Published : 12 Dec 2015 06:27 PM
Last Updated : 12 Dec 2015 06:27 PM
பேசும்போதே குரல் நடுங்குகிறது ஜெயா ராமகிருஷ்ணனுக்கு. 77 வயது என்பது அவர் சொல்லித்தான் நமக்குத் தெரிகிறது. அந்த வயதிலும் அத்தனை சுறுசுறுப்பாக இயங்குகிறார்.
அபிராமபுரம், நான்காவது தெருவில் வசிக்கும் ஜெயாம்மா, கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ந்து முகாமுக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்திறங்கும் பொருட்களைப் பிரித்து அடுக்குவது, நிவாரணப் பொருட்களை வாங்கி வைப்பது போன்றவற்றைத் தொடர்ந்து செய்த வண்ணம் இருக்கிறார்.
வீட்டில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டேன்.
"வயசானாலும், என் வீட்டுக்காரர் தனியா சமாளிச்சுக்கறார். அதனால்தான், அவரை விட்டுட்டு என்னால தினமும் இங்கே வர முடியுது. அத்தோட பெட்ரோல் போட்டு வண்டியையும் அனுப்பறார். ஏதோ எங்களால முடிஞ்ச உதவி.
சின்ன வயசுல இருந்தே எனக்கு சமூக சேவையில் ஈடுபாடு அதிகம். நான் மேடவாக்கம், பெரும்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மூன்று கிராமங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கல்வி கத்துக் கொடுக்கிறேன். சுயதொழில் கற்றுக் கொடுப்பது, கைவினைக்கலைகளைக் கற்பிப்பதும் நடக்குது. 13 வருஷமா வீனஸ் காலனியில் உள்ள மக்களுக்கு விலை கம்மியா மருந்துகளை விற்பனை செய்யறேன்.
இப்போ இங்க நிவாரண மையத்துல, மக்கள் அனுப்பற துணிகள முறையாப் பிரிச்சு அடுக்கும் வேலையச் செய்யறேன். தன்னார்வலர்கள் கொண்டு வந்து கொடுக்கற பொருட்கள் வாரியாப் பிரிச்சு, அடுக்கறேன். எப்போதும் எதையாவது செஞ்சுட்டே இருப்பேன். இந்த மாதிரி வேலை செய்யறதாலயோ என்னமோ, ஆண்டவன் அருளால இந்த வயசுலயும் சுறுசுறுப்பா இருக்கேன். உங்களை மாதிரி இளைஞர்கள் கூட சேர்ந்து வேலை பாக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”
சொல்லும் ஜெயாம்மாவின் குரலில் அத்தனை மகிழ்ச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT