Published : 14 Dec 2015 04:51 PM
Last Updated : 14 Dec 2015 04:51 PM
தி இந்து வெள்ள நிவாரண முகாம். பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஓர் ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்து ஒரு பெண் யாரிடமோ தொலைபேசிக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தால் அவர் பாடகி அனுராதா ஸ்ரீராம்.
"என் அப்பா 'தி இந்து'வில்தான் வேலை பார்த்தார். எங்களுக்கு சோறு போட்ட இடம் இது. நிவாரணப் பொருட்களுக்காக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தேன். இங்கே இவளோ பண்றாங்கன்னு தெரிஞ்சுருந்தா, முதல் நாளே வந்திருப்பேன். என் பகுதி மக்களுக்காக இங்கே வந்திருக்கேன்.
மழை வெள்ளத்தில் நாங்களும் மாட்டிக் கொண்டோம். ஆனால் எங்களுக்குப் பெரிதாக பாதிப்பில்லை. மழை நிவாரணப் பணிகளுக்காக, பல்வேறு ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு வேலை முடித்துக் களைத்துத் திரும்பினேன். எங்கள் வீட்டுக் காவலர், 'யார் யாருக்கோ உதவுறீங்களே, எனக்கு ஒரு கொசுவலை கொடுங்கம்மா!' என்றார். எனக்கு சுரீரென்றது. எங்கெங்கோ சென்று உதவுகிறோம். ஏன் நாம் இருக்கும் இடத்துக்கு உதவக்கூடாது என்று தோன்றியது.
சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் கோர்ட்டுக்குப் பின்னால்தான் எங்கள் குடியிருப்பு. சைதாப்பேட்டையில் இருந்த தண்ணீரின் அளவு உங்களுக்கே தெரியும். சுமார் 10 அடிக்கு, பாலமே தெரியாத அளவுக்கு தண்ணீர் இருந்தது. எங்கள் காலனி, ஆற்றை ஒட்டி கீழ்நோக்கிப் போகும் அமைப்பைக் கொண்டது. சத்யா நகர், பொன்னியம்மன் தெரு, ரங்கராஜ புரம் உள்ளிட்ட தெருக்களில் பெரிதாகப் பிரச்சனை இல்லை. ஆனால் ஆற்றை ஒட்டி வசிக்கும் மக்கள் அனைவருமே கூலி வேலை செய்கிறவர்கள்தான்.
சுமார் 350 குடும்பங்கள் இங்கே பாதிக்கப்பட்டிருக்கின்றன. முக்கால்வாசிக் குடும்பங்களுக்கு எதுவுமே இல்லை. அவர்களின் இடிந்த குடிசைகள் முழுவதும் சாக்கடை நீரும், சேறுமே நிரம்பி இருக்கிறது. சின்ன இடத்தை நெருக்கி அந்தப்புறம் 4, இந்தப்புறம் 4 என, எட்டு வீடுகள் நெருக்கிக் கொண்டு நிற்கின்றன. குப்பைகளையும், சகதியையும், கழிவு நீரையும் அகற்றப் பெரும்பாடு பட வேண்டியதாக இருக்கிறது.
இங்கும் உணவுப் பொட்டலங்கள் கிடைக்கின்றன. ஆனால் கிடைத்தால் மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் உணவு கிடைக்கிறது. இல்லையென்றால் கிடைப்பதே இல்லை. எல்லோரும் பள்ளியில்தான் வசிக்கிறார்கள்.
எது கொடுத்தாலும் 350 இல்லையென்றால் நான் கொடுப்பதில்லை. ஒரு குடும்பத்துக்குக்கூட எதுவும் கிடைக்காமல் போய்விடக் கூடாது இல்லையா? ஒரு போர்வை கொடுத்தால் எப்படி ஒரு குடும்பத்துக்குப் போதும்? இந்தத் தெருவுக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டீர்களே என்கிறார்கள். நான்கு பேர் இருக்கிறார்களே? நான்கு பொருட்கள் தர வேண்டாமா?
இந்த 350 குடும்பங்களும் தலைநிமிர்ந்துவிட்டால் போதும். இப்போது சுத்தப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முடிந்துவிட்டால் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். அடுத்ததாக அவர்களுக்கு சமைப்பதற்கு மளிகை சாமான்களும், பாத்திரங்களும் தேவை. அதையும் சீக்கிரத்திலேயே வாங்கிக் கொடுத்துவிடுவோம்" என்கிறார் அனுராதா ஸ்ரீராம் நம்பிக்கைக் குரலோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT