாளைக்கு அவர் பர்த் டே, முடிஞ்சா வந்துட்டுப் போங்க... நண்பர்களைப் பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவார்ங்க!" என்றார்.
கடந்த சில நாட்களாக ஒவ்வொருமுறை அழைக்கும்போதும், "உங்கள மாதிரி யாரும் வந்துட்டுப்போன ரொம்ப சந்தோசப்படுறாருங்க" எனச் சொல்வார்.
சந்திக்கும்போதெல்லாம் தேவிபாரதி தொடர்ந்து எதாவது பேசவிரும்புகிறார். கன்னம், தலையில் எலும்புகள் உடைந்திருப்பதால் மென்று சாப்பிடுவது கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அவரை பேச அனுமதிக்கக்கூடாது என்பதற்காகவும் முடிந்தவரை அவரிடம் விடைபெற்று வந்துவிடுவேன்.
இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் காலையில் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அநேகமாக இரண்டொரு நாட்களில் வீடு திரும்பலாம் என்றிருந்த நிலையில், எது சாப்பிட்டாலும் வாந்தியெடுப்பது புதுச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. அதனால் மீண்டும் சலைன் போடப்பட்டுள்ளது. வலது கன்னம் மற்றும் தலையின் பக்கவாட்டில் மிகக்கடுமையான வலியை உணர்வதாகச் சொல்கிறார்.
சீக்கிரம் நல்லாயிடுவீங்க என ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி முடிக்கும் முன்பே... "ரெண்டொரு நாள்ல நல்லாயிடுவேன்" என தன்னம்பிக்கையாகப் பேசுகிறார். ஆனாலும் வலியின் வேதனை அந்த தன்னம்பிக்கையும் கடந்து முகத்தில் தெரிகிறது.
ஈரோட்டில் 2010-ல் நடந்த ஓர் இலக்கிய கருத்தரங்கில்தான் அவரை முதலில் சந்தித்தேன். அந்த கருத்தரங்கில் அவரின் உரையைக் கேட்டு உடனடியாக எங்கள் அரிமா சங்க கூட்டத்துக்கு பேச அழைத்திருந்தோம். அன்றைய தினம் இரண்டு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தனிப்பட்ட முறையில் அவரோடு உரையாடியது மறக்க முடியாத ஒன்று. அதன்பின் அவருடைய புத்தக வெளியீட்டில், ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் என சந்தித்ததோடு சரி.
மற்றபடி காலச்சுவடு இதழில் இருந்த நாட்கள், புதுயுகம் தொலைக்காட்சியில் இருந்த நாட்கள், சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்து புது வாழ்க்கையை துவங்கிய தருணம் என ஃபேஸ்புக் பதிவு மற்றும் நண்பர்களிடம் உரையாடல் மூலம் என ஏதோ ஒருவிதத்தில் தொடர்பில் இருந்தார்.
எளிமையான, நிதானமான, உறுதியான மனிதராக மட்டுமே கண்டுவந்த தேவிபாரதி பத்து நாட்களைக் கடந்த நிலையில் வலியின் பிடியில் சிக்குண்டு படுக்கையில் கிடப்பதைப் பார்க்கக் கலங்குகிறது.
"நான் எப்பவுமே தைரியமா இருப்பேன்… எனக்குத் தெரியும் நான் செத்துப் போகமாட்டேன்னு. சீக்கிரம் சரியாகி வந்துடுவேன்" எனும் அந்த தன்னம்பிக்கையும் இப்போது பெரு மருந்தாக இருக்கின்றது. அவரோடு விபத்தில் சிக்கினாலும், மருத்துவமனைக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை தன் வலிகளை முற்றிலும் மறந்து தேவிபாரதியை ஒரு குழந்தைபோல் கவனித்து வரும் அவர் மனைவியின் திடமும் அவர் மீண்டு வருவதற்கு முக்கியக் காரணம் என்றே சொல்லலாம்.
உச்ச வலியிலும் தொடர்ந்து பேச விரும்புகிறார். படுக்கையில் கிடந்தவாறு தலையை இங்கும் அங்கும் உருட்டியபடியே… கடந்த காலங்களை மீட்டி மீட்டிப் பேசுகிறார்.
இருபது முப்பது ஆண்டுகளாக வாழ்க்கை அளித்த சவால்கள், அதைக் கடந்த விதம், சமீபத்தில் திருமணம் முடித்த சூழல் என விரிகிறது அவரது பேச்சு. "பேசாம இருங்க!" என அறிவு கொண்டு தடுக்க மனம் வரவில்லை.
1900-ன் முற்பாதியில் அவர் தாத்தாவும், பின்னர் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தது குறித்துப் பேசுகிறார். அவர்கள் சொல்லியவற்றைச் சொல்கிறார். அப்பாவின் டைரி குறித்துப் பேசுகிறார். எப்படியும் இன்னும் பத்து வருசம் இருக்கணும், எழுத்து ரொம்பப் பிடிக்கும்… ரொம்ப வருசமா எழுதாமல் விட்டுட்டேன் என்கிறார். தன் பிறந்த நாளில் தந்தை குறித்தும் தாத்தா குறித்தும் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறதென்கிறார்.
