Published : 07 Dec 2015 10:04 AM
Last Updated : 07 Dec 2015 10:04 AM
சுதந்திரப் போராட்ட வீரரும், ‘டைகர்’ ஜதீன் என்று அழைக்கப்பட்டவருமான ஜதீந்திரநாத் முகர்ஜி (Jatindranath Mukherjee) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l தற்போதைய வங்கதேசத்தின் நாதியா மாவட்டம் காயாகிராம் கிராமத்தில் (1879) பிறந்தார். இவருக்கு 5 வயது இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். அம்மாவுடன் தாத்தா வீட்டில் வளர்ந்தார். அன்பு காட்டுவதோடு, கண்டிப்புடனும் குழந்தைகளை வளர்த்தார் அம்மா.
l துணிச்சல் மிக்கவராக வளர்ந்து வந்தார் ஜதீன். இளம்பருவத்தில் ஒருமுறை கோடுய் நதிக்கரையில் புதரில் மறைந்திருந்த புலி ஒன்று இவர் மீது பாய்ந்தது. சிறு கத்தியை மட்டும் வைத்திருந்த இவர் 20 நிமிடங்கள் போராடி அதைக் கொன்றார். புலி கடித்த காலை வெட்ட வேண்டும் என்று மருத்துவர் கூறிய ஆலோசனை யைப் புறக்கணித்து தன் மனோபலத்தால் குணமடைந்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு ‘பாகா ஜதீன்’ (டைகர் ஜதீன்) என்று அழைக்கப்பட்டார்.
l மல்யுத்தம், நீச்சல், குதிரை ஏற்றத்தில் பயிற்சி பெற்றார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக புரட்சிகரமான செயல்களை செய்துவந்த ‘யுகாந்தர்’ அமைப்புக்குத் தலைவராக செயல்பட்டார்.
l அந்த கிராமத்தில் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்களிடம் சுதந்திரக் கனலை மூட்டி, பல படைப்புகள் உருவாகச் செய்தார். மற்றவர்களுக்கு உதவும் தன்மையும், கலகலப்பான இயல்பும் கொண்டவர். ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் உதவினார்.
l கல்கத்தா மத்திய கல்லூரியில் (தற்போதைய குதிராம் போஸ் கல்லூரி) சேர்ந்தார். ராஷ்பிகாரி போஸ் உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுக்கள், கதர் கட்சி வீரர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார்.
l சுவாமி விவேகானந்தரை அடிக்கடி சந்தித்தார். அரசியல் ரீதியில் சுதந்திரமான இந்தியா மற்றும் மனித குலத்தின் ஆன்மிக வளர்ச்சி குறித்த அவரது சிந்தனைகள் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
l அரவிந்தரின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்து அவரது வலதுகரமாக செயல்பட்டார். அனுஷீலன் சமிதி என்ற புரட்சி இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். பரிந்தா கோஷுடன் இணைந்து வெடிகுண்டு தொழிற்சாலையை உருவாக்கினார். ஆங்கிலக் கல்விமுறையால் வெறுத்துப்போய், படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
l ஒருமுறை டார்ஜிலிங் நகருக்கு ரயிலில் சென்றார். அப்போது தாகத்தால் தவித்த முதியவருக்கு தண்ணீர் கொடுத்தார். அருகே இருந்த ஆங்கில ராணுவ அதிகாரி மீது தண்ணீர் சிந்தியதால், இவரை அந்த அதிகாரி தடியால் அடித்தார். அவரையும் அவருக்கு ஆதரவாக வந்த 3 அதிகாரிகளையும் அடித்து நொறுக்கினார். இதனால், கைது செய்யப்பட்டார்.
l ஜதீன் மீது வழக்கு தொடரப்பட்டது. 4 ஆங்கில ராணுவ அதிகாரிகளை ஒரே ஒரு இந்திய இளைஞன் அடித்து நொறுக்கிய செய்தி வெளியே தெரிந்தால் இந்தியர்களுக்குத் துணிவும் தன்னம்பிக்கையும், ஆங்கிலேயர்களுக்கு அவமானமும் ஏற்படும் என்பதால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஆங்கிலேய நீதிபதி.
l l ஆங்கில அரசுக்கு எதிராக பல்வேறு புரட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த ஜதீந்திரநாத் முகர்ஜி, 1915-ல் நடந்த ஒரு மோதலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். 36-வது வயதில் வீரமரணம் எய்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT