Published : 12 Apr 2021 11:24 AM
Last Updated : 12 Apr 2021 11:24 AM

திரைப்படச்சோலை 22: சசிகுமார் வம்சம்

சிவகுமார்

1974 ஆகஸ்ட் 22-ம் தேதி காலை சென்னை வானொலி ‘சிவகுமாரும் அவர் மனைவியும் தீ விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார்கள்!’ என்று அறிவித்தது. ஓயாமல் எங்கள் வீட்டுக்குப் போன். பதில் சொல்லி மாளவில்லை. ஐந்து நிமிடங்களில் செய்தி முடிவதற்குள், நிலைய டைரக்டர் உள்ளே ஓடிவந்து ‘தவறுக்கு வருந்துகிறோம். அது ‘சிவகுமார்’ இல்லை ‘சசிகுமார்’ என்று திருத்தி வாசித்தார்.

வானொலி அறிவிப்பாளருக்கும் பொது அறிவு கொஞ்சம் இருக்க வேண்டும். நடப்பு உலகத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று புரியவைத்த நிகழ்ச்சி. அந்த செய்தி வாசிப்பாளர்- சினிமா பார்க்கும் பழக்கமுள்ளவர் அல்ல. அதனால் சிவகுமார், சசிகுமார் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

செய்தி கேள்விப்பட்டு பதறியடித்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ஓடினேன். பொதுவாக தீ விபத்து என்றால் ஹீரோ தலையில் ஒரு கட்டு, கன்னத்தில் தீக்காயம், கையில் ஒரு பேண்டேஜ் இப்படித்தானே படத்தில் காட்டுவார்கள். ஆகவே, தைரியமாகப் போனேன்.

தீ விபத்துக்கான வார்டில் 6 அடி வாழை இலையில் ஒரு உருவம், தலைமுடி, புருவம், கைகால் முடி எல்லாம் எரிந்து போய், மேல் தோல் தீயில் எரிந்து, தண்ணீர் பட்டதால் உரிந்து, ஏர்கூலர் காற்றில், படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த உடம்புக்குச் சொந்தக்காரன் என் அன்புக்குரிய தம்பி நடிகர் சசிகுமார். ஒரு கணம் இதயம் நின்றுவிட்டது. கண்களும் ஒழுகிப் போனதால் பார்வை இல்லை. மூளையில் மட்டும் எந்த பாதிப்பும் அவருக்கு இல்லை. நினைவாற்றல் 100 சதவீதம் முழுமையாக இருந்தது.

சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்றப்போய் கட்டி அணைக்க, இவர் உடம்பிலும் தீ பற்றி மளமளவென்று எரிய, பக்கத்திலிருந்த பாத்ரூமுக்குள் நுழைந்து ‘ஷவரை’த் திறந்துவிட்டு, முழுசாக உடம்பைக் குளிப்பாட்டினார். தீக்காயங்கள் மீது தண்ணீர் பட்டதும் தோல் உரிந்துவிட்டது.

‘ஏனப்பா இப்படி செய்தாய் என்று கேட்டேன். ‘நான் ராணுவத்தில் இருந்தவன். தீ உடம்பு முழுக்க பற்றிக் கொண்டால் தண்ணீர் மேலே ஊற்றி அணைக்க வேண்டும். இல்லாவிட்டால் முழு உடலும் எரிந்து போகும்!’ என்றான் சசி.

எங்கள் திருமண வரவேற்பில்

அன்றைய தினம் எனக்கு எங்கே ஷூட்டிங், யார் உடன் நடிக்கிறார்கள் என்று, வெந்துபோன உடம்புடன் வேதனையை வெளிப்படுத்தாமல் கேட்டான்.

60 வயது தாண்டிய நாடக நடிகர் சேஷாத்திரி, சசியின் கோலத்தைப் பார்த்த அதிர்ச்சியில் தரையில் சாய்ந்துவிட்டார். பாக்கெட்டில் வைத்திருந்த மாத்திரையை எடுத்து அவர் வாயில் போட்டுக் காப்பாற்றினேன்.

அரசியலில் காமராஜரையும், சினிமாவில் சிவாஜியையும் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு சிவாஜி மன்றங்களின் கூட்டங்களில் அவ்வப்போது போய் பேசுவார் சசிகுமார்.

விபத்துச் செய்தியை சிவாஜிக்கு உடனே தெரிவிக்க முடியவில்லை. செல்போன் வசதியெல்லாம் அப்போது கிடையாது. அவர் சென்னையிலிருந்து அந்தக் கால ரோட்டில் காரில் தஞ்சை தாண்டி சூரக்கோட்டை பண்ணைக்கு மாலைதான் போய்ச் சேர்ந்தார். இரவுதான் அவருக்குச் செய்தி எட்டியது.

பெற்றோருடன் சசிகுமார் குடும்பம்

அதற்குள் எம்ஜிஆர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிற்பகல் சென்று சசிகுமாரைச் சந்தித்தார். கண்களை இழந்த நிலையிலும் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘‘சார்! பல மேடைகளில் உங்களைப் பத்தி மோசமா பேசியிருக்கேன். என்னை மன்னிப்பீர்களா சார்!’’ என்று கலங்கினார். ஆனால், எம்ஜிஆரோ, ‘‘எத்தனை லட்சம் செலவானாலும் உன்னை நான் காப்பாற்றுகிறேன். நீ தைரியமாக இரு!’’ என்று ஆறுதல் கூறிவிட்டுப் போனார்.

அந்த மாவீரன் ராணுவத்தில் லெஃப்டினன்டாக இருந்ததால், உயிர் விடும் முன், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று கம்பீரமாகக் கூறி சிதைந்த கரங்களில் சல்யூட் அடித்தபோது சுற்றியிருந்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். 8 வயது மகளையும், 6 வயது மகனையும் தவிக்க விட்டுப் பெற்றோர் இருவரும் மறைந்துவிட்டனர்.

மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு சிவாஜி வந்து சேர -சசிகுமார் தம்பதி உடல்கள் நடிகர் சங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. கலைஞர்கள் அனைவரும் மரியாதை செய்த பின் மாலை 4 மணிக்கு கண்ணம்மா பேட்டை மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது.

17 ஆண்டுகள் பறந்துவிட்டன. ஒரு நாள் ‘சார், சசிகுமார் மகள் நந்தினிக்கு கல்யாணம். நீங்க அவசியம் வரணும்!’ என்று அழைப்பிதழ் கொடுத்துப் போனார்கள். காலத்தின் கருணையை எண்ணி ஒரு கணம் மெய் சிலிர்த்தேன்.

சசிகுமார் மகள் நந்தினி திருமணம்

திருமணம் 1991, ஜூன் மாதம் 14-ம் தேதி. அடையாறு, பெசன்ட் நகர் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்றது. வாசலில், பாண்டிச்சேரி அரவிந்தர் போல கருப்பும் வெள்ளையுமான தாடியுடன், நடுவகிடு எடுத்து வாரி விட்ட தலைமுடியுடன் கிறித்தவப் பாதிரியார் அங்கி போல நீண்ட கதர் உடை அணிந்து, கையில் ஒரு குறிப்பு நோட்டு, பேனாவுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

சசிகுமாரின் அப்பா என்று அறிமுகம் செய்தார்கள். வணக்கம் சொன்னேன். பதில் வணக்கம் சொல்லிவிட்டு நோட்டில் ஏதோ எழுதி என்னிடம் காட்டினார். ‘இறந்துபோன என் மகன் சசியைப் பார்ப்பது போல் மகிழ்கிறேன்!’ என்று எழுதியிருந்தது. படித்துவிட்டு அவர் முகத்தைப் பார்த்தேன். முட்டைக்கண்கள். நீரைக் கோர்த்து நின்றன. ‘ஏன் பேச மாட்டீர்களா?’ என்று கேட்டேன். ‘பேசுவதில் பயனில்லை!’ என்று எழுதிக் காட்டினார்.

விசாரித்ததில் சுமார் 16 ஆண்டுகளாக மெளன விரதம் அனுஷ்டிக்கும் இந்தி, தமிழ்ப் பண்டிதர் என்று கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டேன்.

மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பினேன். அடுத்த 4 ஆண்டுகளில் 1994 மே 16-ம் தேதி சசிகுமார் மகன் விஜயசாரதி-சுரேகா திருமணம் வளசரவாக்கத்தில் நடைபெற்றது. முகூர்த்த நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. பகல் உணவு வேளை மண்டபத்துள் நுழைகிறேன். மெளனசாமி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் இலையில் இருந்த பொறியலை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். ‘ம்..ம்..வ்..வ்..!’ என்று முனகினாரே தவிர வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

சசிகுமார் அப்பாவுடன்

அடுத்து 21 ஆண்டுகள் பறந்தன. 2021, மார்ச் மாதம் 3-ம் தேதி. தி.நகர். ஹபிபுல்லா சாலை, எஸ்ஜிஎஸ் சபா மண்டபத்தில் சசிகுமார் மகள் துர்கேஷ் நந்தினி -சுப்பிரமணியம் தம்பதி மகன் ஆதித்யா -ராஷ்மிகா திருமணம் நடைபெற்றது. என் பேரன் திருமணத்தில் கலந்துகொண்ட உணர்வுடன் மணமக்களை வாழ்த்தி வந்தேன்.

ஒரு சக கலைஞன் மறைந்த பிறகு அவன் வாழ்க்கையில் நடந்த நான்கு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்.

இதில் நான்கு தலைமுறையின் வாழ்க்கை நதி போல் ஓடுகிறது.

கும்பகோணம் ராதாகிருஷ்ணன் -சாவித்திரி தம்பதிக்கு 1944-ல் பிறந்தவர் சசிகுமார். என்னை விட 3 வயது சிறியவர். இந்தி பண்டிட் ராதாகிருஷ்ணன் ஆன்மிகவாதியும் கூட. இவரது தந்தை -சசி தாத்தா -தட்சணாமூர்த்தி கும்பகோணத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர். அவரது மனைவி -சசியின் பாட்டி- கோகிலாம்பாள் இசைக்கலைஞர். கதாகாலட்சேபம் செய்வதில் வல்லவர்.

ராதாகிருஷ்ணன் சிறுவயது முதல் சுதந்திர வேட்கையுடன் கதர் உடை அணிந்து போராட்டங்களில் கலந்துகொள்வார். இந்தி மொழியினை சுயமாகக் கற்று பரீட்சைகளில் தேறி, இந்தி பண்டிட்டாக, திருச்சி குடிபெயர்ந்தபோது, நேஷனல் ஹைஸ்கூலில் வேலை பார்த்தார்.

ராமகிருஷ்ண மடம், திருப்பராயத்துறை மடங்களில் ஆன்மிக உரை நிகழ்த்துவார். சமஸ்கிருதம், உருது கற்றுக் கொண்டு சீடர்களுக்கு போதித்தார். இந்தி எதிர்ப்பு வலுத்து பள்ளிகளில் இந்தி பாடமாக நடத்த முடியாத போது பி.டி. முடித்து தமிழ்ப் பண்டிதராக வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். எப்படியோ மெளன விரதம் இவரைக் கவர்ந்து 16 ஆண்டுகள் தொடர் மெளன விரதம் அனுஷ்டித்தவர் மனைவி இறந்த போதும், பாசத்திற்குரிய மகன் சசிகுமார் இறந்தபோதும் மெளன விரதத்தை முடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.

சசிகுமார் மகன் விஜயசாரதி திருமணம்

திடீரென்று ஒரு நாள் பூஜை அறையிலிருந்து ‘ஓம்.. ஓம்..!’ என்று குரல் ஒலிக்க ஆரம்பித்து, வரிசையாக ஸ்லோகங்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். நீண்டகால மெளனத்தில் குரல் எழாமல் ஊமையாகப் போகக்கூட வாய்ப்பிருந்தது. ஆனால், இவர் கணீர் குரலில் பாட ஆரம்பித்தது -உடல் மனம் இரண்டும் தவ நிலையில் உரமேறி இருந்திருக்கிறது என்பதைச் சொல்கிறது.

கடைசி சில ஆண்டுகளில் பேத்தி நந்தினி -பேரன் விஜயசாரதிக்கு லலிதா சகஸ்ரநாமம், பகவத்கீதை ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுத்தாராம்.

விஜயகுமார் என்று வீட்டில் வைத்த பெயருடன் வளர்ந்த சசிகுமார், 6 வயதிலேயே திருக்குறளை மனப்பாடம் செய்து அருவி போல் கொட்டுவாராம். இதைப் பார்த்த பெரியார் ஈவெரா, ஒருநாள் உன் பேர் என்னடா என்று கேட்க விஜயகுமார் என்று சிறுவன் சொன்னானாம். அது சமஸ்கிருதப்பெயர். வெற்றிச் செல்வன் என்று வைத்துக் கொள் என்றாராம் பெரியார். ராணுவத்தில் மட்டுமல்ல பாஸ்போர்ட்டிலும் வெற்றிச்செல்வன் பெயர்தான் உள்ளது.

திருச்சி நேஷனல் காலேஜில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்தவர். 3-ம் ஆண்டு படிக்கும்போதே ராணுவத்தில் சேர்ந்து செகண்ட் லெப்டினென்ட் ஆக பதவி ஏற்றார். படிப்பு முடிந்து தேர்வு எழுதி லெஃப்டினன்ட் ஆகி, பாட்டியாலா சென்றார்.

சைனா போரின்போது பட்டன் டேங்க் பிரிவின் தலைமைப் பொறுப்பு ஏற்று, யுத்தத்தில் டாங்கிகளைப் பயன்படுத்தாமல் வீரர்களைக் கொண்டே விரட்டி அடித்ததற்கு ஜனாதிபதி வீரப்பதக்கம் பெற்றார். ஒரு கட்டத்தில் ராணுவப் பணியிலிருந்து விடுபட்டு சென்னை வந்து சசிகலாவை மணந்து கலைத்துறையில் கவனம் செலுத்தினார்.

சசி பேரன்- நந்தினி மகன் ஆதித்யா திருமணம்

மனைவி பெயர் சசிகலாவில் முதல் இரண்டு எழுத்து ப்ளஸ் விஜயகுமாரில் கடைசி 3 எழுத்தை இணைத்து சசிகுமார் என்று பெயர் வைத்துக் கொண்டார்.

'திருமலை தென்குமரி', 'அரங்கேற்றம்', 'சூதாட்டம்', 'பணத்துக்காக' ஆகிய படங்களில் என்னோடு நடித்தார் பாசம் மிக்க தம்பியாக விளங்கினார். காமராஜர் பக்தரான அவர் அரசியல் கூட்டத்துக்குத் தயாரானபோது அகால மரணத்தைத் தழுவிவிட்டார்.

மகள் நந்தினி -ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ. சமூகவியல் படித்து அங்கேயே லெக்சரராக இருந்தவர். யுனிவர்சிட்டி ரேங்க் எடுத்து தங்க மெடல் வாங்கியவர். நந்தினி- சுப்பிரமணியம் மகன் ஆதித்யா உலகப் புகழ் பெற்ற ஏர்னஸ்ட் அண்ட் யங் ஆடிட் நிறுவனத்தில் பணி. கணவர் சுப்ரமணியம் டி.வி.எஸ் நிறுவனத்திலும் பின்னர் கிஸ்ஸான், மிட்சுபிஸி, வோல்வோ கார் கம்பெனிகளில் ஜெனரல் மேனேஜராகவும் பணிபுரிந்த லயோலா எம்பிஏ பட்டதாரி.

விஜயசாரதி எம்எஸ்சி விலங்கியல் பிரிவு பட்டதாரி. ஜேஜே டிவி தொடக்கத்தில் அறிவிப்பாளராகி, சன் டிவி மர்மதேசம் தொடரில் நடிகராகவும் மாறியவர். விஜயசாரதி மகன் சஷாங் ஹோட்டல் மானேஜ்மென்ட் அகில உலகத் தரத்தில் விருந்தோம்பல் வழங்க படித்திருக்கிறார்.

விஜயசாரதி மேலும் 55 டிவி நாடகங்கள், 6,7 சினிமாவில் நடிப்பு, உலகம் சுற்றி 14 நாடுகளின் வரலாற்றை 580 எபிசோடுகள், 11 வருடங்கள் உழைத்துப் பதிவு செய்தார்.

சன்டிவியில் சேனல் தலைமைப் பயிற்சி எடுத்தார். கொஞ்ச காலம் இலங்கை சக்தி டிவியில் பணி. இப்போது தனியாக ஒரு சேனல் அங்கே தொடங்கி நடத்த உள்ளார். வேரோடு மரம் சாய்ந்துவிட்டாலும் எப்படியோ விதைகள் வழியாக வம்சம் தழைக்கவே செய்கிறது. காலம் விசித்திரமானது.

---

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x