சமீபத்தில் எழுதியிருக்கும் ஒரு பெரிய சிறுகதை குறித்துப் பேசுகிறார். அதை எழுத்தாளர் சுகுமாரன் சுருக்கச் சொன்னதை நினைவு கூர்கிறார். இரண்டு நாவல்களை முடிக்கும் தருணத்தில் இருப்பதைச் சொல்கிறார். இரண்டின் களம் மற்றும் அதற்கான உழைப்பு குறித்துப் பேசுகிறார்.
சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடுவேன் என்கிறார். சமீபத்தில் புதிதாக வீடு கட்டியிருப்பதைச் சொல்லி, ஒரு நாள் நண்பர்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்து நிறைய பேச வேண்டும் என தேவிபாரதி ஆசைப்பட்டதாக அவர் மனைவி சொல்கிறார். "வீட்டுக்குப் போனதும் எல்லா நண்பர்களும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க சார்… நிறையப் பேசுவோம்… உங்க எல்லாரையும் பார்க்கணும்!" என்கிறார்
இடையிடையே கண்ணிலிருந்து பக்கவாட்டில் நீர் வடிகிறது. வலியினால, மீட்டப்படும் நினைவுகளினாலா, இன்னும் படுக்கையில் இருக்கிறோமே என்ற எண்ணத்தினால என தீர்மானிக்க முடியவில்லை.
தேவிபாரதியின் பிறந்த நாளிற்காக மருத்துவமனை அறையிலேயே சாக்லெட்டும் கேக்கும் வாங்கி வைத்திருக்கிறார் அவர் மனைவி. காலையில் கேக் வெட்டலாம் எனச் சொன்னவரிடம் மாலை நண்பர்களோடு வருகிறேன், அப்போது வெட்டலாம் எனச் சொல்லி வந்திருக்கிறேன். கவிஞர் மோகனரங்கன் உள்ளிட்ட சில நண்பர்கள் மாலை 5 மணிக்கு மருத்துவமனை செல்லலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
இதுவரையிலான நான்கைந்து சந்திப்புகளிலும் அவர் எழுத்து தவிர்த்து வேறெதுவும் குறிப்பிட்ட மாதிரி பேசியதாக நினைவில்லை. மருத்துவமனையின் முதல் சந்திப்பில் தனக்கு என்ன நடந்தது, எங்கே இருக்கிறோம், ஏன் இதெல்லாம் என்று எதுவுமே நினைப்பில் இல்லாதபோதும் நாங்கள் முதலில் சந்தித்தது குறித்தும், தன்னைக் கூட்டத்திற்கு அழைத்தது குறித்தும் மனைவியிடம் அறிமுகப்படுத்தினார். கவிஞர் மோகனரங்கனிடம் பேசும்போது சென்னையில் புத்தக் கண்காட்சி தள்ளிப்போயிருப்பது குறித்துப் பேசியிருக்கிறார். என்னுடன் பிறிதொரு சந்திப்பில் பெருமாள்முருகன் குறித்து விசாரித்துவிட்டு, சென்னை புத்தகக் கண்காட்சி குறித்துப் பேசிவிட்டு, சென்னை வெள்ளப் பாதிப்பு குறித்து பேசினார். சென்னையில் நிறைய நண்பர்கள் இருப்பது குறித்தும், அவர்கள் பாதிக்கப்பட்ட விதம் குறித்தும் பேசினார். மற்றொரு சந்திப்பில் 'தி இந்து'வில் தமிழச்சி தங்கபாண்டியன் தான் சமீபத்தில் வாசித்ததில் பிடித்ததாக என்னுரைய கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டி "உங்க தொகுப்பு கொடுங்க, எனக்கு வேண்டும்" எனக் கேட்கிறார்.
கடுமையான வலியை தனக்குள் விழுங்கியவாறே திடமான வார்த்தைகளில் "இன்னும் பத்து வருசம் எப்படியாச்சும் இருக்கணும் சார். இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கு!" என்கிறார்.
படைப்பு என்பது ஒரு படைப்பாளியின் பலமா, பலவீனமா எனும் ஒரு கேள்வி எனக்குள் எழுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை. என் பார்வையில் அது பலமாகவோ, பலவீனமாகவோ தெரிந்துவிட்டுப் போகட்டும். ஆனாலும் படைப்பு என்பது படைப்பாளிகளுக்கு உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்டதாகவே இருக்கின்றது. அவர்கள் இன்றி வேறு யாரால் இந்த உலகத்தின் எல்லாக் கூறுகளையும் ஏனையோருக்கு அறிமுகப்படுத்தவியலும்.
இந்தப் பிறந்த நாளில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு சொல்ல விரும்பும் வாழ்த்து… விரைந்து நலம் பெற்று கூடு திரும்புங்கள். ஒரு புது விடியலில் தெம்பாக சிறகு விரிக்கலாம். பறக்க வேண்டிய வானம் பெரிதென்பதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா என்ன!? எல்லாம் நல்லவிதமாய், நலமாய் அமையட்டும்!
ஈரோடு கதிர் - தொடர்புக்கு kathir7@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT