Published : 08 Dec 2015 10:28 AM
Last Updated : 08 Dec 2015 10:28 AM

பாலகிருஷ்ண சர்மா நவீன் 10

சிறந்த இந்தி கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் (Pandit Balakrishna Sharma Naveen) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத் தில் (1897) பிறந்தார். அங்கு சரி யான கல்வி வசதி இல்லாததால், ஷாஜாப்பூர், உஜ்ஜைன், கான்பூரில் பயின்றார். கவிதை, உரைநடை இரண் டிலும் அதிக ஆர்வமும் திறனும் கொண் டிருந்தார்.

l கணேஷ் சங்கர் வித்யார்த்தியின் ‘பிரதாப்’ பத்திரிகையில் பணிபுரிந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, பல ஆண்டுகாலம் அதன் ஆசிரியராக செயல்பட்டார். ‘சந்த்’ என்ற கதையுடன் இவரது இலக்கியப் பயணம் தொடங்கியது. அதன் பிறகு கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

l ‘பிரபா’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். கான்பூர் கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1920-ல் காந்திஜி அறைகூவல் விடுத்ததால், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

l சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. அதன் தாக்கம் இவரிடமும் எதிரொலித்தது. காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். பல சிறந்த கவிஞர்களோடு இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோருடனும் நல்ல நட்பு ஏற்பட்டது.

l இவர் சிறந்த பேச்சாளரும்கூட. எழுச்சிமிக்க உரைகளால் மக்களிடையே விடுதலை உணர்வையும் தேச பக்தியையும் தூண்டினார். உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார்.

l சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 6 முறை சிறை தண்டனை பெற்ற இவர், மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். ‘கும்கும்’, ‘ரஷ்மிரேகா’, ‘அபலக்’, ‘க்வாசி’, ‘ஊர்மிளா’, ‘வினோபா’, ‘ஸ்தவன்’, ‘ப்ராணார்ப்பண்’ உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகள் மற்றும் ஏராளமான கவிதைகள் இவர் சிறையில் இருந்தபோது எழுதியவை.

l சிறையில் இருந்தபோது 1921-ல் இவர் எழுதத் தொடங்கிய ‘ஊர்மிளா’ என்ற காவியம் 1934-ல் முடிவடைந்து, 1957-ல் தான் வெளிவந்தது. 6 தொகுதிகள் கொண்ட இது, பெரிதும் போற்றப்படும் இந்தி இலக்கியமாக இன்றளவும் திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்குவது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

l நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘ரஷ்மி ரேகா’, ‘அபலக்’ ஆகிய இவரது தலைசிறந்த படைப்புகள் 1952-ல் வெளிவந்தன. தொடர்ந்து பல காவியங்கள், கவிதைகளைப் படைத்தார். பத்திரிகையிலும் பல கட்டுரைகள் எழுதி வந்தார்.

l தாய்மொழியான ‘வ்ரஜபாஷா’வில் நவீன இலக்கியத்தை தன் படைப்புகளால் செழிப்படையச் செய்தார். இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். 1960-ல் பத்ம பூஷண் விருது பெற்றார்.

l இலக்கிய மணம் கமழும் இவரது படைப்புகள், தேசிய உணர்வைத் தூண்டும் வகையிலும் இருந்தன. தலைசிறந்த படைப்பாளியும், நாட்டின் சுதந்திரத்துக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து தொண்டாற்றியவருமான பாலகிருஷ்ண சர்மா நவீன் 63-வது வயதில் (1960) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x